Saturday, June 28, 2014

இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறைக்கு வயது 100!

வேலைக்குச் சென்ற அப்பா கலவரம் பரவுவதாக செய்தி அறிந்து ஓடிவந்தார். பள்ளிக்குச் சென்ற அண்ணாவை அழைத்துவர பாடசாலைக்கு ஓடினார். அவரவர் பிள்ளைகளை அழைத்துச் செல்ல தாய்மாரும் தந்தையரும் பயப் பீதியில் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தனர். அண்ணாவை அழைத்து வந்ததும் எங்கள் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்அயல் வீட்டுச் சிங்களவர். தங்கள் வீட்டை தாள் இட்டு பூட்டி எங்களை ஒழித்து வைத்தனர். அருகில் இருந்த எங்களது வீடு தீயிட்டு கொழுத்தப்பட்டது. அங்குள்ள பல வீடுகள் வியாபாரங்கள் தீக்கிரையானது. நாங்கள் ஒழிந்திருந்த வீட்டையும் காடையர்கள் வந்து தட்டினர் தமிழர்களை ஒழிந்து வைத்திருக்கிறீர்களா என்று கூச்சலிட்டு கத்தி விட்டுச் சென்றனர். நாங்கள் கட்டிலுக்குக் கீழ் ஒழிந்திருந்தோம். பின்னர் மனிதாபிமானமிக்க பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் ஜீப்பைக் கொண்டு வந்து எங்களை ஏற்றிக் கொண்டு அகதிமுகாம் நோக்கிச் சென்றார். காடையர்கள் பொலிஸ் ஜீப்பையும் விட்டு வைக்கவில்லை. அதனைக் கலைத்தனர். பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைக் கலைத்தார். நாங்கள் பாதுகாப்பாக அகதிமுகாம் வந்து அங்குள்ள நூற்றுக்கணக்காணவர்களுடன் இணைந்துகொண்டோம்.

இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் அழுத்கமவில் நடைபெறவில்லை. 37 ஆண்டுகளுக்கு முன் அனுராதபுரத்தில் எனக்கு ஆறு வயது இருக்கும் போது இடம்பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிராக ஜே ஆர் அரசு கட்டவிழ்த்துவிட்ட கலவரம். இவ்வாறான இனக் கலவரங்கள் இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. 1915இல் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தின் 100வது ஆண்டு அண்மித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பழைய வரலாற்றை து}சி தட்டிப் போட்டுள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே சிங்கள பெளத்த இனவாதத்தை கக்கிய அநாகரிக தர்மபாலா 1915.ல் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரத்தை து}ண்டிவிட்டார்.

இநாகரிக தர்மபாலாவின் பேச்சுக்களில் இருந்து: இப்போது துவசம் செய்வதற்கு முன்பாக பிரகாசமான அழகிய தீவு சிங்கள ஆரியர்களால் சொர்க்கபுரியாக்கப்பட்டது. அந்த மக்களுக்கு மதமில்லாமை தெரியாது. மிருகக்கொலை, களவெடுப்பது, பொய்சொல்வது, விபச்சாரம், மது அருந்துவது போன்ற தீங்குகளுக்கு கிறிஸ்தவமும் இந்துத்துவமுமே பொறுப்பு. மதநம்பிக்கையற்ற அரக்கர்கள் வரலாற்று ரீதியாக உன்னதமான மக்களை மெல்ல மெல்ல இல்லாமல் செய்து வருகிறார்கள்.

மொகம்மதீயன்களும் எங்கிருந்தோ வந்தவர்களும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து யூதர்களைப் போல செல்வச் செழிப்புடன் வருகிறார்கள். 2358 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக்கொண்ட இந்த மண்ணின் சிங்கள மைந்தர்கள், வேற்று உலகத்தினரிடமிருந்து இந்த நாட்டைக் காக்க ஆறாக குருதியைச் சிந்தி இருக்கிறார்கள். ஆனால் பிரித்தானியருடைய பார்வையில் இவர்கள் வீடற்றவர்களாகவும், வேலையற்றவர்களாகவும் பரதேசிகளாகத் தெரிகின்றனர். தென்னிந்தியாவிலும் எங்கிருந்தெல்லாமோ வந்த மொகம்மதீயர்கள் எங்கள் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களில் வியாபாரம் என்னவென்று தெரியாதவர்களை காண்கிறார்கள். இதன் விளைவாக மொகமதீயர்கள் செல்வம் ஈட்டுகின்றனர். மண்ணின் மைந்தர்கள் சுவரோடு முட்டி மோதி வீழ்கின்றனர்.என்றும் பேசியுள்ளார்.

