Monday, February 17, 2014

இலங்கையின் இன்றைய அரசியல் களநிலவரமும் முஸ்லிம்களும்.

ஜெனீவாவில் மார்ச் மாதம் இலங்கைக்கு அமெரிக்கா தலைமையில் எதிராக கொண்டுவரப் படவுள்ள போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் மீறல் பிரேரணை இன்று தேசத்தினதும் பிராந்தியத்தினதும் கவனத்தை கவ்வியுள்ளது.

சரவதேச மற்றும் பிராந்திய அரங்கில் மேலைத்தேய ஆசிய மற்றும் தென்னாசிய சக்திகளுக்கிடையிலான பனிப்போர் போன்றதொரு அதிகாரப் போட்டா போட்டியிற்கு இலங்கையின் கள நிலவரங்களை சாதகமாக்கிக் கொடுப்பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.

சரவதேச சமூகம் என அழைக்கப்படும் மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் காலடியில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழ் தேசிய அரசியலையும் கதியென்று கிடக்கச் செய்வதில் தற்போதைய அரசியல் தலைமை குறிப்பாக போருக்குப் பின்னர் செய்துவருகின்ற பாரிய அரசியல் தவறுகள் அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் குறிப்பாக அரசியல் ரீதியாக அரவணைத்துக் கொள்ளப் படவேண்டிய ஜனநாயக நீரோட்டத்தில் உள்ள தமிழ்த்தேசிய தலைமையினை குறிப்பாக வடமாகாண சபை நிர்வாகத்தினை இந்த அரசியல் தலைமை தமக்கு சாதகமாக வென்று கொள்ளாது பாரிய அரசியல் இராஜதந்திர பிழைகளை செய்து வருகிறது.

அதேபோன்று தமக்கு எதிராக சர்வதேசமே சுனாமிபோல் திரண்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் தேசத்தின் சுதந்திரத்திற்கும் ஒருமைப் பாட்டிற்கும் சமாதான சகவாழ்விற்கும் பாரிய பங்களிப்பினைச் செய்த அதேபோன்று யுத்தத்திலும் சமாதானத்திலும் பாரிய விலையினைச் செலுத்தியுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள காடைத் தனங்களை அரசினால் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் போனமை அல்லது அவ்வாறான தரப்புக்களை அரசில் பங்காளிகளாக கொண்டுள்ளமை தற்போதைய அரசியல் தலைமை தமக்குத் தாமே இழைத்துக் கொண்டுள்ள மிகப் பெரும் அரசியல் தவறாகும்.

சர்வதேச முஸ்லிம் உம்மத்தாயினும் சரி, இலங்கை முஸ்லிம் சமூகமாயினும் சரி சர்வதேச சமூகம் எனும் மேலைத்தேய யூத சியோனிச மேலாதிக்க சக்திகளின் மீது நம்பிக்கை வைக்காவிடினும், தேசிய அரசியலில் முஸ்லிம்களது நிலை சரணாகதியாகவும் அதேவேளை பெரும் அவநம்பிக்கையை தோற்றுவித்துள்ளமையும் கவலைக்கிடமான அம்சமாகும்.

அதிகாரத்தையும் அச்சுறுத்தலையும் அல்லது பேரின மேலாதிக்கத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகளின் மீது பிரயோகிப்பதன் மூலம் இலங்கையின் எந்தவொரு அரசியல் தலைமையும் தத்தமது சொந்த அரசியலையும் மொத்த தேசிய அரசியலையும் முகவர்களூடாக முன்கொண்டு செல்ல முயல்வதாயின் அது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாக மாறிவிடலாம்.

ஆட்சியில் உள்ள எந்த அரசாயினும் இதய சுத்தியுடன் சிறுபன்மயினரோடு குறிப்பாக முஸ்லிம்களோடும் சமாதன சகவாழ்விற்கான அடித் தளங்களை இடாவிடின் அதேவேளை சர்வதேச பிராந்திய சக்திகளின் கூலிப் படைகளாக தொழிற்படும் இன மத வெறியர்களை பூரண கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவராவிடின் மத்திய கிழக்கில் பதட்டத்திற்கு பாலஸ்தீன் மையமாக இருப்பதுபோல் பிராந்தியத்தில் பதட்டத்திற்கு இலங்கை மையமாக மாறிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.

