Tuesday, December 2, 2014

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் மஹிந்தரும், மைத்திரிபால சிறிசேனவும்!

ன்கு திட்டமிட்டு மஹிந்தரை வீழ்த்தும் காய்நகர்த்தலில் பலரின் எதிர்பார்ப்பின் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை முன்நிறுத்தி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வெற்றியடைந்துள்ளார்.
அம்மையாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்போம். காரணம் அரசின் மோப்பத்திற்கு இரையாகாமல் செய்மதி தொலைபேசிகள் மூலமாகவும் வெவ்வேறு வாகனங்கள் மூலமாவும் கடந்த வருடங்களாக இந்த காய்நகர்த்தல் நடந்துள்ளதாக அறியவருகின்றது.
அண்மைக்காலங்களாக அரசிலிருந்து விலகக் கூடியவர்கள் அதிருப்தியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒற்றுக் கேட்கப்பட்டு வந்தது.
அத்துடன் சில அமைச்சர்களின் நாளாந்த அசைவுகள் மற்றும் அவர்களது நடமாட்டங்கள் அரசின் உளவுத் துறையினால் மோப்பம் பிடிக்கப்பட்டு வந்தது.
இந்த மோப்பங்களில் இருந்து தப்பிக்கவும் அரசின் மோப்பக் காரர்களுக்கும் தண்ணி காட்டிவிட்டு மிகவும் இரகசியமாகவே இந்தக் காய்நகர்த்தல்கள் நடைபெற்று வந்துள்ளது.
வல்லரசு நாடு ஒன்றின் இலங்கைத் தூதுவர் ஊடாக இந்தப்பணி கச்சிதமாக நடந்துள்ளது.  சகல திட்டங்களையும் கச்சிதமாக முடித்து விட்டு அந்த தூதுவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். சபாஷ் தூதுவர்.
ஆனால் அரசைத் திசை திருப்புவதற்காக கரு ஜெயசூரிய என்றும், ரணில் என்றும்.சஜீத் என்றும் அரசைப் பேய்க்காட்டி விட்டு உண்மையான ஆட்டக்காரர் யாருக்கும் தெரியாமல் மைத்திரியை ஒழித்து வைத்துள்ளார்கள் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா இனங்காட்டப்பட்டுள்ளார்.
அரசாங்க உளவுத்துறைக்கு தண்ணிகாட்டி விட்டுத்தான் நாங்கள் மைத்திரிபாலவை இப்படிக் களமிறங்க முடிந்ததாக முன்னாள் அமைச்சரும் எதிர்க் கூட்டணியின் பிரதான பாத்திரமேற்றுள்ளவருமான ராஜீத சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அரச கூட்டுக்குள் இருந்து கிளம்பவுள்ளவர்களுடன் மிகவும் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்தரின் கூட்டுக்குள் இருந்து பொது வேட்பாளர்
எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் என்பவர் ஆளும் அரசின் கூட்டுக்குள் ஊடுருவிப் புகுந்து அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து தற்போது மஹிந்தர் மீது அதிருப்தி கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை தன்வசம் கொண்டு வந்து வெற்றி பெறும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஐ.தே.க.யின் செல்வாக்குக் குன்றாமல் குறையாமல் உள்ளது. ஐ.தே.க.யின் வாக்குகளுடன் ஆளும் தரப்பில் இருந்து பலரை இழுத்து வந்து விட்டால் அரசு ஆட்டம் கண்டு விடும்.
இந்த வல்லமையுள்ள ஒருவரை மஹிந்தவின் கூட்டுக்குள் இருந்து இறக்க வேண்டும் என்று கடந்த வாரம் எழுதியியிருந்தோம். அதன்படியே மைத்திரி அமைந்து விட்டார்.
ஆனால் நாங்கள் மங்களவை எழுதியிருந்தோம். உண்மையிலேயே அரசு பயந்து விட்டது. அரசு ஆட்டம் கண்டு விட்டது.
கரு ஜெயசூரிய பொது வேட்பாளர் என்றதும் மஹிந்தர் உடனடியாக வாழத்துத் தெரிவித்தார். அப்படியானால் தோல்வி பயமில்லையென்றால் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவிக்கலாம்தானே.
அரசுக்கு தோல்வி பயம் கவ்விக் கொண்டுள்ளது. அதனால்தான் அரசு கோவையுள்ளதாகப் பயம் காட்டுகின்றது.
இந்தப் போராட்டம் என்பது பணம். முப்படை, ஆட்பலம், அரசின் சகல வளங்கள் நிறைந்த நாடு முழுவதும் அறியப்பட்ட நன்கு பரிச்சயமான மஹிந்தவை எதிர்த்து நிற்பது என்பது மிகவும் இலேசுப்பட்ட காரியமல்ல.
அதற்கும் மேலாக வாக்கு மோசடிகள் வாக்களிப்புத் தடைகள். உச்சகட்ட மோதல்கள், உயிர் இழப்புக்கள் கொலை அச்சுறுத்தல்கள், கொலை முயற்சிகள் இப்படியாக தென்னிலங்கை கண்டிராத ஒரு மாபெரும் பாரிய பயங்கரமான தேர்தலை நாடு சந்திக்கவுள்ளது.
இவைகளைக் கடந்து மைத்திரி அணி நின்று பிடிக்குமா என்பது ஒரு சந்தேகம்தான்.
2010 ஆம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் மைத்திரிக்கும் ஏற்படும் என்று மஹிந்தர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதானது அச்சுறுத்தலின் உச்சக்கட்டம் எனலாம்.
அத்துடன் தனக்கு ஏற்பட்ட நிலை மைத்திரிக்கும் ஏற்படலாம் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறை வாழ்க்கைக்காக உடம்மை தேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
மற்றது கட்சி மாறிப் போனவர்கள் மற்றும் கட்சி மாறவுள்ளவர்களின் கோவைகள் தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி பயம் காட்டுகின்றார். அதனால் கட்சி மாறவுள்ளவர்கள் பயந்து விட்டார்கள்.
ஆனாலும் அரசின் கூட்டில் இருந்து 20 அமைச்சர்களும் எம்பிக்களும் கிளம்பத் தயாராக உள்ளார்கள் என்ற தகவல் இன்னும் பலமாகவே உள்ளது.
சிறுபான்மை மக்களின் வாக்குகள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும்
சிங்கள மக்களை உசுப்பேற்றி சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் மீண்டும் மூன்றாவது முறையாக தான் ஜனாதிபதியாகலாம் என்று நினைக்கும் மஹிந்தர் இம்முறையும் தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியாக முடியாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
காரணம் மஹிந்ருக்கும். மைத்திரிக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் ஓரளவு சரிசமமாக கிடைத்தால் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு 51 வீதமான வாக்குத் தேவைப்படும். அப்போது சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளது.
விசேடமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கவுள்ளது. கூட்டமைப்பு தங்களது தீர்மானத்தை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் வெளிப்படையாக யாருக்கு வாக்களிப்பது என்பதை தெரிவிக்கமாட்டாது என்பதை தலைவர் சம்பந்தன் தெரிவித்து விட்டார்.
யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் கோரியே வாக்களிப்பார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அண்மைக்காலங்களாக முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் நடத்தும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் அரசுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.
அதனால் மைத்திரியன் வெற்றி என்பது பிரகாசமாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தேர்தலைப் புறக்கணித்து விட்டதனால்தான் ஜனாதிபதியானார்.
இப்போதும் தமிழ் மக்கள் அரசுக்கு வாக்களிக் வேண்டும் அல்லது கடந்த ஜனாதிபதித்; தேர்தல் போன்று இம்முறையும் வாக்களிப்பைத் தவிர்க்க வேண்டும்.
ஆக ஜனாதிபதி எட்டி எட்டி உதைக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்குத் தேவைப்படுகின்றது.
இம்முறையும் சிறுபான்மை மக்கள்தான் ஜனாதிபதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். 
இந்த வகையில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசு தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசின் சார்பாக அமைச்சர் பஷில் ராஜபக்ச பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனாலும் அரசு கருணாவைக் கொண்டு ஐ.தே.க மீது பலவகையான தாக்குதல்களை தொடுக்கத் தீர்மானித்துள்ளது. அதையெல்லாம் சிங்கள மக்கள் கணக்கில் எடுப்பார்களா என்பது வேறு கணக்கு.
ஆனால் ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புலிகள் எழுச்சி பெறுவார்கள் என்ற புரளியை அரசு எடுத்து விடவுள்ளது.
சகல வளங்களையும் கொண்டுள்ள மஹிந்தவை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமையான எதிர் கட்சியொன்று நாட்டில் இல்லை. சிங்கள மக்களிடத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் நிறைந்து காணப்படுகின்றது.
அந்த மாற்றங்களை அறுவடை செய்யக் கூடியவர்களாக ரணிலோ அல்லது சஜித் பிரேமதாசவோ இலலை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
ஏனெனில் மஹிந்தவுக்குப் போட்டியாக நிற்கக் கூடிய ஒருவரை எதிர் கட்சிகளால் கொண்டு வரமுடியவில்லை. அதனால்தான் அரசின் அணியியிலிருந்து மைத்திரியைக் கொண்டு வந்துள்ளார்கள்.
மற்றும் மஹிந்தவை தோற்கடிக்க அவரது கூட்டில் இருந்து ஒருவரைக் கொண்டுதான் முடியும் என்று எதிரணியினர் நம்புகின்றனர். அதனால்தான் மைத்திரிபாலவை கொண்டு வந்துள்ளனர் எனலாம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் முழு முயற்சியில்தான் மைத்திரி தெரிவாகியுள்ளார். மஹிந்தர், சந்திரிகா ஊடாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் கடந்த காலங்களாக மஹிந்தர் சந்திரிகாவைப் படாதபாடு படுத்திவிட்டார் என்ற தவலும் உள்ளது.
ஆனால் சந்திரிகாவும் பொறுமையாக இருந்து சமயம் பார்த்து மஹிந்தருக்கு எதிரான யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மைத்திரியை ரணிலும் ஐ.தே.க.யும் ஆதரித்ததன் மூலம் ரணிலுக்கான நிகழ்ச்சி நிரல் என்றும் உள்ளது. ரணில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடாது போனால் கரு ஜெயசூரியவை நிறுத்துவது என்ற முடிவில்தான் ரணில் இருந்தார்.
ஆனால் கருவை களமிறக்கி கரு தோற்று விட்டால் ரணிலின் தலைமைத்துவத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும். மைத்திரி வெற்றியடைந்தால் 3 மாதத்தின் பின்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு ரணிலுக்கு அதிகாரம் கொண்ட பிரதமர் பதவி வழங்கப்படும் என்று ஒப்பந்தம் ஒன்றை ரணிலும் மைத்திரியும் கடந்த வாரம் செய்துள்ளார்கள்.
அதன் மூலம் ரணில் மிகவும் சுலபமாக பிரதமர் பதவியை அடைகின்றார்.
மைத்திரி வெற்றியடைந்தால் மிகவும் சுலபமான வகையில் ரணில் பிரதமராகலாம் என்ற நிலையுள்ளது.
அத்துடன் மைத்திரி வெற்றியடைந்தால் மஹிந்தவின் குடும்பத்தினர் புதிய ஆட்சி மூலம் பலவகையான சிக்ல்களை எதிர்நோக்கலாம், உச்சக்கட்ட பழிவாங்கலுக்கும் உள்ளாகலாம்.
ஆனால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் ஆள் மாற்றம் வேண்டும் என்றும் அப்பாவி மைத்திரி பலிக்கடாவாகி விடுவாரோ என்ற அச்சம் பெருமளவு காணப்படுன்றது.
மஹிந்தராக இருக்கட்டும் அல்லது மைத்திரியாக இருக்கட்டும் இந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இருவருக்கும் வாழ்வா சாவா என்ற ஒரு கனதியான போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

நன்றி
எம்.எம்.நிலாம்டீன். 
http://www.tamilwin.com

Thursday, July 17, 2014

புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்? அதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது?