கலகொட அத்தே ஞானசாரா அண்மையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்,”இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றதுஇ இன்று ஒரு மரக்கலயா (சிங்கள பேச்சு வழக்கில் முஸ்லீம்களைக் குறிப்பது) அல்லது பறையா (சிங்கள பேச்சு வழக்கில் தமிழர்களைக் குறிப்பது) ஒரு சிங்களவனை தொட்டாலும் ……… அதுவே அவர்களுடைய முடிவாகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக அநாகரிக தர்மபால நாகரீகமாக ஆற்றிய உரைக்கும் பெளத்த பல சேனாவின் கலகொட அத்தே ஞானசார சிலதினங்களுக்கு முன் அழுத்கமவில் அநாகரீகமாக ஆற்றிய உரையும் அடிப்படையில் ஒரேமாதிரியான போக்குடையவை.

பெளத்த பயங்கரவாதத்தின் முகம் என ரைம்ஸ் சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்ட பர்மாவில் முஸ்லீம் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிரான வன்முறையை முன்னெடுத்த அஸ்ஹின் விரது தேரோவை ஞானசார சென்று சந்தித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். விரது ஞானசார கூட்டு தெற்காசியாவில் இனவாத பெளத்தத்தை பலப்படுதும் நீண்டகால நோக்கத்தைக் கொண்டுள்ளது.

தற்போது ராஜபக்ச அரசுக்கு நெருககமான பெளத்த பல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் மிகவும் கட்டுப்பட்டுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியில் மட்டுமே தங்கியுள்ள தற்போதைய அரசுக்கு இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட இனக்கலவரங்கள் உடனடி விளைவாக வாக்கு வங்கியை நிரப்ப உதவலாம். ஆனால் இவ்வாறான சம்பவங்கள் மிக மோசமாக கட்டுக்கடங்காமல் செல்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. அதன் விளைவுகள் வாக்கு வங்கியை மிக மோசமாக பாதிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. விரது ஞானசார கூட்டு ஆளும் அரசின் வாக்கு வங்கிக்கு அப்பாலும் தனது நலன்களைக் கொண்டுள்ளது.
அண்மைய முஸ்லீம் களுக்கு எதிரான வன்செயல்களில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர், 150 பேர் காயமடைந்து உள்ளனர், 580 கட்டிடங்கள் எரிக்கப்பட்டு உள்ளது, அவற்றில் 150 வீடுகள், 17 பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டு உள்ளது, 2450 பேர் அகதிகளாகி உள்ளனர் என முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மொகமட் அஸ்லம் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அயலில் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்குப் பெயர்போன நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்துள்ளார். மத்திய கிழக்கில் முஸ்லீம் மதப் பிரிவினரிடையே உள்ள முரண்பாடுகள் உள்நாட்டு யுத்தமாகி உள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் சுனி முஸ்லீம் பிரிவினர். இன்று சர்வதேச நாடுகளால் ஆட்சியில் ஏற்றப்பட்டவர்கள் ஷியா முஸ்லீம் பிரிவினர். சர்வதேசம் பயங்கரவாதமாகப் பார்க்கின்ற நாளாந்த செய்திகளில் தலைப்புச் செய்தியாக சுனி பிரிவைச் சேர்ந்த ஜிகாதிகள் மாறியுள்ளனர். சுனி ஜிகாதிகளுக்கு எதிரான போரில் தற்போது ஈரானும் சர்வதேசத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இவற்றின் பின்னணியில் இலங்கை முஸ்லீம் ஒருவர் பாகிஸ்தானில் பயிற்றப்பட்ட ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது போன்ற செய்திகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

இவற்றின் பின்னணியிலேயே இலங்கையில் முஸ்லீம் களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் இத்துடன் நிண்றுவிடப் போவதில்லை. இனவாத பெளத்தத்தை நிர்ணயிக்கும் உறுதிப்படுததும் போக்கின் ஒரு அங்கமே.
இதனைப் புரிந்துகொள்வதும் தெரிந்து வைத்திருப்பதும் போதுமானதல்ல. இதனை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாம் பல்வேறு இனக்கலவரங்களைக் கண்டு வந்தவர்கள். ஆனாலும் இந்தக் குறுகிய அளவான இனவாதிகளுக்கு எதிரான பலமான சேனை ஒன்றைக் கட்ட முடியாதவர்களாக உள்ளோம். காலத்துக்குக் காலம் இனக்கலவரங்கள் வரும்போது தேர்தல் காலத்துக்கு முன்பாகவும் இனக்கலவரம் பற்றி பேசுபவர்கள் தேர்தலின் போது பச்சை இனவாதத்தை கக்குகின்றனர். இதற்கு சிங்கள> தமிழ்> முஸ்லீம் அரசியல் வாதிகள் விதிவலக்கல்ல.