தற்போதைய அரச தலைமையை (இலங்கையை அல்ல) சர்வதேச அரங்கில் ஆட்சி மாற்றத்தினை இலக்காகக் கொண்டு தனிமைப் படுத்தவே இலங்கையில் கூலிப்படைகளைக் கொண்டு இனமத வெறி பிரச்சாரங்களை நோர்வே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் மேற்கொள்வதனை பல்வேறு தரப்புக்களும் உணர்த்தியுள்ள நிலையிலும் அரசியல் தலைமை முஸ்லிம் சமூகத்தின் உள்ளக மற்றும் சர்வதேச அரசியல் பரிமாணங்களை அவற்றின் சரியான கோணங்களில் உள்வாங்கத் தவறியுள்ள அதேவேளை அவற்றின் அரிச்சுவடிகளைக் கூட சரணாகதி முஸ்லிம் அரசியல் தலைமைகள் அறியவில்லை அல்லது அதற்கான அடிப்படைத் தகைமைகள் அவற்றிடம் இல்லை என்பதுவும் மிகவும் கவலைக் குரிய விடயமாகும்.

அஷ்-ஷெய்க் இனாமுல்ல மஸீஹூத்தீன் 

Thursday, February 13, 2014

வண. சோபித தேரர் அவர்கள் தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு விரிவான நேர்காணல்

நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும்.  பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்த தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம்.
இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.  சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.
ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவு செய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு  பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்க வேண்டும்.  சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். என கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி  ஓமல்பே சோபித தேரர் தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இன்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என  கூறிவருகின்றீர்களா?

பதில்: 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால்  முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புத்தான் இதுவரை நடைமுறையில் இருக்கின்றது. அன்று ஆறுக்கு ஐந்து என்ற பெரும்பான்மை அதிகாரம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு இருந்தது.  இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திதான் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால்  சர்வாதிகாரப் போக்கு  உண்டாகும் என  தெரிவித்தார். எனவே இதனை நீக்க வேண்டும் எனவும் அவர் குரல் எழுப்பினார்.  அதேபோல பேராசிரியர் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் த சில்வா, சி.விக்கிரமசிங்க போன்ற இடதுசாரித் தலைவர்கள் ஹைபாக் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றையும் பேரணி ஒன்றையும் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக  நடத்தினர்.  அன்றிலிருந்து இன்றுவரை  தொடர்ந்து எதிர்ப்புக்கள்  வந்துக்கொண்டே இருக்கின்றன.

அதேபோல, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த போது  ஜனாதிபதியுடைய அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதாகக் கூறி  நாள் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் அதை செய்யவில்லை.  எனவே  தான் ஜே.வி.பி.யும் கூட்டணியில் இருந்து விலகியது. சந்திரிக்காவிற்கு  நிறைவேற்று முறைமையை மாற்றக்கூடிய அதிகாரம் இருக்கவில்லை.

அடுத்தபடியாக மகிந்த ராஜபக்ஷ அந்தக் காலம் முதலேயே  ஜனாதிபதி முறைமையை மாற்றவேண்டும் என கதிர்காமத்திற்கு நடைபவணி சென்றார். இந்த நடைபவணியின் நோக்கத்தில்  நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதே இருந்தது.  மகிந்த ராஜபக்ஷ, அணுரபண்டாரநாயக்க போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவொன்றும் இருந்தது.  அடுத்தபடியாக மகிந்த சிந்தனையில் நான்  ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின்  அதிகாரங்களை  பாராளுமன்றத்திற்கு வழங்கி  பிரதமர் ஒருவரை நியமிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதை செய்யவில்லை. ஆனால், அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையிருக்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி  நீதித்துறையில் தலையிட்டார்.  அதனால்  நீதியரசர் நெவில் சமரகோன் பதவி விலகினார்.  இன்று  நீதி, நிர்வாகம், நிதி போன்ற எல்லா துறைகளிலும் ஜனாதிபதியின் தலையீடு இருக்கிறது. அதன் காரணமாகவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு எதிராக வாதம் எழுந்துள்ளது.  நிறைவேற்று அதிகாரமுறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி கூட அதை எதிர்க்கிறது.  நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குகின்ற காலம், தேவை  ஏற்பட்டுள்ளது.  இன்று எந்த கட்சி இந்த முறைமையை ஆதரிக்கின்றது என்பதை நான் கேட்டுகொள்ள விரும்புகின்றேன். அதற்காக பல கட்சிகளுடன்  கலந்துரையாடியுள்ளேன். கூடிய விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும்.

