Saturday, March 7, 2015

ஏன் அவர்கள் கள்ளத்தோனிகளா? - காமினி வியன்கோட

புதிதாக நியமனம் பெற்ற மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு உட்பட அனைத்து இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, சிறப்பான அரசியல் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிய ஒரு சந்தர்ப்பமாகும். 1978 அரசியலமைப்பு நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதன் பின் கடந்த 36 வருடங்களுக்குள் ஜனாதிபதியொருவரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி, ஆட்சியை மாற்றிக் கொள்வதற்கு இலங்கை வாக்காளர்களுக்கு கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 1977க்குப் பின் ஆட்சியை மாற்றிக் கொள்வதற்கு 17 வருடங்கள் கடந்துள்ளன. அது 1994ல் ஆகும். அதனையடுத்து இம்முறை ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்டிருப்பது 20 வருடங்களின் பின்னராகும். ஆறு வருடங்களுக்கொருமுறை ஜனாதிபதியொருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு இலங்கை வாக்காளர்களுக்கு இருப்பதை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இந்த நடைமுறையில் உள்ள முறைமையில் அதனை உண்மையானதாக்கிக் கொள்ளக்கூடிய இயலுமை இல்லையென்பதை வரலாறு எமக்கு காண்பித்துள்ளது. ஒரே ஆட்சியாளர் அல்லது கட்சி நீண்ட காலத்திற்கு அதிகாரத்திலிருப்பது, ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல என்பதனை புதிதாக குறிப்பிடுவதற்கில்லை. விருத்தியடைந்த ஜனநாயக நாடுகளில் ஒருவருக்கு அதிகாரத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருப்பது அதனாலாகும்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசியப்பட்டது ஜனநாயகமன்றி பரம்பரை பரம்பரையாக செல்லக்கூடிய ராஜகுடும்ப எதிர்காலமாகும். ஜனவரி 8ம் திகதி இந்த நாட்டு மக்கள் அந்த அபிலாஷையை தவிடுபொடியாக்கினர். தற்போது ராஜபக்ஷாக்களும் அவர்களால் வாழ்ந்த அவர்களது அடிவருடிகளும் பின் நோக்கித் திரும்பி தமது நலன்களை தம்மிடமிருந்து அபகரித்துக் கொண்ட முறையை தமது பாணியில் பொது மக்களுக்கு கூற முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எவ்வாறெனின் அவர்களது கருத்துப்படி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் வடக்கு, கிழக்கு சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்களோடு மாத்திரம் உருவாக்கப்பட்ட, பௌத்த சிங்களவர்களது அபிலாஷைகளை உதைத்துத் தள்ளிய சந்தர்ப்பமொன்றாகும். அது பிரிவினைவாத மற்றும் புலம் பெயர்ந்தோரது சதியொன்றின் பின்விழைவொன்றாகும். மீண்டுமொரு யுத்தத்துக்கு வழிவகுப்பதாகும். இந்த விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு தற்போதிருந்தே இவர்கள் கொடூர தகவல்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைதியின்மை நிலவி வருவதாகவும் வடக்கில் இராணுவ முகாம்களுக்கு முன்னால் புலிக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் பொய் மூட்டையை கட்டவிழ்த்து வருகிறார்கள். இவை அனைத்தின் மூலமாகவும் இவர்கள் மேற்கொள்ள முயல்வது சிங்கள, பௌத்தர்களை உசுப்பேற்றி அதன் மூலம் அதிகாரத்துக்கு வர முடியுமென அவர்களிடையே காணப்படும் நம்பிக்கையினாலாகும். தெற்கு சிங்கள வாக்குகளால் மாத்திரம் மத்திய அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய தேசியவாத சிந்தனை இந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இது பல்லினங்கள், பல் மதங்கள் கொண்ட நாடு மற்றும் சமூக அடிப்படையில் நாம் மேற்கொள்ள வேண்டியதொன்றன்றி கர்வமடையக் கூடியதோ அல்லது கவலையடையக் கூடியதொன்றோ அல்ல. அதேபோல் இந்த நிலைமையை ஒரு சில காரணங்களுக்காக மூடி மறைக்கக் கூடியதொன்றல்ல. ஆம். மைத்திரிபால சிறிசேனவுக்காக வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே அணியாக வாக்களித்தார்கள் தான். அவ்வாறிடம்பெற்றிருப்பதை தவறாகக் கருதுகின்ற மஹிந்த ராஜபக்ஷ உட்பட இனவாதிகள் கூறுவது வடக்கு, கிழக்கு மக்களை கள்ளத்தோனிகளாக கருத வேண்டுமென்பதா?