வெறுமனே ஆட்சி மாற்றத்தையொட்டிய ஐக்கிய முன்னணி உருவாக்கம் அடிப்படையில் உள்ள பிரச்சினைக்கு தீர்வாகாது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன் அடிப்படையில் மிகப் பலமான ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த ஐக்கிய முன்னணி இவ்வாறான இனவாத சக்திகளுக்கு எதிராகவும் மக்கள்விரோத சட்டதிட்டங்களுக்கு எதிராகவும் தீவிரமாகச் செயற்பட வேண்டும். இன, மத, அரசியல் பேதங்களைக் கடந்த இந்த ஐக்கிய முன்னணியானது நாட்டின் மக்களின் நலனைக் கண்காணிக்கின்ற அமைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு எதிர்கொள்ளல் செயன்முறையில்லாமல் தனித்தனி சம்பவங்களாக இவ்வாறான கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

இலங்கையில் உள்ள நான்கு இனக்குழுமங்கள் மத்தியிலும் ஆழமான இன உணர்வுகள் இருந்த போதும் இனக்கலவரங்களின் போது பொதுமக்கள்தங்களை ஈடுபடுத்தியது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. பாதிக்கப்பட்டவர்களிலும் பார்க்க பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆகவே இந்த மானிடப் பண்பை முதலீடாகக் கொண்டு இன ஐக்கியத்துக்கான மக்கள் பல சேனா ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சிங்கள பெளத்த மக்கள் தங்கள் மீது வீசப்பட்ட இனவாதச் சேற்றை கழுவிக்கொண்டிருக்கையில் சிங்கள பெளத்த இனவாதிகளால் மீண்டும் அவர்கள் மீது இனவாதச் சேற்றை வாரி இறைத்துள்ளனர். ஆறுமுகநாவலரை வைத்துக் கொண்டு தமிழர்கள்- சைவர்கள் எப்படி சாதியத்தை இல்லாமல் ஒழிக்க முடியாது> அவ்வாறே சிங்களவர்கள் பெளத்தர்கள் அநாகரிக தர்மபாலாவை வைத்துக்கொண்டு பெளத்த விரோத சிந்தனைகளை ஒழிக்க முடியாது. தள்டுவே சோமராம (எஸ் டபிள்யு ஆர்டி பண்டாரநாயக்காவை படுகொலை செய்த பிக்கு), கொலன்னாவே சுமங்கள தேரோ (ஜாதிக ஹெல உருமய ஸ்தாபகர்) கொட்டுஹல ஞானசாரா போன்றவர்கள் அநாகரிக தர்மபாலவின் சிந்தனைகளில் வளர்க்கப்பட்டவர்கள்.

இலங்கை மக்களை புத்தரோ, சிவபெருமானோ, யேசுவோ காப்பாற்றப் போவதில்லை. அப்படி அவர்கள் காப்பாற்றுவதாக இருந்தால் நாங்கள் இங்கு கூடியிருக்கத் தேவையில்லை. அந்த மக்களே தங்களைக் காப்பாற்ற
வேண்டும். அதற்காக அவர்கள் மனித நேயத்தின்

அடிப்படையில் ஒன்றுபட வேண்டும்.
நன்றி:
ஜெயபாலன் த |லண்டன்
தேசம் நெட்

Monday, June 16, 2014

இனவாதத் தீயில் கருகும் அளுத்கமயில் நடந்தது என்ன?

பிரச்சினையின் ஆரம்பம்.
கடந்த 12.06.2014 அன்று அளுத்கம பகுதியில் ஒரு பௌத்த பிக்குவை ஏற்றி வந்த வாகன சாரதிக்கும், முஸ்லிம் அன்பர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் பிக்குவை குறிப்பிட்ட முஸ்லிம் அன்பர் தாக்கிவிட்டதாக திசைதிருப்பப் பட்டு இனவாத முறுகல் நிலையினை தோற்றுவிப்பதற்கான சந்தர்ப்பமாக மாற்றப்படலானது. இதன் விளைவாக சுமார் 1000 நபரளவில் ஒன்று திரண்டு அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 2 முஸ்லிம்கள் போலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நேற்று (15.06.2014) நடந்தது என்ன?

12.06.2014 அன்று இடம்பெற்ற முறுகல் நிலையை பயன்படுத்தி, இனவாதத் தீயை மூட்டி முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்கில் பொது பல சேனாவினால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை அளுத்கமையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே ஊடகங்களுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டிருப்பினும், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும் இது போன்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை அரசு தரப்போ, அல்லது பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையிலும் இறங்காதது மட்டுமன்றி, 22  பொலிஸ் பிரிவுகளிலிருந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொலிஸ் காவலர்களை வைத்து இனவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியமை கண்டிக்கத்தக்க விடயமாகும். சமாதான சூழ்நிலை சீர்கெடுவதற்கு முன்பே சுதாகரித்து ஆர்ப்பாட்டத்தை தடைசெய்ய கடமைப்பட்டவர்கள் அதனை கண்டுகொள்ளாதுவிட்டமை ஏற்பட்ட விபரீதங்களுக்குப் பின்னணியில் மறைகரம் தொழிற்பட்டுள்ளது என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது.