கேள்வி : நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் அதற்காக எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள்?
பதில்:  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முதல் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். ஆரம்பத்தில் எங்களுக்கு என பிரதி நிதி மாவட்ட அடிப்படையில் இருந்தார். ஆனால், இன்று  மாகாண மட்டத்திலேயே ஒரு பிரதிநிதி இருக்கின்றார். மாவட்ட பிரதிநிதி எனும் போது அதிகளவு பொறுப்புக்கூறவேண்டியவராக இருப்பார். ஆனால், மாகாணம் எனும் போது  பெரிய நிலப்பரப்பில்  அதிக மக்களை உள்ளடக்கி இருப்பதால் பொறுப்புக்கூறுவது கடினம். தலைவர் என்ற  பெயர் மட்டுமே இருக்கும்.  கோடிக்கணக்கில் மாகாணத்திற்கு செலவு செய்வார். அதில் குறித்த மாகாணத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கூறமுடியாது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது. மாகாண சபைக்கு கூட தெரிவு செய்ய மாட்டார்கள்.

எனவேலஞ்சம் ஊழல் அதிகரிக்கின்றது. தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பதவிக்கு வந்த பின்னர்  மாறுகின்றனர். தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என அமைச்சர் குணவர்தன  தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினது அறிக்கையும் வெளியிடப்பட்டது. இருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அரசாங்க அறிக்கையின் படி சிறுபான்மை சமூகத்தினரும்  தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள்.

அடுத்ததாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களை கேட்காமல் கட்சி மாறுகின்றனர்.  மக்கள் வழங்கிய வரப்பிரசாதத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றனர்.  இன்று  பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது விலைபேசி விற்கக் கூடிய ஒரு பொருளாகிவிட்டது. இது விலைபோகும் பதவி என்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை மாற்றப்பட வேண்டும். கட்சி மாறுவதாக இருந்தால் கட்சியில் இருந்தது விலகி ராஜினாமா செய்ய வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை வரையறைபடுத்த வேண்டும். லலித் எத்துலத் முதலி காலத்தில் பாராளுமன்றத்திற்கு 25 உறுப்பினர்கள்  போதும் என குறிப்பிட்டார்.  ஆனால், இன்று குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி  பாராளுமன்றத்தை நிரப்பி விட்டிருக்கின்றார்கள்.
தேர்தல் ஆணையாளருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.  கடந்த  கால தேர்தல்களில் தேர்தல் வன்முறைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று  தேர்தலில் குற்றவாளி யார் என்று தெரிந்திருந்தும் அவர்களை கைதுசெய்ய முடியாதளவிற்கு  அதிகாரமில்லாதவராக தேர்தல் ஆணையாளர் இருக்கிறார். அடுத்தது நீதித்துறையில் தலையிடுகின்ற அதிகாரத்தை குறைக்க வேண்டும்.  நீதியான சுதந்திரமான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டும். தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் ஊடகவியலாளர்கள், மக்கள், குற்றவாளிகள், நீதித்துறை, பொலிஸ் போன்ற அனைவரையும் தன்வசப்படுத்தி  நடத்துகின்றனர்.  இதனால் நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவொன்று  அதிகாரத்துடன் உருவாக்கப்படவேண்டும்.  சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு எவ்வளவு ஊழல் இடம்பெற்றிருக்கிறது என்பதை  இந்த ஆணைக்குழு நிரூபிக்க வேண்டும். இன்று ஒரு அமைச்சருக்கான செலவு 4000 கோடி என்று கூறப்படுகிறது. சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவருக்கு இத்தகைய செலவுகள் எப்படி அதிகரித்தது. அடுத்ததாக தகவல் அறியும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். செலவு செய்கின்றார்கள் என்று சொல்லும் போது எவ்வளவு செலவு செய்கின்றார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகவல் அறியும் சட்டம் அவசியம்.

குற்றம் செய்தவர் கேள்வி கேட்கின்ற நிலைமையை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில்  பார்க்க முடிந்தது. சுதந்திரமான நீதித்துறை இங்கு இல்லை. இன்றுள்ள பிரதம நீதியரசர் ஜனாதிபதியுடைய ஆலோசகர். அவர் எவ்வாறு ஜனாதிக்கு எதிரான தீர்ப்பொன்றை வழங்குவார். மாவட்ட நீதிவான், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிபதிகள் போன்ற  அனைத்து நீதித்துறை நியமனங்களையும் ஜனாதிபதியே வழங்குகின்றார். அவரால் நியமனம்  பெறும் போது  இலங்கை அரசுக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலைமையை அந்த  நியமனம் உறுதிப்படுத்துகின்றது. சட்டமா அதிபர் திணைக்களமும்  ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்கு கீழே இருக்கிறது.