எமக்கு அரசியலமைப்பொன்று ஏன் அவசியம் என்ற கேள்வியை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன் அரசியலமைப்பு என்பதனால் கருதப்படுவதென்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமானதாகும்.
அரசியலமைப்பை அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பின் அத்திவாரமாகக் கருத முடியும். சட்டம் மற்றும் நல்லிருப்புக்கு அவசியமான அரசியல் நிர்வாக மற்றும் நீதிமன்ற அதிகாரத்தை அமுல்படுத்தக்கூடிய பொரியாக செயல்படுவது அரசாங்கமாகும். அரசியலமைப்பானது, அரச கட்டமைப்பு நடவடிக்கைகள், அதிகாரங்கள், பொறுப்புகள், பிரஜாஉரிமை, கடமைகள் அவற்றிற்குள்ள கட்டுப்பாடுகளை விபரிக்கின்ற சட்டபூர்வ ஆவணம் மட்டுமன்றி அந்த அரசாங்கத்தின் அனைத்து சட்டங்களுக்கும் மேலாக உள்ள அடிப்படை சட்டமாக கருத முடியும். அரசாங்கத்துக்கு தேவையான அரசியல் அதிகாரம் கிடைப்பது பொது மக்களிடமிருந்தாகும். அந்த கருத்தின்படி அரசியலமைப்பை, பிரஜைகள் தம்மை நிர்வகிக்கின்ற முறை பற்றி நிர்வாகிகளோடு ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஒப்பந்தமாகவே கருத முடியும்.
அரசியலமைப்பொன்று இருக்கின்ற நிலையில் அந்த அரசியலமைப்பை நீக்கி, புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியானது அரசாங்கத்தை மீள புனரமைத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகவே கருத முடிகிறது.
புதிய அரசியலமைப்பு எதற்காக?
எமக்கு அரசியலமைப்பு அவசியப்படுவது ஏன் என்ற கேள்விக்கு வழங்கக் கூடிய இலகுவான பதில் இதுவாகும்.
இருக்கின்ற அரசியலமைப்பின் கீழ் 1978ம் ஆண்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கம் எதிர்கால நோக்கு கொண்ட சிறந்த, முறையான, சிறப்பாக பொருந்தக் கூடியவாறு தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கமொன்றல்ல. அதன் பிரதிபலனாக தற்போது நீதி நிர்வாகமற்ற, முறையற்ற, ஊழல் மற்றும் கொள்ளை, பிரஜைகளின் மானிட கௌரவத்தை அவமதிக்கின்ற, அவர்களை அவமரியாதைக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்குகின்ற மோசமான அரசாங்கமொன்றின் நிலைக்கு மாறியுள்ளது.
அந்த அரசாங்கத்தின் சட்டத்தை அமுல்படுத்துகின்ற மற்றும் சட்டத்தை தீர்மானிக்கின்ற நிறுவனங்கள் முதல் மற்றும் அனைத்து நிறுவனங்களும் சீழ் வெளியேறுமளவுக்கு அழுகல் நிலையிலிருப்பதனை குறிப்பிட வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்பொன்று தேவைப்பட்டிருப்பது துர்நாற்றமடிக்கின்ற அளவுக்கு அழுகிப்போயுள்ள பழைய அரசாங்கத்தை குழி தோண்டிப் புதைத்து அதற்குப் பதிலாக சட்டவாதிக்கம், நீதி, நியாயம் நிலவுகின்ற ஊழல் மோசடிகளற்ற சிறந்த, பிரசைகளுக்கு மானிட கௌரவத்தை வழங்குகின்ற அனைவரது நம்பிக்கைக்கும் கௌரவத்துக்கும் உரித்தான புதிய இலங்கை அரசாங்கமொன்றை புனரமைத்துக் கொள்வதற்கான தேவை இருப்பதனாலாகும்.
எனது கருத்துப்படி, புதிய அரசாங்கமொன்றை புனரமைக்கக்கூடிய தேவை கண்டிப்பாக கருத்திலெடுக்க வேண்டியிருந்தது, பிரபாகரனின் பிரிவினைவாதக் கொள்கை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்தாகும். எனினும் அந்த வரலாற்றுத் தேவையை புரிந்து கொள்ளக்கூடிய இயலுமை அரசாங்கத்துக்கு இல்லாதிருந்ததோடு, எதிர்க்கட்சியினருக்கும் இருக்கவில்லை.
நிர்வாண அரசு
கொடூர உள்நாட்டு யுத்தமொன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசை மீளவும் புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டமொன்றுக்கு இடம் இருக்க முடியாது. இறுதி யுத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் எதிர்பார்த்த அரசைப் போன்று இலங்கை அரசாங்கமும் அழுகிய நிலைக்கு இலக்காகியிருந்தது. அவ்வாறிருந்தும் பிரபாகரனின் எதிர்பார்த்த அரசை தோல்வியடையச் செய்வதற்கு இலங்கை அரசுக்கு முடிந்தது. எனினும் அந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் நிர்வாண அரசாங்கம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அப்போது மாத்திரமன்றி அதற்கு முன்னரும் அரசாங்கம் கூடிய, குறைந்த அளவுகளில் நாறிப்போயிருந்தது. எனினும் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் யுத்தத்தின் மூலம் வெளியேறும் வெடி மருந்தின் நாற்றம் காரணமாக உணர முடியாதிருந்தது. அப்போது அரசாங்கம் அழுகி வீசிய துர்நாற்றம், யுத்தத்தின் காரணமாக வீசிய வெடிமருந்து நாற்றத்தினால் மழுங்கடிக்கப்பட்டதாக கூற வேண்டியுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பின் அதிலிருந்து வீசிய வெடிமருந்து நாற்றம் முற்றுப்பெற்ற நிலையிலும் அரசாங்கம் அழுகி அதிலிருந்து வீசிய துர்நாற்றத்தை எம்மால் உணரக்கூடியதாக இருந்த அதேவேளை, யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பொறுத்துக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்திருந்ததையும் குறிப்பிட வேண்டியுள்ளது. யுத்தம் முற்றுப் பெற்றதைத் தொடர்ந்து அரசாங்கம் நிர்வாணமானதன் காரணமாக அரசாங்கம் அழுகி சீழ் வெளியேறும் உடல் போன்று மாறியது மட்டுமன்றி, அந்த சீழ் மீது துடித்துப் பாயும் புழுக்களைக் காணக்கூடிய நிலை உருவாகியது.
இவ்வாறு அதிகூடியளவுக்கு அழுகியிருக்கும் அரசாங்கத்தின் இருப்பை முடிவுக்குக் கொண்டு வந்து அதற்குப் பதிலாக புதிய அரசாங்கமொன்றினை புனரமைத்துக் கொள்வதேயன்றி, நிர்வாகியை மாத்திரம் மாற்றுகின்ற கொள்கையினால் இந்த பிரச்சினையை வெற்றி கொள்ள முடியாது. எனினும் ஆழம்மிகு அரசியலமைப்பு மாற்றமொன்றின் தேவை கருதி முன்வந்துள்ளவர்கள் இதற்கு பொருத்தமான மிக ஆழமாக இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொண்டுள்ளதாக தெரியவில்லை.
சிக்கலான பிரச்சினையை இலகுவானதாகக் கருதுவது
கடந்த வாரம் மருதானையில் இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கொன்றில் உரையாற்றிய ஒரு பேச்சாளரான விரிவுரையாளர் நிர்மால் ரஞ்சித் தேவசிரி, அரசியல் கட்சிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சோபித தேரரை பொது அபேட்சகராக முன்னிறுத்துவதாகக் கூறினார். அந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய மற்றொரு பேச்சாளரான பேராசிரியர் சுமனசிரி லியனகே, பொது அபேட்சகராக முன்னிறுத்தப்பட வேண்டிய நபர் இனங்காணப்பட்டால் காலம் தாழ்த்தாது அதை அறிவிப்பது பொருத்தமானதெனவும் அதனால் அப்பொது வேட்பாளருக்கு பொது மக்களிடம் சென்று கருமமாற்றுவதற்கு சந்தர்ப்பம் நிடைக்குமெனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து உரையாற்ற எழுந்த விரிவுரையாளர் ஜயம்பதி விக்கிரமரத்ன, சோபித தேரரது பெயரை இப்போதே அறிவிப்பது உசிதமல்ல என சோபித தேரர் கருதுவதால் அவ்வாறு அறிவிப்பதை பிற்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாயினும் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறுகிய, இலகுவான திருத்தமொன்றெனவும் ஆறு மாத காலத்துக்கு குறைவான காலப்பகுதிக்குள் அதனை பொது வேட்பாளருக்கு வழங்கி வைக்கும் பணி நிறைவடைந்து விடுமெனவும் கூறினார்.
சோபித தேரருக்காக ஆஜராகிய நிர்மால் ரஞ்சித் தேவசிரி, ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் முன்வைத்த கருத்துக்களால் வெளிப்படுவது, இவர்கள் எதிர்பார்ப்பது உடனடியான, இலகுவான மாற்றமொன்றை  மாத்திரமாகும். குறுகிய, இலகுவான அரசியலமைப்பு மாற்றமொன்றின் மூலம் ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். நன்றாக அழுகிய நிலையிலுள்ள நிறுவன முறையில் மாற்றமெதனையும் அந்த நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டிருப்பதை காண முடியாதுள்ளது. இனத்தை கட்டியெழுப்பும் பணியும் அதில் உள்ளீர்க்கப்பட்டிருக்கவில்லை.
வெளியாகியுள்ள கருத்துப்படி சிறிய மாற்றமொன்றையே ஹெல உருமய எதிர்பார்க்கின்றது. அவர்கள் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு உடன்படுவதாக இல்லை. ஜனாதிபதி அந்தப் பதவியைத் தவிர வேறு எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க முடியாதவாறு ஜனாதிபதியை சட்டத்திற்கு அடிபணியக்கூடிய நிலைக்கு கொண்டுவருவது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
இவற்றுக்கு மேலாக நான் கருதுவது, நாடென்ற ரீதியில் நாம் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதேயன்றி அதற்கு முன் ஏற்படுத்துகின்ற சிறிய மாற்றங்களினால் மாத்திரம் முன்னோக்கி நகர முடியாதென்ற நிலையிலாகும். முழு நிறுவன முறையும் காணப்படுவது சிறிய புனரமைப்பினால் கட்டியெழுப்ப முடியாதளவுக்கு அழுகிப் போயுள்ள நிலையிலாகும். ஆட்சியாளரை மாற்றுவதனால் மாத்திரம் அல்லது நிர்வாக முறையில் ஏற்படுத்துகின்ற சிறிய மாற்றத்தின் காரணமாக அழுகியுள்ள அந்த நிறுவன முறையை வழமை நிலைக்கு கொண்டுவர முடியாது. அவ்வாறான சிறிய மாற்றம் மீண்டும் வெடிக்கக்கூடிய சிறிய பிரச்சினையாக வளர்ந்து இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.
பழைய அரசியலமைப்பின் வரலாறு
அரசியலமைப்பில் காணப்படும் சிக்கல் நிலை 1978 அரசியலமைப்பில்இடம்பெற்றதொன்றாகக் கருதுவது தவறாகும். இதற்கு முன்பிருந்த இரு அரசியலமைப்புச் சட்டங்களிலும் இவ்வாறான சிக்கல் நிலை இருந்தது. அய்வர் ஜெனின்ஸ் உருவாக்கிய சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சோல்பரி அரசியலமைப்பை உருவாக்கிக்கொண்ட முறையை இதற்கு முன் பார்த்தோம். அந்த அரசியலமைப்பிற்கு மனித உரிமை சாசனம் உள்ளீர்க்கப்பட்டிருந்ததைப்போன்று அது ஆட்சியாளருக்கு தேவையானவாறு செயல்படுவதற்கிருந்த வாய்ப்பு முறையாக தடுக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பாக இருக்கவில்லை. அதேபோன்று இனத்தை கட்டியெழுப்புவது சம்பந்தமாகவும் அந்த அரசியலமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கவில்லை.
இதற்கு முன் ஆராய்ந்து பார்த்த முறைக்கேற்ப சோல்பரி அரசியலமைப்பு அதன் மை உலர்வதற்கு முன் தமிழ் தோட்டத் தொழிலாளர்களை பழி தீர்த்தல் மற்றும் அவர்களுக்கு தலையிடியாக இருந்த சமசமாஜ அமைப்பின் அத்திவாரத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் டி.எஸ். சேனாநாயக்க தோட்டத் தொழிலாளர்களது குடியுரிமையை இல்லாமலாக்கியது. அதன் பின் அதன் வழியில் 1956ல் பண்டாரநாயக்க தமிழ் மக்களது மொழியுரிமையை இல்லாமலாக்குகின்ற முறையில் சிங்கள அரச கரும மொழிச்சட்டத்தை சட்டரீதியாக்கியது.