அளுத்கமை அராஜகத்துக்கு அடிப்படையாய் அமைந்த ஞானசார தேரரின் ஆவேசப் பேச்சு.

இன்று ஏற்பட்ட பாரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமைந்தது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் இனவாதத்தை கக்கச் செய்த ஆவேசமான உரையே என்றால் மிகையாக மாட்டாது.
இவர் தனது உரையிலே பயன்படுத்திய எந்தவொரு மரக்கல முஸ்லிமாவது ஒரு சிங்களவன் மீதாவது கையை வைத்தால் அதுவே அவர்களது இறுதி முடிவுக்கு அடையாளம்“, “இந்த நாட்டிலே மரக்கல முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் உள்ளது. சிங்கள மக்களுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை“,அளுத்கமையில் இடம்பெற்றது ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகளின் தொடராகும்“, ”நாங்கள் இனவாதிகள் தான். மதவாதிகள் தான்”   என்பன போன்ற வாசகங்கள் பெரும்பான்மை மக்களின் அகங்களில் முஸ்லிம்கள் குறித்த வெறுப்புணர்வை வளர்ப்பதற்கும், முஸ்லிம்களை பலிவாங்க வேண்டும் என்ற உணர்வை நோக்கி சாய்வதற்கும் ஏதுவான காரணியாக அமைந்துவிட்டது எனலாம்.

இனவாத தாக்குதலை நோக்கிய ஊர்வலத்தின் நகர்வு.
அளுத்கமை தர்கா நகருக்கு மத்தியில் அமைந்துள்ள சீன வத்த பகுதியால் ஆர்ப்பாட்டக் காரர்கள் செல்லும் போது அங்கு பல வீடுகளுக்கு கல் வீச்சுகள் எறியப்பட்டன. அத்தோடு பள்ளிவாசலில் குழுமியிருந்த முஸ்லிம்களை கடந்து செல்கையில் ஆவேசமான வசனங்கள் முஸ்லிம்களை நோக்கி உச்சரிக்கப்பட்டவுடன் இரு தரப்பினருக்குமிடையில் கைகலப்பு வலுக்க ஆரம்பித்தது.

ஊரடங்குச் சட்டமும், சூரையாடப்பட்ட முஸ்லிம்களும்.
இரு தரப்பு கைகலப்பைத் தொடர்ந்து அதிகாரிகளினால் சுமார் 6.45 மணியளவில் அளுத்கமையை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து பள்ளியில் ஒன்று குழுமி இருந்த முஸ்லிம்களால் தங்கள் வீடுகளுக்குக் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பொதுபல சேனாவின் காடையர் கும்பல் ஆண்களில்லாத முஸ்லிம்களின் வீடுகளை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்திருக்க தீயிட்டுக் கொழுத்த ஆரம்பித்தனர். கல்லெறிந்து தாக்கத் துவங்கினர். கடைகளையும் பள்ளி வாசல்களையும் கூட தீயிட்டு கொழுத்தினர். பல முஸ்லிம்களை கூரிய ஆயதங்களால் வெட்டிச் சாய்த்தனர். அரச பின்புலத்து ஆதரவுடன் இடம்பெற்ற இவ்வினச்சுத்திகரிப்பு தாக்குதல் இவ்வாக்கம் எழுதப்படும் வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நாசம் விளைவிக்கப்பட்ட இடங்களும்,சொத்துக்களும்.

அளுத்கமை, தர்கா நகர், வெல்பிடிய, அதிகரிகொட, ஆகிய பகுதிகளில் இந்நிமிடம் வரை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. அளுத்கமை என்பது ஒரு பக்கம் ஆற்றையும், இதர மூன்று பக்கங்களும் சிங்கள கிராமங்களால் சூழப்பட்ட ஒரு பிரதேசமாகும். இப்பௌதீக அமைப்புக்குள் சிக்கிக் கொண்ட முஸ்லிம்களின் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் இது வரை அழிக்கப்பட்டுள்ளன. 10 க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எறிந்துள்ளன. அனுமாணிக்க முடியாதளவுக்கு வீடுகள் தாக்கப்பட்டு கொழுத்தப்பட்டுள்ளன. ஊர்ஜிதமான தகவலின் படி 3 க்கு மேற்பட்ட பள்ளிவாயல்கள் எறிக்கப்பட்டுள்ளன. பலர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது வரை மொத்தமாக 40 க்கும் மேற்பட்டவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெளிப்பிடிய பகுதியில் கலகக் காரர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி இது வரை 3 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.