1978க்குப் பின் தெற்கு சிங்கள வாக்குகளால் மாத்திரம் மத்திய அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்ட முதல் சந்தர்ப்பம் 2005ல் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதித் தேர்தலாகும். இதனை வெற்றி மிக்கதாக்கிக் கொண்டது மஹிந்த ராஜபக்ஷவினால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பாரிய இலஞ்சமொன்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களை வாக்களிக்காமல் தடுத்துக் கொண்டதனாலாகும். அந்த அரசியல் இலஞ்சத்திற்கான கொடுப்பனவை பிரபாகரன் 2009 மே மாதம் 9ம் திகதி செலுத்தியிருந்தார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பேராசையில் ஆழ்ந்திருந்த ராஜபக்ஷவினர் பிரபாகரனின் நட்டஈட்டினால் மாத்திரம் திருப்தி கொள்ளவில்லை. இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய அனைத்து மக்களிடமிருந்தும் அது தொடர்பிலான நட்டஈடொன்றை அவர்கள் வேண்டி நின்றார்கள். கடந்த 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தீர்ப்பு, அந்த நட்டஈட்டை செலுத்தாமலிருப்பதற்கு மேற்கொண்ட பொது மக்களது வாக்களிப்பு முடிவு வெளியிடப்பட்டதிலிருந்து பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் தேர்தல் முடிவுகள் வரைபுகளாக்கப்பட்டது மேலே குறிப்பிடப்பட்ட பொதுவான காரணியை மூடி மறைக்கும் வகையிலாகும். மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற மாவட்டங்கள் நீல நிறத்திலும் மைத்திரிபால வெற்றிபெற்ற மாவட்டங்கள் சிவப்பு நிறத்திலும் வர்ணமிடப்பட்டிருந்தன. வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்போது இவ்வாறு வர்ண வரைபடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு மாவட்டம் அல்லது மாகாணத்தில் ஏதேனுமொரு கட்சி வெற்றி பெற்றுள்ளதை அடையாளப்படுத்துவதற்கு அந்தக் கட்சியை காட்டும் வர்ணம் பயன்படுத்தப்படுவது பிரச்சினையல்ல. எனினும் அந்த வர்ணத்தினால் அவ்வாறான நாடொன்றில் அடையாளப்படுத்துவது பெரும்பாலும் ஒரு மாகாணம் அல்லது கட்சி மாத்திரம் என்ற வகையிலாகும். எனினும் பல்வேறு இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடொன்றில் விசேடமாக அவ்வாறான பல்வேறுபட்ட இனங்களிடையே சந்தேகம் நிலவுகின்ற இலங்கை போன்ற நாடொன்றில் ஏதேனுமொரு மாகாணம் அல்லது மாவட்டத்தை ஒன்றாகக் கருதி விசேட வர்ணமொன்றின் மூலம் அடையாளப்படுத்துவதால் இடம்பெறுவது பொதுவான வாக்களிப்பு முடிவுகள் வெளியிடப்படுவதை பார்க்கிலும் வேறுபட்ட கருத்து வெளிப்படக்கூடிய, இனவாத, மதவாத, கோத்திரவாத கருத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய தாக்கமொன்றினை உருவாக்குவதாகும்.
இது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும். அது தேர்தல் முடிவை மாற்றுவதன்றி பெறுபேற்று அறிவிப்பு முறைமையை மாற்றுவதாகும். உதாரணமாக இவ்வாறான வெளிப்படுத்தலின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற அனைத்து மாவட்டங்களையும் நீல நிறத்தில் அடையாளமிடும்போது அந்த மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்ட வாக்குகளின் அளவு குறிப்பிடப்படுவதில்லை. அதேபோல் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற அனைத்து மாவட்டங்களும் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற போது அந்த மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட வாக்குகளின் அளவை நீல நிறத்தில் அடையாளப்படுத்தவில்லை. ராஜபக்ஷவினர் தற்போது இனவாத சிந்தனையை விதைப்பதற்கு பயன்படுத்துவது ஒரு தலைப்பட்ச வரைபடத்தை ஆகும். இவ்வரைபடங்களில் தென் மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற பத்து மாவட்டங்களிலும் அவருக்கு கிடைத்த 3100000 வாக்குகளும் நீல நிறத்தில் அடையாளப்படுத்துகின்ற அதேவேளை அதே மாவட்டங்களில் மைத்திரிபால பெற்றுக்கொண்ட 2500000 வாக்குகளும் சிவப்பு நிறத்தில் குறித்துக்காட்டப்படவில்லை. அதேபோன்று, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருப்பதை அங்கு குறிப்பிட்டிருக்கவில்லை. எனவே, தற்போது நாம் இது தொடர்பிலான மிகவும் யதார்த்தபூர்வமான வரைபொன்றினை தயாரித்துள்ளோம். அந்த வரைபடத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அந்தந்த நிறங்களில குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அனைத்து மாவட்டங்களிலும் ராஜபக்ஷவின் நீல நிறத்தைப் போன்று மைத்திரிபாலவின் சிவப்பு நிறமும் சரிசமமாக மிளிர்வதை அதனூடாக குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