அந்த இரு சட்டங்களும் அரசியலமைப்புக்கு முரணாக இருந்த போதிலும் பிரச்சினை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டபோது நீதிமன்றமும் அந்த உரிமை மீறலை நியாயப்படுத்தியது. இதன்மூலம் தெளிவாவது, அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முறையான திட்டமும் இந்த அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பதாகும். அதன் பின் 1972ல் உருவாக்கிக் கொண்ட அரசியலமைப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் பெரும்பான்மை இனத்துக்கு அந்த பெரும்பான்மையினத்தவர்களது மதத்துக்கு மற்றும் மொழிக்கு பக்கபலமாக செயற்படும் அரசாங்கமென்ற நிலையை உருவாக்கியது.
அரசியலமைப்பு ரீதியாக அடுத்த பேரழிவு இடம்பெறுவது 1978ல் ஆகும். அந்த அரசியலமைப்பின் மூலம் மொன்டெஸ்கியூலின் அதிகாரப் பரவலாக்கல் கொள்கை தலையால் நடப்பட்டது. ஜனாதிபதியை சட்டத்துக்கு அடிபணியாதவராக ஆக்கியதோடு ஜனாதிபதி அரசாங்கத்தின் அனைத்துவித அதிகாரங்களையும் கொண்டவராக நியமித்தது மட்டுமன்றி, பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய அதிகாரங்கள் இரண்டையும் ஜனாதிபதிக்கு கீழ்ப்படிந்து செயற்படக்கூடிய நிலையை உருவாக்கியது.
இந்த அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி உட்பட அவரது அரசியல் குழுவுக்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்துக்கு அப்பால் நாட்டின் பொருட்களை கொள்ளையிடும் உரிமையும் வழங்கப்பட்டது. பல்வேறு உருவங்களில் இருக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான அனைத்து பொருட்களினதும் உத்தியோகபூர்வ உரிமையாளர் ஜனாதிபதியாவார். அவருக்கு இவற்றில் விரும்பியதொன்றை தமக்கும் தான் விரும்பிய ஒருவருக்கு வழங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் அல்லது குத்தகைக்கு விடுவதற்குரிய அதிகாரம் உள்ளது. இது விடயமாக ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலையும் கண்டறிவதற்கு அல்லது விசாரணை செய்வதற்குரிய அதிகாரம் பாராளுமன்றத்துக்கோ நீதிமன்றத்துக்கோ இல்லை. ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த முக்திக் கவசத்தை தனக்கு மாத்திரமன்றி அவர் விரும்பும் வேறொருவருக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டுமென சிந்திக்கின்ற எந்தவொரு நபருக்கெதிராகவும் எந்தவித விசாரணையும் மேற்கொள்ள முடியாதுள்ளதோடு, வழக்குத் தொடரவோ, தண்டனை வழங்கவோ முடியாது. இதன் மூலம் இந்த அரசியலமைப்பு அரச நிர்வாகத்தை புராதன பொருட்கொள்ளையாக மாற்றியுள்ளதனை குறிப்பிட வேண்டியுள்ளது.
நிறுவனமுறை அழுகியுள்ளது
இதற்கு முன்பும் அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவன முறையானது அமுல்படுத்தப்பட்டது, அவற்றுக்கு பொறுப்பளிக்கப்பட்ட சமூக பொறுப்புகள் விடயமாக தெளிவில்லாத நிலையில் ஊழல் மற்றும் செயல்திறனற்ற முறையிலாகும். நிறுவன முறையில் இடம்பெற்ற அந்த வீழ்ச்சி 1978 அரசியலமைப்பினால் உச்ச கட்டத்தை அடைந்ததை குறிப்பிட வேண்டும். இன்று அரசாங்கத்தின் அனைத்து நிறுவனங்களும் காணப்படுவது ஊழல் செயல்திறனற்ற, நன்றாக அழுகிய நிலையிலாகும். ஊழலற்ற செயல்திறன் கொண்ட, மக்களது நம்பிக்கையையும் கௌரவத்தையும் கொண்ட எந்தவொரு நிறுவனமும் நாட்டில் இல்லாத நிலை உள்ளது.
இப்போது அரசாங்கம் என்ற பெயர் கொண்ட பாரிய கட்டடத்தில் எஞ்சியிருப்பது அதனது முகட்டில் இருக்கும் இரும்பினாலான இலச்சினை மாத்திரமாகும். ஒட்டுமொத்த கட்டடத்தையும் மீள் புனரமைத்து பயன்பாட்டுக்கு கொள்ள முடியாதளவுக்கு அசிங்கப்பட்டிருப்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. சமூகம் நேர்மையானதாக இருப்பின் மேற்கொள்ள வேண்டியது காலம் தாழ்த்தாது முழு கட்டடத்தையும் சிதைத்துத் தள்ளிவிட்டு அந்த நிலத்தில் பலமான அத்திவாரமொன்றின் கீழ் புதிய அரசொன்றை புனர்நிர்மாணிப்பதாகும். சமூகம் அவ்வாறு செய்யாது போனால் எந்தவொரு நிலையிலேனும் இடம்பெறக்கூடிய உடைந்து வீழ்வதினால் பாரிய அழிவு இடம்பெறக்கூடும்.
புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியப்படுவது மேலே விளக்கிய வரலாற்றுத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காகும். நன்றாக உக்கி, அசிங்கமடைந்திருந்த அரசின் உத்தியோக பொறுப்பாளரை மாற்றுவதால் மாத்திரம் அல்லது பொறுப்பு முறையை மாற்றுவதால் மாத்திரம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இப்போதிருக்கும் பொறுப்பாளரை போன்றே இதற்கு முன்பிருந்த பொறுப்பாளர்களும் இந்த கவலைக்குரிய நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 1978க்கு முன்பிருந்த பொறுப்பாளர்களிடம் நம்பிக்கைத் தன்மையில் குறைபாடு இருக்கலாமெனினும் அவர்கள் கொள்ளையர்கள் அல்லர். அவ்வாறிடம்பெற்றது அவர்களிடையே காணப்பட்ட நற்குணத்தினால் அல்லாது அப்போதிருந்த அரசியலமைப்பின் கீழ் கொள்ளையடிக்கக்கூடிய உரிமையோ அல்லது அதிகாரமோ அவர்களுக்கு இல்லாதிருந்ததனாலாகும். பொறுப்பானவர்களது நிர்வாகம் பொருட் கொள்ளையாக மாற்றம் பெற ஆரம்பித்தது 1978ன் பின்னராகும். அதன்பின் பொறுப்பாளர்களாக நியமனம் பெற்ற அனைவரும் உக்கிய நிலையிலான அரசாங்க அமைப்பில் இருந்த பெறுமதிமிகு தங்கம், வெள்ளி, முத்து, மாணிக்கம் போன்றவற்றை கொள்ளையிட்டார்கள். அவ்வாறு கொள்ளையிடப்பட்ட சொத்துக்களின் பெறுமதி சிலவேளை, புதிய அரச அமைப்பை நிர்மாணித்துக் கொள்வதற்கு செலவாகும் தொகையை விட அதிகமாக இருக்கலாம்.
நிறுவனங்கள் பெறும் முக்கியத்துவம்
இதற்கு சில வாரங்களுக்கு முன் விஜயானந்த ஜயவீரவினால் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாக அறிமுகப்படுத்தி ஓரளவு பெரிய நூலொன்று எனக்கு வழங்கப்பட்டது. (Why Nation Fail) என்பது அந்த நூலின் பெயர் அது டரன் எஸ்மோக்ளு மற்றும் ஜேம்ஸ் ஏ ரொபின்சன் ஆகிய இருவரும் சம ஆசிரியர்களாக எழுதி 2013ல் வெளியிடப்பட்ட நூலாகும். அது உயர் தரத்திலான நூலாக கருதப்படுவதோடு, ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சிக்கு நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிறுவன முறைகள் எவ்வாறு பங்களிப்பு செலுத்துகின்றன என்பது பற்றியே இந்நூல் கருத்தில் கொண்டுள்ளது.
இந்நூல் ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஒரு அரைப்பகுதி மெக்சிகோவின் சொனாமாராவுக்கும் மற்றைய அரைப்பகுதி அமெரிக்காவின் அரிசோனாவுக்கு சொந்தமான நோசெல்ஸ் நகரிலிருந்தாகும். இரு நாடுகளுக்கும் உரித்தான இரு அரைப்பங்குகளும் பிரிக்கப்பட்டிருப்பது கம்பி வலையினாலாகும். நகரில் வாழும் மக்கள் ஒரே வரலாற்று, சமூக பின்புலம் கொண்டவர்களாகவே உள்ளவர்கள். எனினும் அமெரிக்க அரைப்பகுதி முன்னேறியுள்ளது. மெக்சிக்கன் அரைப்பகுதி முன்னேறாதுள்ளது. தலா வருமானத்திற்கேற்பவும் வேறு சுட்டிகளின்படியும் இவ்விரு அரைப்பங்குகளிலும் வாழும் மக்களிடையேயான இடைவெளி மிக அதிகமாகும். நகரின் ஒரு அரையில் காணப்படுகின்ற விருத்தி தொடர்பாகவும் மற்றைய அரைப்பங்கில் காணப்படும் விருத்தியடையாமைக்கான காரணம் தொடர்பாகவும் அவர்கள் கவனத்தில் கொள்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க ராச்சியத்தில் முன்னேற்றமான நிறுவன முறைகள் காணப்படுகின்றன. இந்த முன்னேற்றகரமான நிறுவன முறைமைகள் அமெரிக்க அரைப்பங்கின் விருத்தியில் பங்களித்துள்ளது. மெக்சிக்கோவிடமிருக்கும் நிறுவன முறை முன்னேற்றமற்றவை. மெக்சிகோவின் அரைப்பங்கு விருத்தியடையாமைக்குக் காரணம் மெக்சிகோவின் நிறுவன முறையில் காணப்படும் வீழ்ச்சியாகும். அந்த நிதர்சனத்தின் மூலம் ஆரம்பிக்கின்ற இவர்கள் உலக வரலாற்றில் நீண்ட காலத்திலிருந்து பல்வேறு கால கட்டங்களில் உலகின் பல்வேறு பிரதேசங்களில் விசேட அபிவிருத்தியை, வளர்ச்சியை காட்டி வரும் இம் மக்கள் இந்த விருத்திக்கு காரணமாய் அமைந்த பிரதான காரணி, நிறுவன முறையில் ஏற்பட்ட விருத்தியே என்பதை தர்க்க ரீதியாக முன்வைக்கிறார்கள். இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும் உலகின் முதல்தர சாஸ்திரவியல் நிபுணர்கள் என கருதப்படுகின்றார்கள். இருவரும் பேராசிரியர்கள். டரன் அர்த்த சாஸ்திர நிபுணர். ரொபின்சன் அர்த்த சாஸ்திர நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமாவார். இவ்விருவருக்கும் எந்தவொரு நாட்டிலும் வளர்ச்சி, வளர்ச்சியற்ற தன்மைகளில் காலநிலை, பூகோள, கலாசார காரணிகள் செல்வாக்கு செலுத்துவதில்லை. நாடொன்றின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பிரதானமாக தீர்மானிக்கப்பட்டிருப்பது அந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிறுவன முறையினாலாகும்.
இவர்கள் இருவரும் உருவாக்கியுள்ள இந்த நியதியை எமது நாட்டுக்காக பயன்படுத்தினால் முன்னேறுவதற்கு அவசியப்படும் அனைத்தும் குறைவின்றிக் காணப்படுகின்ற போதிலும் எமது நாடு சிறப்பற்ற, தோல்விக்கு உள்ளாகியிருப்பது அரசாங்கம், அதனோடு தொடர்புபட்ட நிறுவன முறைகள் சிறப்பற்று, தோல்வியடைந்த நிலையிலிருப்பதனாலாகும் என கருத முடிகிறது. அரசாங்கம் சிறந்த முறையில் பூரணத்துவம் பெறவில்லை. அதன் கீழுள்ள நிறுவனங்களும் முறையற்ற, முழுமைபெறாத நிலையிலுள்ளன. இதன் காரணமாக அரசாங்கத்தைப் போன்று அதன் கீழியங்கும் ஒட்டுமொத்த நிறுவன முறையும் முறையற்ற, ஊழல் நிலைக்கு உள்ளாகக் காரணமாகியுள்ளது.
நிறுவன முறையின் யதார்த்தம்
நான் வேறு சில ஆக்கங்களில் நீதிமன்றம், பொலிஸ், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரசாங்கத்தின் வரி அறவிடும் நிறுவனங்களில் காணப்படுகின்ற மோசடி, ஊழல், பற்றி குறிப்பிட்டுள்ளேன். எனவே, அவற்றிலிருந்து விடுபட்ட, வேறு சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்களோடு தொடர்புபட்ட பிரிவுகளில் இடம்பெறுகின்ற அலங்கோலமான நிலையை சுருக்கமாக குறிப்பிட விரும்புகின்றேன்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கியதன் பின் மீண்டும் பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட பாராளுமன்ற ஆட்சி முறையொன்றுக்கே செல்ல எதிர்பார்த்துள்ளது. அரச அதிகாரங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தக்கூடிய பாராளுமன்றமொன்று இப்போது எங்களிடம் இருக்கிறதா? என்னைப் பொறுத்தவரை இல்லை என்றே கூறுவேன். பாராளுமன்றம் மிகவும் சீரற்றுள்ளது. பாராளுமன்ற தெரிவுக்குழு முறை எந்தவொரு பாராளுமன்றத்தினதும் இயந்திரமாக செயல்படுகிறது. எனினும் எமது நாட்டு பாராளுமன்றத்தின் தெரிவுக் குழு முறை காணப்படுவது மிகவும் சீர்கெட்ட நிலையிலாகும். தெரிவுக் குழு கூட்டமொன்றை கூட்டுவதற்கு தேவையான ஆகக் குறைந்த அங்கத்தவர் எண்ணிக்கையாவது சமுகமளிக்காதிருப்பதனால் விடயம் சம்பந்தமாக தெரிவுக்குழு கூடுவது மிக அபூர்வமாகும். மீள் குடியேற்றப் பிரச்சினை வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் எரியும் பிரச்சினையாக இருந்த போதிலும் இறுதியாக அதன் குழுக்கூட்டம் கூடியிருப்பது ஒன்பது மாதங்களுக்கு முன்னராகும். ஏதொவொரு அளவில் சிறப்பான நிலையில் இருப்பது டியூ குணசேகரவின் தலைமையில் செயல்படுகின்ற கோப்குழு மாத்திரமாகும். ஆலோசனைக்குழு இருப்பதும் சீர்கெட்ட நிலையிலாகும். நிலையியற் கட்டளைக்கான குழு நான்கு வருடங்களாக கூடாதுள்ளது. கோப் குழுவைத்தவிர வேறு எந்தவொரு குழுவும் பயனுள்ள கடமையை செய்வதாக தெரியவில்லை. இன்று பாராளுமன்றம் கம்பீரமான வெளித்தோற்றம் கொண்ட வெற்றுக் குகையொன்றாக காணப்படுகின்றது.