அளுத்கமையிலிருந்து பேருவளையை நோக்கி நகர்த்தப்பட்ட இனவாதத் தீ.
அளுத்கமையில் ஆரம்பித்த இவ்வினவாத தாக்குதல் பேருவளையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தப்பட்டு, தற்போது பேருவளையும் அதன் அண்டிய பகுதிகளும் கூட இனவாதத் தீயில் கருகிக் கொண்டு உள்ளன.
குறிப்பாக பேருவளை அம்பேபிடிய எனும் பகுதியை அண்டிய இடங்களில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள் எல்லோரும் அங்கு அமைந்துள்ள ஜாமியா நளீமியா கலாபீடத்தி்ல தஞ்சமடைந்து உயிர் அச்சத்துடன் பதறிக்கொண்டு உள்ளனர். ஜாமியாவை சுற்றி காடையர்களின் வெறியாட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. முஸ்லிம்கள் அச்சத்துடனும் தங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் அற்ற நிலையிலும் பீதியுற்று நிற்கின்றனர்.

சிறைப்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்கள்.
இக்கலவர சூழ்நிலையை அவதாணிக்கும் பொருட்டு களத்திற்கு விறைந்த நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் மற்றும் ஜே.வீ.பி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக என்போர் பேருவளைக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி ஸிராஸ் நூர்தீன் போன்றவர்கள் ஜாமியாவுக்குள் இருந்து வெளியேற முடியா வண்ணம் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கைத் தாண்டிய கொலை வெறித் தாக்குதல்.
பேருவளையில் கருக்கொண்ட இனச்சுத்திகரிப்பை அடுத்து இரவு 8.45 மணியளவில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்த போதினிலும், காடையர்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பேருவளை ஓசேன்ட் கிறேண்ட் வறவேற்பு மண்டபம் தீயில் கருகியுள்ளது.

தெஹிவலையிலும் வலை பிண்ணல் தாக்குதலில் இனவாதிகள்.
தர்கா நகர், பேருவளை தாக்குதல் நடைபெறும் அதே சமயம் தெஹிவலை ஹார்கோட்ஸ்மருந்தகம் கூட இத்தாக்குதலின் விளைவாக எதிர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் கையில் ஆயுதம் வந்தது எப்படி?
சாதாரண ஆர்ப்பாட்டத்திற்குத் தான் இவர்கள் வந்திருப்பார்களேயானால் பள்ளிகளையும், வீடுகளையும், கடைதொகுதிகளையும் தாக்கி அழிக்கும் அளவுக்கு ஆயுதங்களுடன் வந்திருக்க சாத்தியமெ இல்லை. அப்படியிருக்க பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தி, சொத்துக்களை அழிக்கும் அளவுக்கு தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளத எனில் இது ஏலவே நன்கு திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு, அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது தெளிவாகிறது.

காடையர்களின் தாக்குதலும், காவல் துறையின் கண்டுகொள்ளாமையும்.
அத்துடன், இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் கண்ணெதிரே நடந்த போதும் அதனை தடுக்காததொடு, உரிய நேரத்தி்ல போதியளவு அதிகாரிகளை களத்தில் இறக்காமை போன்ற காவல் துறையினரின் நடவடிக்கைகள் யாவும் இத்தாக்குதல் குறித்த தகவல் முன்கூட்டியே உரிய உயர் பீடங்களுக்கு எத்தி வைக்கப்பட்டுத் தான் நடந்தேறியுள்ளதோ என்ற வலுவான ஐயத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.

எனவே இலங்கை முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி, பொருளாதாரத்தை சூரையாடி, உயிர்களை காவுகொண்டு முழுமையான இனச் சுத்திகரிப்புக்குண்டான களத்தை உருவாக்கும் இனவாதிகளின் அராஜகத்தை அரசு உடனடியாக தலையிட்டு தடுப்பதற்குண்டான வழிகளை முன்னெடுக்க வேண்டும்.
நன்றி:
www.berunews.wordpress.com

Sunday, June 15, 2014

முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறிக்குள்ளாக்கும் இனவாதம்

தனிமனித வாழ்வில் ஒரு நாளை கடப்பதற்கு மனிதன் எத்தனை வகைவகையான போராட்டங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கின்றான். இவ்வாறு தனிமனித வாழ்வு மூலம் துவங்கும் இப்போராட்டமானது தன் குடும்பம், சுழவுள்ள பிரதேசம், தொகுதி, மாவட்டம், மாகாணம், தேசியம் என படர்ந்து கொண்டு செல்கின்றது.