எவ்வாறெனினும் இந்த விடயத்தை குறிப்பிடுவதனால் கருதுவது, மஹிந்த ராஜபக்ஷ இன்று முன் வைக்கின்ற வரைபில் ஒரு தலைப்பட்சமும் சிங்கள பௌத்த மக்களை உசுப்பேற்றுவதற்கு அவர்களிடையே காணப்படும் நோக்கத்தையும் வெளிக்கொணர்வதேயன்றி, தெற்கு சிங்களவர்களை விடவும் வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையினர் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணிக்கவில்லை எனக் கூறுவதல்ல. குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியது சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை மதத்தவர்கள் அவ்வாறு நாடொன்றின் தீர்க்கமான ஜனநாயக காரணியாகியுள்ளமை அந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த உந்து சக்தியே அன்றி பாதகமொன்றல்ல என்பதாகும்.
தமிழ் புலம் பெயர்ந்தோரில் ஒரு சிலரும் எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களும் 2005ம் ஆண்டைப் போன்று இந்த தேர்தலையும் பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரியிருந்தனர். அந்த கோரிக்கையை கீழ் மட்டத்திலிருந்து அமுல்படுத்துவதற்கு இம்முறை எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு இருக்கவில்லை. எனவே, தமிழ் மக்கள் அவ்வாறான ஜனநாயக விரோத வேண்டுகோளை கவனத்திலெடுக்காது இந்த நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தில் தாமும் நேரடி பங்காளர்களாக ஆக வேண்டுமென தீர்மானித்தனர். இவர்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ எனும் சிங்களவர் ஒருவருக்கு, பௌத்தரொருவருக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன எனும் தமிழனொருவருக்கு / முஸ்லிம் ஒருவருக்கல்ல மஹிந்த ராஜபக்ஷவை போன்ற சிங்கள பௌத்தரொருவருமான மைத்திரிபால சிறிசேன என்ற ஒருவருக்காகும். அவ்வாறு வாக்களிப்பதற்கு தமக்கு தனியான நாடு தேவையெனவோ, ஆகக் குறைந்தது தமது மாகாணங்களில் இன்று அனுபவிக்கின்ற அன்றாட சிரமங்களை அகற்றுமாறோ மைத்திரிபால சிறிசேனவிடம் எந்தவொரு நிபந்தனையையும் அவர்கள் முன்வைக்கவுமில்லை. அவர்களது வாக்குகள் நிபந்தனையற்ற முன் அனுமதியாகும். அந்த அனுமதியின் இயல்பு மற்றும் அதற்கு காரணமான பின்புலன்களை வேறு கட்டுரையொன்றில் குறிப்பிடவுள்ளேன்.
மஹிந்த ராஜபக்ஷவின் வாதமாக இருப்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த செயற்பாட்டிலிருந்து விலகியிருந்தால் அல்லது இவர்கள் மைத்திரிபாலவுக்கு வாக்களிக்காமல் இருந்திருப்பார்களானால் தான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதாகும். அறிந்தோ, அறியாமலோ மஹிந்த ராஜபக்ஷ இதன்மூலம் கருதுவதென்ன? அது வேறெதுவும் அன்றி பிரிவினைவாதமாகும். தம்மால் பயன்படுத்தப்படும் வாக்குகள் ஐக்கிய இலங்கைக்குள் அசிங்கமான (துர்நடத்தை) வாக்குகளாக கருதுவார்களாயின் அந்த சிறுபான்மையினர் திருப்பி எம்மிடம் ஒரு விடயத்தை வேண்டி நிற்பார்கள். அது உங்களது இலங்கைக்குள் எமது வாக்குகள் அசிங்கமானதாக கருதுவீர்களாயின், அவமரியாதையானதாக கருதுவீர்களாயின் எங்களுக்கும் சுயமாக வாக்களிக்கக்கூடிய எங்களுக்கே உரிய நாடொன்றை தரவும் என்பதாகும். அப்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெற்கு வாக்குகளால் மாத்திரம் இந்த நாட்டின் தனித் தலைவராக சிலவேளை குறிப்பிட்ட காலமொன்றுக்கு பிரகாசிக்க முடியும். யுத்தத்தை வெற்றிகொண்டதன் பின் ஒன்றுபடுத்தியதாக கூறும் நாடொன்றின் எதிர்கால ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அம்பாந்தோட்டையை கோலாகலமாக முன்னேற்றச் செய்வதோடு, யாழ்ப்பாணத்தை புறக்கணித்து செயற்படுவதனாலா?
நன்றி
ravaya.lk