நிறுவன முறையில் காணப்படும் முறைகேட்டை குறிப்பிடக்கூடிய மற்றொரு உதாரணம் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியாகும். குழந்தை தாயின் வயிற்றில் கருக்கொண்டவுடன் உடனடியாக அந்த தாய்க்கும் தந்தைக்கும் பிறப்பதற்குள்ள அந்தக் குழந்தையை சேர்ப்பதற்கான பாடசாலையொன்றைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. பொருத்தமான பாடசாலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக அந்த சந்தர்ப்பத்திலிருந்தே அதற்குத் தேவையான போலி ஆவணங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. குழந்தை பிறந்ததன் பின் பாடசாலைக்கு சேர்க்க வேண்டிய வயதில், பெரிய லஞ்சம் வழங்கி பாடசாலையை பெற்றுக் கொண்ட போதிலும் அதன்பின் பாடசாலை போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையக்கூடியளவுக்கு கல்வி வசதி கிடைக்காததனால் பிள்ளையின் டியூசன் கல்விக்கு பெருந்தொகைப் பணத்தை செலவிட பெற்றோருக்கு நேர்கிறது. அவ்வாறு பெறும் கல்வியை பூரணப்படுத்திய பின் அரசு தொழில்வாய்ப்பு வழங்குவது தகுதிகள் அல்லாலாததன் காரணத்தினால் அரசியல்வாதிகளின் பின்னால் அலைய வேண்டியுள்ளது. பெரும்பாலும் அரச தொழிலுக்கு பணம் அறவிட்டு போட்டிப்பரீட்சை நடத்தப்பட்ட போதிலும் ஆட்கள் தெரிவு செய்யப்படுவது பின் கதவாலாகும். இணைந்த சுகாதார பட்டப் பின்படிப்பு பாடநெறிக்கு பின்பற்றப்படுகின்ற நடைமுறையானது நாட்டின் உயர்கல்வி அமுல்படுத்தப்படுகின்ற விகார உருவத்தை வெளிப்படுத்தி காட்டுவதற்கான சிறந்த உதாரணமாகும். இணைந்த சுகாதார பட்டப்பின் படிப்பு கற்கைநெறி ஆரம்பத்தில் துறை சார்ந்தோரினால் 3 வருடகால பட்டப்பின்படிப்பு கற்கை நெறியாகவே உருவாக்கப்பட்டது. அதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக உயர் நீதிமன்றத்தினதும் அங்கீகாரத்தோடு, எவ்வித தர்க்கபூர்வமான அடிப்படையுமின்றி அந்த பாடநெறியை மூன்றுவருட கால பாடநெறியாக உருவாக்கியது. தற்போது இணைந்த சுகாதார பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் இருப்பது பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்களிலன்றி பெருந்தெருவிலாகும்.
சிறுவர் திருமணம், சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களுக்கான சட்டம் அமுல்படுத்தப்படும் முறை, அதற்கென உள்ள நிறுவனங்களின் முறையற்ற கொடூர தன்மையை காட்டுகின்ற சிறந்த கண்ணாடியாக திகழ்கிறது. சிறுவர் பராயத்தை தாண்டிய இளைஞரொருவர் சிறுவர் வயதை தாண்டாத பெண்ணொருத்தியுடன் ஒன்றாக வாழ்கின்ற சந்தர்ப்பத்தில் கணவனை சிறையிலடைத்து சிறு வயது மனைவியை நன்னடத்தை பொறுப்பில் அடைத்து விடுகின்றனர். வழக்கு முடிவுக்கு வருவது அவர்கள் இருவரதும் வாழ்க்கையை நாசமாக்கிய நிலையிலாகும். இடம்பெற வேண்டியது கணவரை சிறையிலிட்டு சிறுவர் வயதிலிருக்கும் மனைவியை நன்னடத்தையின் பேரில் கைது செய்வதன்றி மனைவியின் நிலையிலுள்ள அவளை சிறுவர் வயதுடையவராகக் கருதி அவளுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்கி, அதற்காகவுள்ள நிறுவனங்களின் கண்காணிப்பின்கீழ் அவர்கள் இருவரையும் ஒன்றாக வாழ வழி விடுவதாகும். அதற்குப் பதிலாக மேற்கொள்ளப்படுவது, அவர்களிருவரதும் வாழ்க்கையை நாசப்படுத்துவதாகும். நாட்டின் சிறுவர் துஷ்பிரயோக சட்டங்கள் அமுல்படுத்தப்படுவது தவறு செய்கின்ற நபருக்கு தண்டனை வழங்கும் அதேவேளை, தவறுக்குள்ளான பிள்ளையின் வாழ்க்கையை சீரழித்த நிலைக்கு இட்டுச் செல்லும் முறையிலாகும்.
இந்த அலங்கோலமான நிலை ஒரு நிறுவனத்தில் மாத்திரம் இடம்பெறுவதொன்றல்ல. ஒட்டுமொத்த நிறுவன முறைமையிலும் இடம்பெறுகின்ற ஒரு குறைபாடாகவே உள்ளது. முழு நிறுவன முறையும் இயங்குவது பொது மக்களது சாராயத்தை உறிஞ்சி குடித்து, பொது மக்களை பாதிப்புக்குட்படுத்தும் முறையிலாகும். இந்த அலங்கோலமான ஊழல்மிகு நிறுவன முறையை மாற்றாது அவ்வாறே வைத்துக் கொள்வதனால் நாடு செல்லக்கூடிய எதிர்கால பயணம் எது?
நாம் கனவு காண்பது, நாட்டின் எதிர்கால பயணம் கருதிய, பயன்மிகு அர்த்தமுள்ள, முறையிலான புது அரசியலமைப்பொன்றுக்காக எனின், முழு அரசாங்கத்திலும் அதன் கீழ் செயல்படும் நிறுவன அமைப்புகளிலும் ஆழமான அடிப்படை மாற்றங்களை மேற்கொள்கின்ற அரசியலமைப்பொன்று பற்றி அல்லது அரசியலமைப்பொன்றின் உருவாக்கம்பற்றி கனவு காண வேண்டும். எதிர்பார்ப்பது அரசியலமைப்புக்கு முன் வைக்கின்ற, உடனடி இலகுவான திருத்தமொன்று மாத்திரமெனின், அவ்வாறான மாற்றத்தினால் சிறிய ஆட்சி மாற்றமொன்றினை மாத்திரமே பயனாக பெற முடியும். அவ்வாறான சிறிய மாற்றம் நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மற்றும் சிக்கல் நிறைந்த அரசியல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
நாட்டுக்கு அவசியப்படுவது மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்தை தோல்வியடையச் செய்வது மாத்திரமெனின் அதற்காக புதிய அரசியலமைப்பை மூலமாக பயன்படுத்தத் தேவையில்லை. அரசியலமைப்பு தயாரிப்பதனால் இடம்பெறுவது சிறிய சட்டங்களை இயற்றுவது மட்டுமன்றி நாட்டிற்குத் தேவையான அடிப்படைச் சட்டங்களை உருவாக்குவதாகும். அரசியலமைப்பு உருவாக்குவது நிகழ்காலத்திற்கு மாத்திரமன்றி எதிர்காலத்துக்குமாகும். நிகழ்காலத்துக்கு மாத்திரம் முக்கியத்துவமிக்க எதிர்காலத்துக்கு முக்கியத்துவமற்ற அரசியல் பிரச்சினையை மையமாகக் கொண்ட அரசியலமைப்பொன்றை உருவாக்கக்கூடிய நிலைக்குச் சென்றால் நாம் அறிந்தோ அறியாமலோ விளையாடப்போவது எதிர்கால பரம்பரையினரது வாழ்க்கையோடாகும். நாட்டுக்கு அவசியமாவது அரசியல் முறையில் அடிப்படை மாற்றத்தை மேற்கொள்கின்ற அரசியலமைப்பு உருவாக்கமெனில் அதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு தடையாக செயற்படுமாயின் மஹிந்த ராஜபக்ஷ அரசை தோற்கடிக்கச் செய்யும் அரசியலமைப்பு உருவாக்கத்தின் நோக்கத்தையும் அதனோடு இணைத்துக் கொள்வதால் தவறில்லை. எனினும் மஹிந்த ராஜபக்ஷ அரசை தோற்கடிக்கச் செய்வதற்காக அரசியலமைப்பை வெளிப்போர்வையாக பயன்படுத்துவது தவறு.
அரசியலமைப்பு உருவாக்கம்
அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு திட்டமிடுவதாக இருந்தால், அந்த அரசியலமைப்பில் மக்களுக்கு செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பதற்கு வழியேற்படுத்தும் அரசியலமைப்பாக இருக்க வேண்டும். நிகழ்கால மக்களது பங்களிப்பின்றி மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு சிறந்த அரசியலமைப்பாகக் கருதப்படுவதில்லை. தற்போது அது சர்வதேச சட்டங்களுக்குட்பட்டுள்ள அடிப்படைவாதமாக கருதப்படுகிறது. மக்களுக்கு சுமையேற்றக்கூடிய அரசியலமைப்பாக தெரிவு செய்யக்கூடிய சிறந்த உதாரணமாவது தென் ஆபிரிக்காவாகும். இதனது பின்புலத்தை இதற்கு முன் ஆராய்ந்தோம். தென்னாபிரிக்கா அவர்களது அரசியலமைப்பு வேலைத்திட்டத்தை புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் செயற்பாட்டோடு மாத்திரம் மட்டுப்படுத்தாது, ஐக்கிய இனம், ஜனநாயக சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டமாக அதனை மாற்றிக் கொண்டார்கள். அதனை எம்மாலும் மேற்கொள்ள முடியும். அதன் மூலம் சுதந்திரம் பெற்றுக் கொண்டபோது, முழுமைப்படுத்த முடியாது போன பிரதான இரு விடயங்களை பூரணப்படுத்திக் கொள்வதற்கான இயலுமை எமக்கு ஏற்படுகிறது. தென்னாபிரிக்கா அவர்களது அரசியலமைப்பு வேலைத்திட்டத்தில் மக்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய பாரிய கல்வித் திட்டமொன்றினை மேற்கொண்டார்கள். அதனை எம்மாலும் மேற்கொள்ள முடியும். எமக்கு ஐக்கிய இனமொன்றைப் போன்றே ஜனநாயக சமூகமொன்றை உருவாக்கிக் கொள்ள முடிவது, அவ்வாறு செயற்படுத்துகின்ற பாரிய கொள்கை ரீதியான வேலைத்திட்டத்தினால் மாத்திரமாகும். பல்லினவாத, உலகவாத கொள்கைகளினால் போஷிக்கப்பட்ட நவீன சமூகமொன்றை உருவாக்கிக் கொள்ள முடிவது அப்போது தான்.
அரசியலமைப்பு உருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்கேற்ப முறையாக மேற்கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும். உருவாக்கப்படப்போவது எந்த முறையிலான அரசியலமைப்பு என்பதைப்பற்றிய தெளிவான நோக்கு இருக்க வேண்டியதோடு, முதலில் அதற்கான அடிப்படையை இனங்கண்டு அவற்றிற்க்கான பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்வதோடு அந்த அடிப்படைகளுக்கமைய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு கால எல்லையொன்று இருப்பதோடு அது அனாவசியமாக குறுகிய அல்லது நீண்ட கால எல்லையாக இருக்கக் கூடாது.
அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிமுறைகள் ஜனநாயக முறையில் இருக்க வேண்டியதோடு, அனைத்து செயற்பாடுகளும் தூர நோக்குக் கொண்டதாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு மக்களை நேரடியாக தெரிவு செய்து கொள்ளக்கூடிய அரசியலமைப்பு சபையொன்றைப் போன்று, அதற்காக தெரிவு செய்து கொள்ளப்பட்ட ஆணைக்குழுவொன்றினை ஆரம்பித்து, ஆணைக்குழுவால் தயாரிக்கப்படுகின்ற அறிக்கையை அரசியலமைப்புக் குழுவினால் இறுதியாக பூரணப்படுத்தக்கூடிய நடைமுறை இடம்பெற வேண்டும்.
தயாரிக்கப்படுகின்ற ஆரம்ப அறிக்கை இரண்டாவது அறிக்கை, இறுதி அறிக்கைகளை பொது மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் பகிரங்கப்படுத்த வேண்டும். அறிக்கை தயாரிப்பு முடிவுக்கு வந்ததும், அரசியலமைப்பின் மூல தத்துவங்களுக்கு உட்பட்டவாறு அது தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதனை அதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் ஆராயப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கிக் கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பை பாராளுமன்ற அங்கீகாரத்துக்கு உட்படுத்திய பின் மக்களது அங்கீகாரத்துக்காக அபிப்பிராய வாக்கெடுப்பொன்றுக்கு முன் வைக்க வேண்டும்
நன்றி
விக்டர் ஐவன்
http://ravaya.lk/