இவ்வாறு படரும் போராட்டத்தில் தனது இனத்தினையும், அதன் கலாச்சார விழுமியங்களையும் காத்துக் கொள்வதற்கு பங்கெடுக்க வேண்டிய நிலையும் மனிதனுக்கு ஏற்படுகின்றது. பலம் பெற்ற ஒரு மனிதன் தன்னைவிட பலம் குறைந்த மனிதனை தனது ஆளுகைக்குக் கீழ் வைத்துப் பார்க்க முனைவது புதுவிடயமாகப் பார்க்க வேண்டியதில்லை.

இலங்கையில் சிங்களவர்கள் பேரினமாகக் காணப்படுகின்றனர் என்பதை இதைப் பார்ப்போர்களுக்கு அழுத்தமாகக் கூறி புரியவைக்க முயல்வதெதற்கு? பெரும்பாண்மை என்பதால் நாட்டை ஆளும் வாய்ப்பை தொடர்ந்தும்  சிங்களவர்களே பெற்று வருகின்றார்கள்.

 இந்நாட்டில் சிங்களர்களுடன் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்தியத் தமிழர்கள், பேகர், மலே மற்றும் ஏனையோர்கள் என பல்லின சமூகங்களும் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் ஆட்சிக்கு இவ்வினங்கள் ஒவ்வொன்றும் தத்தமது ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டு வருகின்றன.

சிங்கள சமூகம் இந்நாட்டின் பேரினமாக திகழ்ந்தாலும்கூட பெரும்பாண்மை என்ற அதிகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கு சிங்களவர்கள் தவிர்ந்த ஏனைய இரண்டாம் மூன்றாம் பெரும்பாண்மையினரின் பங்கு மிக அவசியமாக இருக்கும். 

குறிப்பாக இரண்டாம் பெரும்பாண்மையினர்கள் தமது ஆதரவினை பெரும்பாண்மையினருக்கு வழங்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மூன்றாம் பெரும்பாண்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் இல்லாமல் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள முடியும்.

இலங்கை தொகை மதிப்பு திணைக்களத்தினால் கடந்த 2012 இல் வெளியிடப்பட்ட கணக்கின்படி இலங்கையில் மொத்த சனத்தொகையாக 20,263,723 ஆக காணப்படுகின்றது. இதில் மத ரீதியாக, சிங்களவர்கள் 14,222,844 ஆகவும் இந்துக்கள் 2,554,606 ஆகவும் இஸ்லாமியர்கள் 1,967,227 ஆகவும் றோமன் கத்தோலிக்கர்கள் 1,237,038 ஆகவும் கிறிஸ்தவர்கள் 272,568 ஆகவும் ஏனையார்கள் 9,440 ஆகவும் காணப்படுகின்றது. 

இதுதொடர்பான மேலதிக விபரங்களை  http://www.statistics.gov.lk/%20PopHouSat/CPH2012Visualization/htdocs/index.php?usecase=indicator&action=Map&indId=11 என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

1911 – 1981 வரையான காலப்பகுதியில் குடிசன புள்ளிவிபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மதரீதியான குடிசன அறிக்கை பின்வருமாறு காணப்படுகின்றது. 
இனம்                  1911      1953     1963     1971     1981
பௌத்தர்கள்      60.2     64.3      66.3     67.3     69.3
இந்துக்கள்            22.9     19.9      18.4     17.6     15.5
கிறிஸ்தவர்கள்    9.9      9.0        8.3      7.9      7.6
முஸ்லிம்கள்          6.9      6.7       6.9       7.1     7.5 ஏனையவர்கள்       0.1      0.1       0.1       0.1     0.1

என்ற வீதத்தில் காணப்பட்டது. இது தொடர்பான விரிவான புள்ளிவிபரங்களை சுகாதார நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 1996ல் வெளிடப்பட்ட இலங்கை சனத்தொகை புள்ளி விபரங்கள் என்னும் நூலில் பார்க்கலாம்.

நம் நாட்டில் கடந்த சில வருடங்களாக அரசுடன் இணைந்துள்ள இனவாதத்தின் மூலம் சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சில அமைச்சர்கள் முஸ்லிம் சமூக்கத்திற்கு எதிராக கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதையாய் விதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வினவாத விதைகள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவைகளாக இருக்கக்கூடும்.