இது தொடர்பாக இன,மத, மொழி கடந்து மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவு செய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு  பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்க வேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18¬ ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஒருவர் எத்தனை முறைவேண்டுமானாலும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படலாம் என்ற நிலைமை மாற வேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார குமாரதுங்கவை  பொதுவேட்பாளராக  நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்: யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் எமக்கு கவலை இல்லை. ஆனால், அவர் 6 மாதங்களே பதவி வகிக்க வேண்டும்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நாடி  பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருவதாக நானும் அறிந்தேன். அதற்கு அவர் தெளிவான ஒரு பதிலை இன்னும் அளிக்கவில்லை.  எங்களுடைய கொள்கைக்கு இணங்கி ஒருவர்  போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் அவரை நாங்கள் பொதுவேட்பாளராக முன்நிறுத்துவோம். பொதுவேட்பாளர் என்பது இங்கு முக்கியம் அல்ல. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியம். சந்திரிக்கா விருப்பப்பட்டால் பொதுவேட்பாளராக நிறுத்த   நாங்கள் தயார்.

கேள்வி :  ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நீங்கள் நிற்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்:  நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும்.  பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்த தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம்.

கேள்வி : வடமாகாண சபை சுயாதீனமாக செயற்பட முடியவில்லை என வடமாகாண முதலமைச்சர் கூறுகின்றாரே இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்: சுயாதீனமாக செயற்படமுடியாமைக்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமையே காரணம்.  பொலிஸ், காணி ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இருக்குமாக இருந்தால் மாகாண சபையும் சுயாதீனமாக செயற்பட முடியும்.  மாவட்ட  ஆட்சிமுறை இருந்தால் மாகாணசபை  இல்லாமல் செய்யப்படும். மாகாண சபையை பெரியதொரு நிலப்பரப்பாக அரசாங்கம் பார்க்கின்றதோ தெரியவில்லை.  எனினும் மாகாண ஆட்சி முறைமை  சீராக நடைபெறுவதற்கு அரசியல் யாப்பு நடைமுறையை பின்பற்றினாலேயே போதுமானதாகும்.

கேள்வி :  தென்,மேல், மாகாண  சபைத் தேர்தல்களில்  நடிகர் நடிகைகள் வேட்பாளராக நிறுத்தப்படுவது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்: எந்தவொரு தொழிலுக்கும் அனுபவம், தொழில் தகைமை என்று இருக்கின்றது. இந்தத் தொழிலை இவர்கள் தான் செய்யவேண்டும் என்று இல்லை. தகுதி இருந்தால் செய்யலாம். ஆனால, அரசியல் என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை.  பொதுமக்கள் நலன்கருதிய ஒரு சேவை. முழு நாட்டையும் நிர்வகிக்க வேண்டும்.  அந்த செயற்பாட்டில்  எல்லோராலும் ரூடவ்டுபட முடியாது. இது மக்களை திசைதிருப்பி வாக்குகளை சிதறடிக்கும் ஒரு முறையாகும்.நடிகை,நடிகர்கள்,பாடகர்கள் முகத்தைப் பார்த்து புள்ளடியிட வேண்டாம். எந்தவொரு கட்சியிலும் வேட்பாளராக இருந்தாலும் உங்களுக்கு இவரால் ஏதேனும் பயன் இருக்கின்றதா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கேள்வி : ஆட்சி கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா?
பதில்: ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று அரசாங்கத்திற்குள்ளேயே குழப்பங்கள் தோன்றியுள்ளன.   இந்த குழப்பங்களே ஆட்சி கவிழ்வதற்கான சந்தர்ப்பங்கள். சிறந்த முறையில்  நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  இந்த ஆட்சியை மாற்றியமைக்க முடியும். பிரதமருக்கு எதிராக  அரசாங்கத்திற்குள்ளேயே  பிரச்சினை எழுந்துள்ளது. இன்று பிரதமர் நாளை ஜனாதிபதி என்ற  நிலை உருவாகலாம்.  வேறொரு நாட்டில்  ஒரு ஜனாதிபதியுடைய ஆட்சியில்  பெருந்தொகையிலான போதைவஸ்து  இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் ஜனாதிபதியே ஆட்சியிலிருந்து  பதவிவிலகுவார். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை.  எனவே இந்த நிலை மாறுவதற்கு மக்களே சிந்திக்கவேண்டும்.