Saturday, July 12, 2014

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணி கோத்தாபே - விக்டர் ஐவன்

கோத்தாபே ராஜபக்ஷ என்றொருவர் இலங்கை அரசியலினுள் இணைந்தது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்தாகும். அவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய பின்னர் ஒன்றரை தசாப்த காலம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வந்தார். அவர் பிரபல அல்லது பலம் பொருந்திய ஒருவராக அறியப்படுவது தனது சகோதரர் ஜனாதிபதியாக ஆகியதன் பின் இந்நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னணியிலாகும். அப்போது அவருக்கு மிகவும் அதிகாரமிக்க  பதவியாக கருதப்படக்கூடிய பாதுகாப்புச் செயலாளர் என்ற அந்தஸ்தும், பதவியும் கிடைக்கப் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த நான்காவது ஈழப்போரின் பாதுகாப்பு படைக்கான இணைப்பாளராகவும் அவரே நியமிக்கப்பட்டார்.
மேலும் அவர் தனக்கிருந்த ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் யுத்தத்தை தர்க்கரீதியானதொரு முடிவை நோக்கி கொண்டு செல்வதில் மிகப் பெரிய பணியொன்றை செய்தார். முப்படையினருக்கு அபிமானத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக செயற்படுத்தப்பட்ட பாரிய பிரசார நடவடிக்கையின் பின்னால் பிரதானமாக  தொழிற்பட்டவர் இவரோயாகும். யுத்த வெற்றியானது அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தையும் வீர வணக்கத்தையும் கொண்டுவந்து கொடுத்தது. யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட முப்பெரும் வீரர்களில் ஒருவராக அவர் ஆக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் அரச ஊழியர் என்ற வரையறைக்குள் இருந்த போதிலும் ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் நின்று அதிகூடிய அதிகாரங்களைப் பெற்ற ஒருவராகவும் அனைத்து கெபினட் அமைச்சர்களையும் விட உயர்ந்த அந்தஸ்த்துகளைக் கொண்டவராக மாறினார்.
ஜெனரல் பொன்சேகா நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டதிலிருந்து நாட்டினுடைய பாதுகாப்புச் சேவைகளுடன் சம்பந்தபட்ட பலம் மிக்க மனிதராக மாற்றமடைகின்றார். முப்படை தளபதிகள்பொலிஸ் மா அதிபருக்கும் அவருக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி சாதாரணமானதன்று. வானத்திற்கு பூமி போன்று பாரிய இடைவெளியாக காணப்பட்டது. ஜனாதிபதியைப் போன்று அவரது சகோதரர்களான பசில்,சமல் என்போரை அரசியலில் அனுபவமுள்ளவர்களாக அரசியல் ரீதியாக பதப்படுத்தப்பட்டவர்களாக கருத முடியுமாயினும் கோதாபே ராஜபக்ஷவை அரசியல் பிராணியாக பார்க்க முடியாது. அவர் (மிலிடரி) இராணுவப் பிராணி மாத்திரமே ஆவார். அனைத்து விடயங்களையும் இராணுவ நோக்கிலேயே பார்ப்பதற்கு முயற்சி செய்தார்.
கலகங்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்......
யுத்தத்தை முடித்த பின்னர் தோல்வியைத் தழுவியவர்கள் என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களை பராமரிக்கும் பொறுப்பையும் யுத்தத்தின் போது மாவீரன் என்ற நிலையில் இருந்த கோதாபேயிடமே ஒப்படைத்தனர். கோதாபேயின் மிலிடரி நிழலானது படிப்படியாக வடக்கு மக்கள் மீது மட்டுமல்லாது முழு நாட்டின் மீதும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய  நிலையை  தோற்றுவித்துள்ளது எனக்கூற முடியும்.
நாட்டினுடைய உள்நாட்டு கலகம் ஒன்றை அடக்கியதன் பிறகு தோல்வியைத் தழுவிய கலகக்காரர்கள் மற்றும் அவர்களின் மக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை வெற்றி பெற்ற பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பதில்லை. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாகும்.
71வது கலகத்தை தோற்கடித்த பின்னர் சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட சிறைக்கைதிகள்18000 பேரையும் கண்காணிக்கும் பொறுப்பை சிரிமா பண்டாரநாயக்க அரசாங்கம் அக்கலகக்காரர்களை தோற்கடித்த பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவில்லை. பதிலாக அவர்கள் அனைவரையும் பராமரிக்கும் பொறுப்பை சிறைச்சாலைகள் திணைக்களத்திடமே ஒப்படைத்தார்.  சாதாரணமாக பாதுகாப்பு படையை அவர்களது முகாம்களிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவது யுத்த சூழ்நிலையின் போது அல்லது விஷேட அனர்த்தங்கள் நிகழும் போதே ஆகும். யுத்த சூழ்நிலை முடிந்த மறுகணமே சிவில் நிர்வாகத்திற்கு இடமளிக்கும் வகையில் யுத்த கால சட்டங்களை நீக்கி பாதுகாப்புப் படையை மீண்டும் அவர்களின் தங்குமிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாகும்.
L.T.T.E யை தோல்வியடையச் செய்த நிகழ்வை நாட்டினுள்ளே நடந்த முதலாவது சந்தர்ப்பமாக அல்லாது மூன்றாவது நிகழ்வாகவே பார்க்க வேண்டும். (நடந்து முடிந்த J.V.P யின் இரு கலகங்கள்) அப்போது J.V.P கலகத்திற்கு சார்பற்ற தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் மத்தியிலும் கூட பாதுகாப்புப் படை அக்கலகத்தை அடக்கிய முறை குறித்து  கடுமையான விமர்சனமும் எதிர்ப்பும் காணப்பட்டது என்பதை ஜனாதிபதி பிரேமதாஸ அறிந்து கொண்டார். எனவேதான் கலகத்தை முடிவுக்கு கொண்டு வந்த உடனே நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இராணுவ முகாம்களை அகற்றிவிட்டு பாதுகாப்பு படையினரை அவர்களது தங்குமிடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்ற கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தியது அதனாலேயே ஆகும்.
அந்த நல்வழிமுறையே வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கும் பொருந்திச் செல்கிறது. ஆனால் அது கடந்த காலங்களைப் போன்று வடக்கு தமிழ் போராட்டத்தை தோல்வியடையச் செய்த பின் நடைமுறைக்கு வராமல் இருந்தமைக்கு கோத்தாபயே காரணமாகும். அவ்வாறு நிகழக் காரணம் அவருக்கு இராணுவ (மிலிடரி) பார்வையைத் தவிர அரசியல் பார்வை இருக்கவில்லை என்பதாக இருக்கலாம். சிலநேரம் கோத்தாபே பாதுகாப்பு செயலாளர் பதவியில் இல்லாமலிருந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் சிறிமா பண்டாரநாயகஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ போன்றோர் நடைமுறைப்படுத்திய அதே கொள்ளையை நடைமுறைப்படுத்தி இருப்பார். யுத்தத்தின் போது பாரிய பங்களிப்பொன்றைச் செய்து யுத்தத்தை வெற்றிக்கொண்டதால் கோத்தாபேயின் எந்த விவகாரங்களிலும் தான் தலையிடாது அவரின் விடயங்களை அவரின் விருப்பப்படி செய்து கொள்வதற்கு இடமளிக்கும்  கொள்ளையைத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் கோத்தாபே விடயத்தில் பின்பற்றினார். இக்கொள்கைதான் பாதுகாப்பு செயளாலருக்கு  யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாத அதிகூடிய அதிகாரங்கள் கொடுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனக் கூறலாம். கோத்தாபேக்கு தனது சகோதரனை மீறி செயற்படுவதற்கான தேவை இல்லாதிருந்தபோதிலும் அரசியல் விவகாரங்களை இராணுவக் கோணத்தில் பார்த்து செயற்படுவதன் காரணமாக அவர் தற்போது தனது சகோதரனினது மட்டுமன்றி அவரின் அரசாங்கத்தினுடைய அரசியல் புதைகுழியை வெட்டிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு ஆளாகியுள்ளார் எனக் கூறக்கூடியதாக உள்ளது.
இறந்தோரை நினைவு கூறல்
71வது கலகத்தின் போது இறந்தவர்களினது பெற்றோர்கள்,பிள்ளைகள் அவர்களை நினைவுகூர்ந்தனர். இரண்டாவது கலகத்தின் போதும் அவ்வாறே செய்தனர். இறந்தவர்கள் செய்தவற்றின் சரி பிழை எப்படிப்போயினும் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் இருக்கின்றது. ஆனால் கோத்தாபே ராஜபக்ஷ இதற்கு முன்னர் யாருமே செய்யாத வகையில் வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு தமது இறந்துபோனவர்களை நினைவுகூரும் உரிமையைக் கூட ஏற்றுக்கொள்ளாமைக்கு அவருக்குள்ளே அரசியல் இதயமன்று இராணுவ இதயமே காணப்படுகின்றது என்பதனால் இருக்கலாம்.
அவருக்கு இக்கலகங்களில் காணப்படும் சமூக,அரசியல் பின்புலம் குறித்த எந்தவிதமான புரிதலும் இருப்பதாக தென்படவில்லை. அவரின் இராணுவக் கண்களுக்கு தென்படுவதெல்லாம் கலகக்காரர்களினுள்ளே வாழ்ந்த பயங்கரவாதி மாத்திரமே ஆகும். பயங்கரவாதியொன்று உருவாகுவதற்கு பங்களிப்புச் செய்கின்ற சமூக,பொருளாதார காரணிகள் அவருக்கு விளங்காது. ஆகக்குறைந்த வகையில் தன்னால் தோற்கடிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையினரல்லஇந்நாட்டைச் சேர்ந்த மக்களின் பிள்ளைகள் சிலராகும் என்பதைக் கூட புரிந்து கொள்வதில் அவர் தோல்வி கண்டார்.