இவ்வமைச்சர்களின் தொடராக பௌத்தமதத் துறவிகள் சிலரும் முஸ்லிம்கள் பற்றிய இனவாதக் கருத்துக்களை சிங்களவர்கள் மத்தியில் பகிரங்கமாக பரப்பி வருகின்றனர். இவ்வாறு இவர்களால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக அமைச்சரவையில் உள்ள சிங்கள அமைச்சர்களிடமிருந்தும், பௌத்த தேரர்களிடத்திலிருந்தும் எதிர்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு கருத்துக்களினால் வசைபாடிக் கொண்டிருந்த அவர்கள் காலப்போக்கில் சிங்கள ராவய, ஹெல உறுமய மற்றும் பொது பல சேனா என்பன போன்ற சிங்கள பெயர்களைத் தமக்குச் சூட்டிக் கொண்டு அமைப்பு ரீதியாக குழுவாக சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குவதற்கு பகிரங்கமாக துவங்கியுள்ளார்கள்.

 இலங்கையின் வரலாற்றிலேயே சிங்களவர்கள் கிராமங்களின் ஆட்சிக்காக கிராமப் பஞ்சாயத்துக்களை உருவாக்கினார்கள்.

இப்பஞ்சாயத்து முறைகள் விவசாயம் செய்யும் பொருட்டு கிராமங்களில் குடியேறிய மக்கள் மத்தியில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்காகவும், குளங்களுக்கு அனைக்கட்டுக்களை கட்டுவதற்காக மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும் ஒருவிதமான கிராமியச் சபைகளை உருவாக்கியிருந்தார்கள். இவற்றுக்கு திரிபே, கன்சபா என பெயரும் சூட்டினார்கள் என நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் முதலாம் பாகத்தில் 23ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக அமைப்புக்களை உருவாக்கி அச்சமூகம் பிளவுகளின்றி நீதியானதாச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் மக்கள் ஒன்று சேர்ந்து மக்களுக்குப் பயன்தரக்கூடிய பொது விடயங்களை செய்யவுமே புராதனகால இலங்கையில் மக்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்பது இதனூடாக தெளிவாகத் தெரிகின்றது.

ஆனால், இன்றைய சிங்கள கடும்போக்கு இனவாதிகள் சிலர், இலங்கையை தாய்நாடாகக் கொண்டுள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காகவும், நிந்திப்பதற்காகவும், துரத்துவதற்காகவும் குழுக்களாக சேர்ந்து கொண்டு பகிரங்கமான செயற்பாட்டில் ஈடுபடுவதென்பது சிங்கள மக்கள் மத்தியில் தம்மை ஹீரோக்களாக காட்டிக்கொள்ளவேயன்றி வேறில்லை எனலாம்.

மேலும் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் இவர்கள் கொண்டுள்ள தவறான புரிதல், இஸ்லாத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள காழ்ப்புனச்சி மற்றும் இஸ்லாத்தின் வளச்சி பற்றிய அச்சம் என்பவற்றைச் சொல்லலாம். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் இவர்கள் முஸ்லிம்கள்மீது கொண்டுள்ள பொறாமை எனவும் சொல்லலாம்.

சுமார் இருவருடங்களுக்கு முன்னர் பௌத்த கடும்போக்காளர்கள் என்ற அமைப்பினர் கொழும்பில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துள்ளன. இதனைக் கண்டிக்கும் வகையில் எதிர்வரும் 2012.12.22 சனிக்கிழமை பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் பௌத்த கடும்போக்காளர்கள் பாதயாத்திரிகை ஒன்றுக்கு பகிரங்க அழைப்பு விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள்.

அதேபோன்று இன்னுமொரு சிங்கள அமைப்பினர் இதே காலப்பகுதியில் கண்டி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் “2025 இல் இலங்கை சபகஸ்தானாகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை  வாங்குவோமா? என்ற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால்
(1) முஸ்லிம்களின் வளச்சி கண்டு அச்சம் கொண்டுள்ளமையும்
(2) முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை முடக்க வேண்டும் என்ற இரு கருத்துக்களுமே வெளிப்படையாக தெரிகின்றது.

புராதான இலங்கை வரலாறு கி.மு.543இல் விஜயனின் வருகையில் துவங்குகின்றது. இக்காலத்தில் துவங்கி கி.பி.1591 வரை இலங்கையை சுமார் 180 மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் அத்துடன் கண்டி அரசர்களாக இருந்த முதலாம் விமலதர்மசூரியன், செனரத், இரண்டாம் இராஜசிங்கன், இரண்டாம் விமலதர்மசூரியன், நரேந்திர சிங்கன், விஜய இராஜசிங்கன், கீர்த்தி சிறி, இராசாதி இராஜசிங்கன், சிறி விக்கிரம இராசசிங்கன் என 1815ம் ஆண்டுவரை ஆட்சி செய்த மன்னர்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் தலைவர்களாக இருந்த டீ.டிஸ். சேனாநாயக்க முதல் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2014 வரை ஆட்சி செய்த நாட்டின் அனைத்து மன்னர்களிலும் (சர்ச்சைக்குரிய பெயர்கள் தவிர்ந்த) முஸ்லிம் ஒரு பெயரை கொண்டு இலங்கையை ஆட்சி செய்ததாக வரலாற்றில் காணவில்லை என்பது இம்மன்னர்களின் பெயர்களிலிருந்தும் தெரிகின்றது.