கேள்வி : ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக  மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவரப்போவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? அதற்கு உங்களுடைய பங்கு எவ்வாறு அமையும்?
பதில்: நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா.  இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது.  இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரியவில்லை.18ஆவது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரையாகும்.  இலங்கை அரசாங்கம்  ஐ.நா.பிரதிநிதிகளை வரவழைப்பதற்காகவே கதவுகளை திறந்துவிட்டுள்ளது.

அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை பின்பற்றினாலும் நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன். அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை.  இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.  சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.

கேள்வி: வடமாகாண சபை சுயாதீனமாக செயற்பட நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்:  ஆளுநரை வெளியேற்ற வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமென்பதே வடமாகாண சபையின் கோரிக்கை. உண்மையில் ஆளுநரை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். கிறீஸ் போன்ற நாடுகளில் ஆளுநர் ஒருவரை தெரிவு செய்வதில் பல நடைமுறைகள் இருப்பதை நான் அவதானித்தேன். நிர்வாக சேவையில் 15 வருடங்கள் அனுபவமும்  பரீட்சைகளில் சித்தியடைந்த பின்னருமே ஒருவரை ஆளுநராக அங்கு தெரிவுசெய்வார்கள். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை. இதனால் சிவில்  சமூகத்திற்கு  பிரச்சினை எழுகின்றது. அதேபோல வடமாகாண சபை கூறும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்படி வழங்கினாலும் மாவட்ட ஆட்சிமுறைமை உருவாக்கப்பட வேண்டும்.

Thursday, February 6, 2014

சுதந்திர இலங்கையில் மக்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் சில