யுத்தத்தின் போது நிகழ்ந்த வரையறைக்குட்பட்ட செயற்பாடுகளை தேடிக் கண்காணிக்கும் நிலைக்கு அனுமதி வழங்காது தடையாக செயற்பட்டவர் கோத்தாபே ஆகும். நியாயமான உள்ளக கன்காணிப்பு விசாரணை ஒன்றை செய்ய அனுமதித்திருந்தால் அதன் விளைவாக இலங்கைக்கு மிக வேகமான முன்னேற்றப் பயணமொன்றை செல்வதற்கான வாய்ப்பை  பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது. அந்தக் கண்ணோட்டத்தில் அச்சந்தர்ப்பத்தை இலங்கைக்கு கிடைக்க விடாமற் செய்து இலங்கையை இலகுவாக எழுந்து நிற்க முடியாதளவிற்கான பெரும் சிக்கல் ஒன்றில் தள்ளிவிட்டதற்கான பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது கோத்தாபேயாகும். அண்ணன் ஜனாதிபதி தனது விருப்பத்துக்குரிய தம்பிக்கு விரும்பியதெல்லாம் செய்வதற்கு இடம் கொடுத்துவிட்டு மேலே பார்த்துக் கொண்டிருக்கும்  கொள்கையால் நாடு பெரும் சிக்கலுக்குள் சிக்கலாக மாறுவதற்கு அது காரணமாக அமைந்தது எனச் சொல்லலாம்.
கோத்தாபேயினால் நடந்த தவறு.......
கோத்தாபேயின் கைகளால் நிகழ்ந்த நாட்டிற்கு நடந்த மோசமான விடயமாக கருத வேண்டியது நாட்டை இராணுவ முகாம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதாகும். சிவில் அதிகாரிகள்          அமர வேண்டிய பொறுப்புகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தார். சரியான பயிற்சி கூட வழங்காது இராணுவ அதிகாரிகள் தொகையளவில் தூதுவராலய சேவைகளுக்கு அமர்த்தப்பட்டனர். கல்வியையும் இராணுவமயப்படுத்தினார். இதனால் நாட்டை இராணுவ பதுங்குகுழி நோக்கி தள்ளுவதற்கு மேலாக சிவில் அரசியல் நிறுவன முறைகளையும் விகாரப்படுத்தினார்.
குற்றவாளிகளை அவர்களது வழக்கை கேட்காது சுட்டுக்கொலை செய்யும் பயங்கர கலாசாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. அதனை உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து சட்டஜனநாயக அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான பாசிச செயற்பாடாக பார்க்க வேண்டியுள்ளது.
அரசியல் ரீதியாக அவரின் கைகளினால் நடந்த பயங்கரமான தவறுஉத்தியோகபூர்வமாகவும் உத்தியோபூர்வமற்ற வகையிலும் பாதுகாப்பு படையுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசியலுக்குள் உள்வாங்கியதாகும். அடையாள முக்கியத்துவம் கொண்ட சிலரை மர்மமாக கொலை செய்து இன்னும் சிலரை மர்மமாக கடத்தினார். சில ஊடக நிறுவனங்கள் பயங்கர தாக்குதலுக்கு உட்பட்டன. இவ்வாறு நிகழ்ந்த சில அவலட்சனமான நிகழ்வுகளின்போது பாதுகாப்புப் படையுடன் சம்பந்தமுடைய குழு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக விளங்கியது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் அக்கைங்கரியங்களை அவர் நிறுத்தவில்லை. பல்வேறு காரணங்களினால் நாட்டினுள் பல்வேறு பிரதேசங்களில் நடாத்தப்பட்ட ஆர்பாட்டங்களை தடுப்பதற்காகக்கூட உத்தியோகபூர்வமாக மட்டுமல்லாது உத்தியோகபூர்வமற்ற வகையிலும் பாதுகாப்பும் படையுடன் தொடர்பான குழுவை பயன்படுத்தினார். விடயங்களை நன்கு அறிந்து வைத்திருந்த அரசாங்கத்துடன் சம்பந்தபட்ட சிலர் அச்செயற்பாடுகளை ஆதரவாக பார்க்கவில்லை; பெரும் வெறுப்புடன் நோக்கினார். எனினும் அவர்கள் அதனை ஆங்காங்கே கிசு கிசு பேசினார்களே தவிர பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவிக்க பயப்பட்டனர்.
தீவிரவாதிகளை போஷித்து வளர்த்தல்.........
பாதுகாப்புச் செயலாளர் சில தீவிரவாத சக்திகளுக்கு பாலூட்டி பெரியவர்களாகும் வரை வளர்த்ததோடு நின்றுவிடாது அவற்றுக்கு பாதுகாப்பும் வழங்கினார். பொதுபல சேனா அமைப்பு இதற்கான சிறந்ததொரு உதாரணமாகும். ஞானசாரதேரர் வெளிக்காட்டும்அவரது துணிவு இயல்பான ஒன்று என்பதை விடவும் பாதுகாப்பு அமைச்சு பின்னணியிலிருந்து கொடுக்கும் அதிகார பலத்தால் உருவாக்கிக் கொண்ட ஒன்றாகும் என்றே கருதவேண்டும். அத்தேரரின் பல்வேறு நடிப்புக்கும் நாடகத்திற்கும் முன்னால் பாதுகாப்பு பிரிவானது அத்தேரர் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு இடமளித்துவிட்டு சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் அத்தேரருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் இருந்த மறைவான  நெருக்கத்தை அவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்ததனாலாகும். அரசாங்கத்திலுள்ள அதிகமான அமைச்சர்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அதனை அறிந்து வைத்துள்ளனர். அத்தேரர் நடித்துக் கொண்டிருந்த வீரதீரம்மிக்க பாத்திரத்தை அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பெருந்தொகையினர் அங்கீகரிக்காத போதிலும் அனைவரும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கை ஒன்றை கடைப்பிடித்தமைக்கு அத்தேரர் மீது செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றது கோத்தாபேயின் நிழல் என்பதனாலாகும். நாட்டிலுள்ள பிரபல்யமான பிக்குமார்களும் ஞானசார தேரரின் நடிப்பை அனுமதிக்காவிடினும் அவர்கள் அனைவரும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கையை கடைப்பித்தமைக்கு காரணமாகும் இதுவே ஆகும்.
ஹலால் பிரச்சினை தொடங்கிய காலப்பகுதியில் நாட்டில் அங்கீகாரமுள்ள முக்கிய பிரபல்யமான சில பிக்குமார்கள் பிரச்சினை முற்ற விடாது தடுத்து சமாதானமாக தீர்த்துக் கொள்வதற்கு முன் வந்தனர். அப்போது அவ்வனைத்து பிக்குமார்களையும் அவர்களது தொலைபேசி ஊடாக ஆபாசமாக திட்டித் தீர்க்கும் ஒழுங்கமைக்கப்பட்ட (ழுசபயnணைநன) நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தினார்கள். இது இப்பிக்குமார்களுக்கு பழக்கப்படாத அனுபவமாக இருந்ததோடுஎந்தளவிற்கு அவர்கள் பயந்தார்கள் எனின் அப்பிக்குமார்கள் குறிப்பிட்ட காலம் வரையில் தமது தொலைபேசிகளின் தொடர்புகளை துண்டித்தனர்.அதன் நோக்கம் என்னவெனில் பிரபல்ய மிக்க பிக்குமார்கள் அனைவரையும் பீதிக்குட்படுத்தி அவர்கள் அனைவரதும் வாய்களை மூடச்செய்வதாகும்.
இந்த முறைகேடான உறவு வெடித்துச் சிதறிய கட்டமே பேருவளை அனர்த்தமாகும்.புத்தசாசன பாதுகாப்பு அதிகார சபை ஒன்று கூட்டிய ஒன்றுகூடலானது பாரிய பிரச்சினையொன்றை தோற்றுவிப்பதற்கு காரணமாக அமையப் போகிறது என்பதை அப்பிரதேச அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருந்தனர். ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள்உறுப்பினர்கள் மட்டுமன்றி சில சிங்கள அமைச்சர்களும் பொலிஸ் தலைமைகளுக்கு கதைத்து கூட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோரியும் கூட அவர்கள் யாரும் அவ்வேண்டுகோளிற்கு உடன்படாமைக்கு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளையின் காரணமாக இருக்கலாம். அளுத்கம கூட்டத்தின் போது ஞானசார தேரர் தனக்குச் செய்ய முடிந்த அனைத்தையும் செய்தார். முழுப் பிரதேசமும் நனையும் வகையில் பெட்ரோலை ஊற்றிவிட்டு அத்தேரர் அவ்விடத்தைவிட்டும் சென்றார். அதன்பிறகு அந்நிலத்திற்கு நெருப்பு வைத்தவர்கள் பிறிதொரு கூட்டம். குழப்பம் விளைவித்தவர்கள் மத்தியில் சிவில் உடையில் பாதுகாப்புப் படையினரும் இருந்தார்கள் எனப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் கூறுகின்றனர். பேருவலை அனர்த்தத்தை தொடர்ந்து பொதுபல சேனாவின் முக்கிய தலைவரான கிராம விமலஜோதி தேரருக்கு விஷேட அறிவிப்பொன்றை செய்யவேண்டி ஏற்பட்டது. ஞானசார தேரரின் செயற்பாடுகள் புத்தமதத்துடனோ அல்லது பிக்கு அந்தஸ்துக்கோ பொருத்தமற்றதாகும் என தெரிவித்துவிட்டு தான் அவ்வமைப்பின் தலைமைத்துவத்திலிருந்து விரைவில்  விலகப் போகிறேன் எனவும் கூறினார்.
நிகழ்ந்த பாரிய அழிவின் பின்னர் பாதுகாப்புச் செயளாலருக்கு குற்றச்சாட்டுக்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து பொதுபல சேனாவிற்கும் தனக்கும் எந்தத்தொடர்புமில்லை என்பதை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிவிக்குமாறு ஞானசார தேரருக்கு பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார் என தோன்றுகிறது. இதுவரையில் ஊடகவியலாளர்கள் மிகச் சிலருக்கு மாத்திரமே தெரிந்த எனக்கு கேட்கக் கிடைத்த ஓர் இரகசியம் இதோ. ஒரு ஊடக நிறுவனமொன்றின் தலைவரை உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியமான ஒருவர் தொடர்புகொண்டு ஞானசார தேரருக்கு ஊடக சந்திப்பொன்றை (பேருவளை அனர்த்தத்தின் பின்னர்) வழங்குமாறு கேட்டுள்ளார். அவ் ஊடக செயலாளரிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்காததனால் சிறிது நேரத்திற்கு பின் பாதுகாப்புச் செயளாலரே அவருடன் தொடர்பை ஏற்படுத்தி ஞானசார தேரருக்கு ஊடக சந்திப்பொன்றை வழங்குமாறு கேட்டுள்ளார். பின்னர் அவ் ஊடக சந்திப்பில் ஞானசார தேரர் திரும்பத்திரும்ப கூறியிருப்பது தனது அமைப்புக்கும் கோத்தாபேயவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதையே ஆகும். அது பூனை சாக்குப் பையிலிருந்து வெளியே பாய்ந்தது போன்ற சந்தர்ப்பமாக பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வாறு ஒரு வரலாற்றுமிக்க சந்தர்ப்பமொன்றின் போது பிரபாகரனை யுத்த ரீதியாக வெற்றிகொள்வதற்காக முக்கியமான பெரும் பணியொன்றை செய்ததன் மூலம் மக்கள் மத்தியில் வீரன் என்ற நிலையை பெற்றுக் கொண்டிருந்த கோதாபே ராஜபக்ஷ இன்று நாட்டின் முன்னோக்கிய பயணத்தை குழப்புகின்ற ஒரு குழப்பவாதி என்ற நிலைக்கு ஆளாகியுள்ளார் என்றே கூறக் கூடியதாவுள்ளது.