அதேபோல் இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழித்து அதன்மூலம் முஸ்லிம்களின் பொருளாதார ரீதியான ஆதிக்கத்தைக் குறைத்துக் கொள்ள முடியும் என்ற தவறான கணிப்பினை இவர்கள் கொண்டு செயற்படுகின்றார்கள். இதுபோன்ற காரணங்களை காட்டி அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மேலும் வளர்த்துச் செல்லும் செயலில் ஈடுபடுகின்றார்கள்.

முஸ்லிம்களின் வளர்ச்சி கண்டு காழ்ப்புனச்சி கொண்டு இந்த இனவாதிகள் கண்ட இலாபம் எதுவும் கிடையாது முஸ்லிம்களின் வர்த்தக மையங்களை நோக்கி தாக்கும் செயற்பாடுகளை சில பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுக்கள் செய்துவருகின்றனர்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தில் துவங்கி முஸ்லிம் வர்த்தக நிலையம் தாக்கப்பட்டது. பின்னர் அண்மையில் அளுத்கம நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது மற்றும் குருநாகலையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரையும் உடைமைகளையும் தாக்கியுள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவனெல்லை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று மர்மமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயற்பாடுகளின் மூலம் முஸ்லிம்களை அச்சுறுத்தலாம் என்ற அவர்களின் கனவு ஒருநாளும் பலிக்கப்போவதில்லை.

நாட்டில் முஸ்லிம்கள் குறிப்பிட்ட ஒருசிறு தொகையினராக இருந்தபோதும் இந்நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் மிகப்பெரிய பங்கினைக் கொண்டுள்ளார்கள் என்ற உண்மைகளை மக்களும் ஆட்சியாளர்களும் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தீவிர இனவாதப்போக்கு முஸ்லிம்கள் பெரிதாக மதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தை கொச்சைப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது. அதுமாத்திரமல்லாமல் பள்ளிவாசல்கள் உடைப்பு, கலால், ஹிஜாப் என்றெல்லாம் அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து செல்கின்றன.

இவ்வினவாத அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் முஸ்லிம்களுக்கு எதிராக நவடிக்கைகளுக்கு அப்பால் இவர்கள் இஸ்லாத்தை நன்கு கற்றுக்கொண்டே சிங்கள மக்கள் மத்தியில் அவைகளைக் கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பது பற்றி எதிர்காலம் தீர்மானிக்கும் என நம்புகின்றேன்.

பொதுபலசேனா அமைப்பின் போக்கு நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து அரச நிறுவனங்கள் என்றும், அமைச்சுக்களுக்குள் புகுந்து சோதனை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க முற்படும் பொலிசாரைக்கூட இவர்கள் எச்சரிக்கும் அளவிற்கு சென்றுள்ளார்கள்.

பொதுபலசேனா அமைப்பினரை முளையிலேயே கிள்ளாததன் தவறே இவர்களின் நடவடிக்கைகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து செல்ல காரணமாக அமைந்திருக்கின்றது. இவர்களின் இத்துணிகர செயற்பாடுகளுக்கான பின்புலம் என்ன என்பது பற்றி அனுமானத்தின் மூலம் சொல்லிவிட முடியாது.

எது எப்படியிருந்தாலும் நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழலை கட்டுப்படுத்தி நாட்டு மக்களிடத்தில் அமைதியை பேணவேண்டிய பாரிய பொறுப்பு நாட்டின் தலைவருக்கும் ஆட்சியாளர்களுக்குமே உண்டு.
இதுதொடர்பாக இலங்கை அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது.

அதாவது, இலங்கையின் பிரதான சமயமாக பௌத்தம் பேணப்படும் அதேவேளை 10 மற்றும் 14(1)e பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மற்றைய மதங்களும் அதைப் பின்பற்றுவோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக்கூறுகின்றது. ஆக இதை தவறும் ஒரு அரசு இலங்கை யாப்பிற்கிணங்கிய அரசாக இருக்க முடியாது என்பது சட்டமாகும். http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Chapter_02_Amd.htmlஇந்நிலைமைகளை புரிந்து எதிர்காலத்தில் அரசை தீர்மானிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாக இருக்கின்றது என்பதை உணர்ந்து நடப்போமாக.

நன்றி: 

ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
www.sonakar.com