Thursday, January 29, 2015

ஒரு அரபிய மன்னனின் நாட்குறிப்பு

மத்திய கிழக்கின் அரசியல் சூழமைவுகள் உருவாக்கியுள்ள பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பினை மன்னர் ஸல்மானிடம் கொடுத்து விட்டு மன்னர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ் மரணித்துள்ளார். அதேநேரம், 2005 – 2015 வரை எண்ணை உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த மன்னர் அப்துல்லாஹ்வின் கீழ் சவூதிஅரேபியாவின் ஆட்சிபுரிதல் (Governance) பறறிய விமர்சன நோக்குகளும் ஊடக உலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. மேற்கத்தேய அரசியல் விமர்சகர்கள் , இடதுசாரி சிந்தனைப் போக்கினைக் கொண்ட ஆய்வாளர்கள் மற்றும் இஸ்லாமியவாதிகள் என பலரும் மறைந்த மன்னர் அப்துல்லாஹ்வின் நாட்குறிப்பினை மீள்வாசிப்புச் செய்யத் துவங்கியுள்ளனர். முன்மாதிரி ஆட்சியாளர் என்ற நிலையிலிருந்து 'பயங்கரமான சர்வதிகாரி' என்ற நிலை வரை மன்னர் அப்துல்லாஹ் பற்றிய பார்வைகள் நீண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னர் அப்துல்லாஹ 'நவீனத்துவவாதி' :

இந்தப் பின்புலத்தில் இறுகிய சிந்தனைப் பாரம்பரியத்தைக் கொண்ட சவூதி அரேபியாவை 'நவீன உலகுடன்' இணைத்து விடும் தேட்டம் மன்னர் அப்துல்லாஹ்விடம் இருந்தாக பிரபல்யமான இடதுசாரி அரசியல் விமர்சகரான அப்துல்பாரி அத்வான் குறிப்பிடுகின்றனர். எனவே, சவூதிஅரேபியாவின் அரச வம்சத்தின் 'சீர்திருத்தவாதி' (Reformist) ) என மன்னர் அப்துல்லாஹ்வை குறிப்பிட முடியாவிட்டாலும் கூட 'நவீனத்துவவாதி (Modernist ) யாக வர்ணிக்க முடியும் என அவர் குறிப்பிடுகிறார். இதற்கான சில நியாயங்களையும் அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக, நவீன தொழிநுட்பங்களை மற்றும் அறிவியல் கலைகளை கற்பதற்கான சூழலை ஏற்படுத்துவதில் சவூதிஅரேபிய அரச வம்சம் விருப்பம் காட்டியதில்லை. அரசியல் மற்றும் மார்க்கரீதியான நியாயங்களைப் பின்புலமாகக் கொண்டு நவீன தொழிநுட்ப உலகை சவூதியில் அனுமதிப்பதற்கு முன்னைய மன்னர்கள் தயங்கினர். ஆனால், நவீன தொழிநுட்ப உலகை சவூதி அரேபியா சமூகத்திற்கு மத்தியில் அறிமுகஞ் செய்வதில் மன்னர் அப்துல்லாஹ் காத்திரமான பங்கு வகித்துள்ளாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மன்னர் அப்துல்லாஹ் திறந்து வைத்த 'விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியலுக்கான மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம்' , அவரது 'நவீனத்துவ சிந்தனைக்கு' சான்றாதாரமாக முன்வைக்கப்படுகிறது.