உலக வரலாற்றினை எடுத்துக் கொண்டால்சகல பிரச்சினைகளுக்கும் மையமாகக் கொண்டிருப்பது அதிகாரமும், ஆட்சியும்தான். இலங்கை பிரித்தானிய பேரரசிற்குக் கீழ்ப்பட்ட குடியேற்றம் ஒன்றாகவிருந்தது. எமது நாடு மட்டுமல்ல ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும் குடியேற்றவாதத்திற்குட்பட்டவையாக இருந்தது.  ஒரு நாடு தன்னுடைய நாட்டு;க்கு மேலதிகமாக இன்னும் பல நாடுகளைத் தனது அதிகாரத்திற்குட்படுத்தி  அவற்றை ஆட்சி புரியுமாயின் அது ஏகாதிபத்தியம் எனப்படும். இவ்வாறான ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்பட்ட நாடுகள் குடியேற்றங்கள் எனக் குறிப்பிடப்படும்.
பிரித்தானிய ஆட்சியில் எமது நாட்டு மக்கள் வாழப் பழகிக் கொண்டனர். இருந்த போதிலும் அந்நியர்கள் எமது நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது அவர்களுக்கு அடிமைத் தனத்தினைக் கற்றுக் கொடுத்தனர்.  இதனை அப்போதைய எமது நாட்டுத் தலைவர்கள் விரும்பவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மக்களின் இறைமை மற்றும் சுதந்திரம் பற்றி குரலெழுப்பினர்.
இதன்வெளிப்பாடாக இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதென 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனாநாயக  அவர்களுடன் மூன்று ஒப்பந்தங்களை பிரித்தானியா அரசு கைச்சாத்திட்டது.
1.    பாதுகாப்பு ஒப்பந்தம்:
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை கடற்படை முகாமிலும், கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் பிரித்தானிய படைகளை வைத்திருப்பதற்கு இலங்கை இணங்குதல்.
2.    வெளிவிவகார ஒப்பந்தம்:
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரமடைந்த நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது பிரித்தானியா விதித்திருக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதித்தல்
3.    அரச ஊழியர் தொடர்பான ஒப்பந்தம்:
இலங்கையில் பணியாற்றும் ஆங்கிலேய அரச ஊழியர்கள் தொடர்ந்தும் பணியாற்றும்போது அவர்களின் ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி என்பவற்றை தங்கு தடையின்றி வழங்குவதற்கு இலங்கை சம்மதித்தல்.
இந்த மூன்று விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதென இணக்கப்பாடு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானத்தின்படி 1947ல் சோல்பரியாப்பை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரத்தை வழங்குவதற்காக இலங்கை சுதந்திர சட்டம் அமுலுக்கு வந்தது.
இலங்கை சுதந்திரச் சட்டம்  1947ம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமாகும். இதன் பிரதான வாசகம்  1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி முதல் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடு அல்ல என்பதுடன் இலங்கை தொடர்பாகப் பிரித்தானிய பாராளுமன்றம் பெற்றிருந்த ஆணையிடும் சட்டங்களாகப் பிறப்பிக்கும் அதிகாரம் இழக்கப்பட்டுள்ளன.  இதன் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் விரிவடைந்து காணப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றங்களாக அரசியல் கட்சி முறை, அமைச்சரவை போன்ற மாற்றங்களின் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் செயற்படு;த்தப்பட்டது.
அடிப்படைச் சுதந்திரம்
சுதந்நதிரத்தின் பிற்பாடு  மனித உரிமைகள் பற்றிய  கருத்துக்;கள் வளர்ந்து புதிய அர்த்தங்களைப் பெற்றிருந்தது.  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையின் அத்தியாயம் மூன்றில் பதினான்காவது உறுப்புரையே அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றி கூறுகிறது.
பேச்சுச் சுதந்திரமும், கருத்துவெளிப்படுத்தும் சுதந்திரமும் இதில் முக்கியமானதாகும். இலங்கை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் இதனை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள்.  நாட்டின் அரசியல் நிலவரங்கள் மற்றும் சமூகச் சீர்கேடுகள் பற்றி எந்தக் கருத்தினையும் வெளியிட முடியும்.  இதனை கருத்தியல் ரீதியான விமர்சனமாக் கொண்டு நல்ல விடயங்களை எடுத்து நடப்பதன் மூலம் அடிப்படை உரிமையொன்றினை அனுபவிக்க முடியும்.
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கு அல்லது ஒருங்கு சேர்வதற்கான  சுதந்திரமானது  எமது நாட்டு மக்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்று சேர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், குழு நிலையில் தீர்மானம் எடுப்பதற்கும் உரிமையளிக்கின்றது. இந்த உரிமையினை நாட்டு மக்கள் அனுபவிப்பதற்கு ஆட்சியில் உள்ள அரசுகள் பாதுகாப்புக் கொடு;ப்பது உரிமையின்பாலுள்ள கடமையாக இருக்கின்றது.
தொழிற் சங்கம் ஒன்றை அமைப்பதற்கும் அதில் சேரவும் உள்ள சுதந்திரத்தின் மூலம் ஒரு தனி நபருக்கு ஏற்படுகின்ற அநீதிகளை குழு நிலையில் தட்டிக் கேட்க முடியும். மட்டுமன்றி ஒரு பாரிய செலவுகளை அல்லது இடர்களை சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் எதிர்கொள்ளுமிடத்து அவருக்கான உதவிகளை கூட்டாகச் சேர்ந்து செய்வதற்கு பெரிதும் உதவுகின்றது. தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மக்கள் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் முடியும்.
ஒருவர் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ பகிரங்கமாகவேனும், அந்தரங்கமாகவேனும் தமது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும் சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம் உண்டு. இந்த உரிமையினை அனுபவிக்கும் போது இதனை மட்டுப்படுத்தவோ அல்லது அரசியற் பிரமுகர்கள் சொந்த அபிப்பிராயத்தின் பேரில் சமய நம்பிக்கைகளை தடுக்கவோ அல்லது கொச்சைப்படு;த்தவோ முடியாது. இது ஒரு ஜனநாயகநாட்டில் பிரஜைகளுக்குள்ள அடிப்படை உரிமையாகும்.
ஏதேனும் சட்ட முறையான முயற்சியில், உயர்தொழிழில், வியாபாரத்தில், தொழிலில் அல்லது தொழில் முயற்சியில் தானாக அல்லது ஏனைவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதற்கான சுதந்திரம். இச்சுதந்திரமானது நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் பங்களி;ப்புச் செய்வதால், இதனை ஊக்கப்படுத்துவது அரசின் கடமையாக இருக்கின்றது. இதி;ல் இனரீதியான பாகுபாடு காட்டி வியாபார தளங்களை அகற்றும் நடவடிக்கையோ அல்லது தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்  செயலோ அடிப்படை உரிமை மீறலாகும்.
இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் ஆன சுதந்திரம் அத்துடன் இலங்கைக்கு திரும்பி வருவதற்கான சுதந்திரம். ஒவ்வொரு பிரஜையும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். அவர்கள் விரும்பும் இடங்களில் இருப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடியும். இதில் எந்த பாரபட்சமும், இனரீதியான ஓரங்காட்டலும்  காட்ட முடியாது.
வேறு ஏதேனும் நாட்டின் பிரஜையொருவராக இல்லாதிருப்பவரும், இவ் அரசியல் அமைப்பு தொடங்குவதற்கு நேர்முன்னர் இலங்கையில் நிரந்தரமாகவும் சட்டப்படியும் வதிவிலிருந்தவரும்  தொடர்நது அவ்வாறு வதிவிலிருப்பவரும் ஆன ஆளொருவர், அரசியல் அமைப்பு தொடங்கியதிலிருந்து பத்து ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப் பகுதிக்கு இவ்வுறுப்புரையின் முதலாம் பந்தியில் வெளிப்படுத்தி ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமைகளுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.