Saturday, June 28, 2014

இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறைக்கு வயது 100!

வேலைக்குச் சென்ற அப்பா கலவரம் பரவுவதாக செய்தி அறிந்து ஓடிவந்தார். பள்ளிக்குச் சென்ற அண்ணாவை அழைத்துவர பாடசாலைக்கு ஓடினார். அவரவர் பிள்ளைகளை அழைத்துச் செல்ல தாய்மாரும் தந்தையரும் பயப் பீதியில் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தனர். அண்ணாவை அழைத்து வந்ததும் எங்கள் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்அயல் வீட்டுச் சிங்களவர். தங்கள் வீட்டை தாள் இட்டு பூட்டி எங்களை ஒழித்து வைத்தனர். அருகில் இருந்த எங்களது வீடு தீயிட்டு கொழுத்தப்பட்டது. அங்குள்ள பல வீடுகள் வியாபாரங்கள் தீக்கிரையானது. நாங்கள் ஒழிந்திருந்த வீட்டையும் காடையர்கள் வந்து தட்டினர் தமிழர்களை ஒழிந்து வைத்திருக்கிறீர்களா என்று கூச்சலிட்டு கத்தி விட்டுச் சென்றனர். நாங்கள் கட்டிலுக்குக் கீழ் ஒழிந்திருந்தோம். பின்னர் மனிதாபிமானமிக்க பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் ஜீப்பைக் கொண்டு வந்து எங்களை ஏற்றிக் கொண்டு அகதிமுகாம் நோக்கிச் சென்றார். காடையர்கள் பொலிஸ் ஜீப்பையும் விட்டு வைக்கவில்லை. அதனைக் கலைத்தனர். பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைக் கலைத்தார். நாங்கள் பாதுகாப்பாக அகதிமுகாம் வந்து அங்குள்ள நூற்றுக்கணக்காணவர்களுடன் இணைந்துகொண்டோம்.

இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் அழுத்கமவில் நடைபெறவில்லை. 37 ஆண்டுகளுக்கு முன் அனுராதபுரத்தில் எனக்கு ஆறு வயது இருக்கும் போது இடம்பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிராக ஜே ஆர் அரசு கட்டவிழ்த்துவிட்ட கலவரம். இவ்வாறான இனக் கலவரங்கள் இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. 1915இல் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தின் 100வது ஆண்டு அண்மித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பழைய வரலாற்றை து}சி தட்டிப் போட்டுள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே சிங்கள பெளத்த இனவாதத்தை கக்கிய அநாகரிக தர்மபாலா 1915.ல் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரத்தை து}ண்டிவிட்டார்.

இநாகரிக தர்மபாலாவின் பேச்சுக்களில் இருந்து: இப்போது துவசம் செய்வதற்கு முன்பாக பிரகாசமான அழகிய தீவு சிங்கள ஆரியர்களால் சொர்க்கபுரியாக்கப்பட்டது. அந்த மக்களுக்கு மதமில்லாமை தெரியாது. மிருகக்கொலை, களவெடுப்பது, பொய்சொல்வது, விபச்சாரம், மது அருந்துவது போன்ற தீங்குகளுக்கு கிறிஸ்தவமும் இந்துத்துவமுமே பொறுப்பு. மதநம்பிக்கையற்ற அரக்கர்கள் வரலாற்று ரீதியாக உன்னதமான மக்களை மெல்ல மெல்ல இல்லாமல் செய்து வருகிறார்கள்.

மொகம்மதீயன்களும் எங்கிருந்தோ வந்தவர்களும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து யூதர்களைப் போல செல்வச் செழிப்புடன் வருகிறார்கள். 2358 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக்கொண்ட இந்த மண்ணின் சிங்கள மைந்தர்கள், வேற்று உலகத்தினரிடமிருந்து இந்த நாட்டைக் காக்க ஆறாக குருதியைச் சிந்தி இருக்கிறார்கள். ஆனால் பிரித்தானியருடைய பார்வையில் இவர்கள் வீடற்றவர்களாகவும், வேலையற்றவர்களாகவும் பரதேசிகளாகத் தெரிகின்றனர். தென்னிந்தியாவிலும் எங்கிருந்தெல்லாமோ வந்த மொகம்மதீயர்கள் எங்கள் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களில் வியாபாரம் என்னவென்று தெரியாதவர்களை காண்கிறார்கள். இதன் விளைவாக மொகமதீயர்கள் செல்வம் ஈட்டுகின்றனர். மண்ணின் மைந்தர்கள் சுவரோடு முட்டி மோதி வீழ்கின்றனர்.என்றும் பேசியுள்ளார்.

கலகொட அத்தே ஞானசாரா அண்மையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்,”இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றதுஇ இன்று ஒரு மரக்கலயா (சிங்கள பேச்சு வழக்கில் முஸ்லீம்களைக் குறிப்பது) அல்லது பறையா (சிங்கள பேச்சு வழக்கில் தமிழர்களைக் குறிப்பது) ஒரு சிங்களவனை தொட்டாலும் ……… அதுவே அவர்களுடைய முடிவாகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக அநாகரிக தர்மபால நாகரீகமாக ஆற்றிய உரைக்கும் பெளத்த பல சேனாவின் கலகொட அத்தே ஞானசார சிலதினங்களுக்கு முன் அழுத்கமவில் அநாகரீகமாக ஆற்றிய உரையும் அடிப்படையில் ஒரேமாதிரியான போக்குடையவை.

பெளத்த பயங்கரவாதத்தின் முகம் என ரைம்ஸ் சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்ட பர்மாவில் முஸ்லீம் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிரான வன்முறையை முன்னெடுத்த அஸ்ஹின் விரது தேரோவை ஞானசார சென்று சந்தித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். விரது ஞானசார கூட்டு தெற்காசியாவில் இனவாத பெளத்தத்தை பலப்படுதும் நீண்டகால நோக்கத்தைக் கொண்டுள்ளது.

தற்போது ராஜபக்ச அரசுக்கு நெருககமான பெளத்த பல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் மிகவும் கட்டுப்பட்டுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியில் மட்டுமே தங்கியுள்ள தற்போதைய அரசுக்கு இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட இனக்கலவரங்கள் உடனடி விளைவாக வாக்கு வங்கியை நிரப்ப உதவலாம். ஆனால் இவ்வாறான சம்பவங்கள் மிக மோசமாக கட்டுக்கடங்காமல் செல்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. அதன் விளைவுகள் வாக்கு வங்கியை மிக மோசமாக பாதிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. விரது ஞானசார கூட்டு ஆளும் அரசின் வாக்கு வங்கிக்கு அப்பாலும் தனது நலன்களைக் கொண்டுள்ளது.
அண்மைய முஸ்லீம் களுக்கு எதிரான வன்செயல்களில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர், 150 பேர் காயமடைந்து உள்ளனர், 580 கட்டிடங்கள் எரிக்கப்பட்டு உள்ளது, அவற்றில் 150 வீடுகள், 17 பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டு உள்ளது, 2450 பேர் அகதிகளாகி உள்ளனர் என முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மொகமட் அஸ்லம் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அயலில் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்குப் பெயர்போன நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்துள்ளார். மத்திய கிழக்கில் முஸ்லீம் மதப் பிரிவினரிடையே உள்ள முரண்பாடுகள் உள்நாட்டு யுத்தமாகி உள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் சுனி முஸ்லீம் பிரிவினர். இன்று சர்வதேச நாடுகளால் ஆட்சியில் ஏற்றப்பட்டவர்கள் ஷியா முஸ்லீம் பிரிவினர். சர்வதேசம் பயங்கரவாதமாகப் பார்க்கின்ற நாளாந்த செய்திகளில் தலைப்புச் செய்தியாக சுனி பிரிவைச் சேர்ந்த ஜிகாதிகள் மாறியுள்ளனர். சுனி ஜிகாதிகளுக்கு எதிரான போரில் தற்போது ஈரானும் சர்வதேசத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இவற்றின் பின்னணியில் இலங்கை முஸ்லீம் ஒருவர் பாகிஸ்தானில் பயிற்றப்பட்ட ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது போன்ற செய்திகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

இவற்றின் பின்னணியிலேயே இலங்கையில் முஸ்லீம் களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் இத்துடன் நிண்றுவிடப் போவதில்லை. இனவாத பெளத்தத்தை நிர்ணயிக்கும் உறுதிப்படுததும் போக்கின் ஒரு அங்கமே.
இதனைப் புரிந்துகொள்வதும் தெரிந்து வைத்திருப்பதும் போதுமானதல்ல. இதனை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாம் பல்வேறு இனக்கலவரங்களைக் கண்டு வந்தவர்கள். ஆனாலும் இந்தக் குறுகிய அளவான இனவாதிகளுக்கு எதிரான பலமான சேனை ஒன்றைக் கட்ட முடியாதவர்களாக உள்ளோம். காலத்துக்குக் காலம் இனக்கலவரங்கள் வரும்போது தேர்தல் காலத்துக்கு முன்பாகவும் இனக்கலவரம் பற்றி பேசுபவர்கள் தேர்தலின் போது பச்சை இனவாதத்தை கக்குகின்றனர். இதற்கு சிங்கள> தமிழ்> முஸ்லீம் அரசியல் வாதிகள் விதிவலக்கல்ல.

வெறுமனே ஆட்சி மாற்றத்தையொட்டிய ஐக்கிய முன்னணி உருவாக்கம் அடிப்படையில் உள்ள பிரச்சினைக்கு தீர்வாகாது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன் அடிப்படையில் மிகப் பலமான ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த ஐக்கிய முன்னணி இவ்வாறான இனவாத சக்திகளுக்கு எதிராகவும் மக்கள்விரோத சட்டதிட்டங்களுக்கு எதிராகவும் தீவிரமாகச் செயற்பட வேண்டும். இன, மத, அரசியல் பேதங்களைக் கடந்த இந்த ஐக்கிய முன்னணியானது நாட்டின் மக்களின் நலனைக் கண்காணிக்கின்ற அமைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு எதிர்கொள்ளல் செயன்முறையில்லாமல் தனித்தனி சம்பவங்களாக இவ்வாறான கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

இலங்கையில் உள்ள நான்கு இனக்குழுமங்கள் மத்தியிலும் ஆழமான இன உணர்வுகள் இருந்த போதும் இனக்கலவரங்களின் போது பொதுமக்கள்தங்களை ஈடுபடுத்தியது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. பாதிக்கப்பட்டவர்களிலும் பார்க்க பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆகவே இந்த மானிடப் பண்பை முதலீடாகக் கொண்டு இன ஐக்கியத்துக்கான மக்கள் பல சேனா ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சிங்கள பெளத்த மக்கள் தங்கள் மீது வீசப்பட்ட இனவாதச் சேற்றை கழுவிக்கொண்டிருக்கையில் சிங்கள பெளத்த இனவாதிகளால் மீண்டும் அவர்கள் மீது இனவாதச் சேற்றை வாரி இறைத்துள்ளனர். ஆறுமுகநாவலரை வைத்துக் கொண்டு தமிழர்கள்- சைவர்கள் எப்படி சாதியத்தை இல்லாமல் ஒழிக்க முடியாது> அவ்வாறே சிங்களவர்கள் பெளத்தர்கள் அநாகரிக தர்மபாலாவை வைத்துக்கொண்டு பெளத்த விரோத சிந்தனைகளை ஒழிக்க முடியாது. தள்டுவே சோமராம (எஸ் டபிள்யு ஆர்டி பண்டாரநாயக்காவை படுகொலை செய்த பிக்கு), கொலன்னாவே சுமங்கள தேரோ (ஜாதிக ஹெல உருமய ஸ்தாபகர்) கொட்டுஹல ஞானசாரா போன்றவர்கள் அநாகரிக தர்மபாலவின் சிந்தனைகளில் வளர்க்கப்பட்டவர்கள்.

இலங்கை மக்களை புத்தரோ, சிவபெருமானோ, யேசுவோ காப்பாற்றப் போவதில்லை. அப்படி அவர்கள் காப்பாற்றுவதாக இருந்தால் நாங்கள் இங்கு கூடியிருக்கத் தேவையில்லை. அந்த மக்களே தங்களைக் காப்பாற்ற
வேண்டும். அதற்காக அவர்கள் மனித நேயத்தின்

அடிப்படையில் ஒன்றுபட வேண்டும்.
நன்றி:
ஜெயபாலன் த |லண்டன்
தேசம் நெட்