எனவே கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தினை நாட்டு மக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி அனுபவிப்பதன் மூலமும், அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாட்டில் வளமான, சுபீட்சத்தைக் காண முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அப்துல் அஸீஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு


Monday, February 3, 2014

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சிணை

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சிணை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் முஸ்லிம்களது காணிப்பிரச்சிணைகளைத்தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

குறிப்பாக கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதே செயலக எல்லைக்குள் பல தசாப்தங்களாக வசித்துவரும் எல்லைப்புற மற்றும் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கான காணி உத்தரவுப்பத்திரம் இதுவரை காலமும் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச்செய்யப்பட்டுவருவதை வன்மையாக கண்டிக்கின்றேன். குறிப்பாக அன்மையில் பொதுமக்களுக்காக வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டு பின்னர் இடைநிறுத்திவைக்கப்பட்ட 1712 காணி ஒப்பங்கள் மாகாண காணி ஆணையாளரின் பணிப்புறையின் பெயரில் பொதுமக்களுக்கு உறிய காலத்தில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இப்பிரதேச செயலகங்களில் இருந்து கைப்பற்றி கொண்டு செல்லப்பட்டது யாவரும் அறிந்ததே.

இவற்றுக்குப்பின்னால் பல்வேறு அரசியல் கானப்பட்ட போதும் இதனால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பது காணியற்ற மீள்குடியேற்ற வாசிகளே. கடந்த காலங்களில் முஸ்லிம் பிரதேசங்கள் தவிர்த்து தமிழ் பிரதேசங்களில் காணி அநுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும் அதிகாரிகள் மீதான அவநம்பிக்கையினையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்படைந்த எந்தவொரு இன மக்களானாலும் உரிய நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். இந்தவகையில் தமிழ் சகோதர இன மக்களுக்கு வழங்கப்பட்டது ஒன்றும் பிழையான விடயமல்ல. அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும். மறுபுரம் முஸ்லிம் மக்களது பிரச்சிணை தொடர்பில் இன்னும் இத்தகைய இழுத்தடிப்புக்கள் வேதனையளிப்பதாக அமைகின்றது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற நிலைமையாக இப்பத்திரங்கள் மீளப்பறப்பட்டமை அமைந்துள்ளது.

எனவே இவ்விடயங்களில் ஏதாவது ஊழல் அல்லது குளருபடிகள் இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு இவ்விடயத்தை ஜனரஞ்சகப்படுத்துவதற்கு மக்கள் மேற்கொண்ட அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையினை நேரில் வந்து களந்தாலோசித்து பூரன தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாக எமது மாவட்டச்செயலாளர் உறுதிமொழி அழித்திருப்ப்தனை நன்றி கூறுகின்றேன்.

அவரது சிறந்த நிர்வாகச்செயற்பாட்டின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட காணி அநுமதிப்பத்திரங்கள் உறியவர்களுக்கு விரைவில் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்விடயத்தில் மாவட்டத்தில் கானப்படும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது பங்களிப்பினை செய்ய வேண்டும் என்றும் பாதிப்படைந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


நன்றி - ஜுனைட்நளீமி