அதேபோன்று, பெண்களின் சமூகப் பங்கேற்பு பற்றிய சவூதிஅரேபிய அரச வம்சத்தினதும், மார்க்க அறிஞர்களினதும் நிலைப்பாடு கடுமையானதாகும். இந்நிலை சவூதிஅரேபிய பெண்களினுடைய அரசியல் , கல்வி , கலாச்சார மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய நீண்ட வாதப் பிரதிவாதங்கள் சர்வதேச அளவில் கிளப்பிவிட்டன. இத்தகைய பெண்கள் தொடர்பான இறுக்கமான நிலைப்பாடுகளை தளர்த்துவதிலும், புதிய மாற்றத்தினை சவூதிஅரேபிய மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதிலும் மன்னர் அப்துல்லாஹ் முற்போக்காக சிந்தித்துள்ளதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வகையிலேயே சவூதிஅரேபியா சட்டவாக்க சபையான 'மஜ்லிஷூ ஷூரா' வில் 30 பெண்களை மன்னர் அப்துல்லாஹ் இடம்பெறச் செய்தார். மேலும், உள்ளுர் மட்ட தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை பெண்களுக்கு வழங்குவதற்கு அனுமதியளித்தார். இன்னும், புதிதாக திறக்கப்பட்ட 'விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியலுக்கான மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்தில் ஆண்கள் , பெண்கள் என இருசாராரும் இணைந்து கற்பதற்கான வாய்ப்பினை வழங்கியமை உட்பட, கல்வித் தேட்டமுல்ல பெண்களை வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக அனுப்பி வைப்பதற்கான வாயிலை திறந்து விட்டமை போன்றன திறந்த சமூகத்துடன் பெண்கள் உறவாட வேண்டும் என்ற மன்னர் அப்துல்லாஹ்வின் நிலைப்பாட்டினை அடையாளப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பெண்களின் சமூக வகிபாகத்தை சீரமைப்பதில் அதிர்ச்சியூட்டும் பாய்ச்சலாக மன்னர் அப்துல்லாஹ்வின் சீர்திருத்தங்களை நோக்க முடியாது. ஆனால், ஏற்கனவே பல தசாப்த்த காலமாக சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்களும், அரச வம்சத்தினரும் பின்பற்றிய பெண்கள் தொடர்பான வரண்ட நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தினை நோக்கிய ஒரு சில எட்டுக்களை மன்னர் அப்துல்லாஹ் எடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட முடியும்.

சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தின் உள்வீட்டு மோதல்கள் பற்றிய செய்திகள் மிகவும் குறைவாகவே வெளிவருகின்றன. அதிகாரம் , பதவி மற்றும் முதலாளித்துவ உலகை கைப்பற்றிக் கொள்வதில் போட்டி மனப்பான்மை என்பன அரச குடும்பத்தின் வழiமான நிகழ்வுகள். அதிகாரபீடங்களை தக்க வைத்துக் கொள்வதில் ஏற்படும் மோதல்கள் அரசவம்சத்தை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக மன்னர் அப்துல்லாஹ் பைஆத் சபை ஒன்றை ஆரம்பித்து வைத்தார். அதனை அரச வம்சத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகார பிரச்சினைகளை தீர்த்துக் கொள்தவற்கான களமாக மாற்றியமைத்தார்.

மாத்திரமன்றி, அரச குடும்பத்தின் ஊழல்கள் விடயத்தில் முன்னைய மன்னர்களை விட சற்று கடுமையாக நடந்து கொண்டவராக மன்னர் அப்துல்லாஹ்வை நினைவு கூறலாம் என சில ஊடகவியாளர்கள் கருதுகின்றனர். அதிலும் ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ரியாத் நகர அபிவிருக்தி செயற்திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் நிறைந்த உடன்படிக்கைகளை இரத்துச் செய்வதில் மன்னர் அப்துல்லாஹ் நேரடியாக தலையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையும் சில அறிஞர்கள் மன்னர் அப்துல்லாஹ்வின் சாதனையாகவே நோக்குகின்றனர்.

இவ்வாறு , 2005 முதல் 2015 வரை இடம்பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சில சீர்திருத்த எட்டுக்கள் முழுமையாக மன்னர் அப்துல்லாஹ்வின் சீர்திருத்த சிந்தனையின் வெளிப்பாடு எனக் கூற முடியாது என்றும் வேறு சில அரசியல் ஆய்வாளர்கள் வாதிக்கின்றனர். குறிப்பாக பிரபல்யமான 'Democracy now' தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் 'மத்திய கிழக்கு பிராந்தியத்தினை சூழ நிகழ்ந்த சடுதியான மாற்றங்களும் , எதிர்பாராத நிகழ்வுகளும் மற்றும் அரபு வசந்தமுமே மன்னர் அப்துல்லாஹ்வை சில சீர்திருத்தங்களை சாத்தியமாக்குதனை நோக்கி இட்டுச் சென்றன. அவ்வாறில்லாமல், சவூதிஅரேபியாவின் இறுக்கான கொள்கை மாற்றங்களல்ல' என அழுத்தமாக வலியுறுத்தப்பட்டன.

மன்னர் அப்துல்லாஹ்வும் , உள்நாட்டு அரசியல் அடக்குமுறைகளும் :

கடந்த ஒரு தசாப்த்த ஆட்சிக் காலங்களுக்குல் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அரசியல் எதிரிகளுக்கெதிரான அடக்குமுறைகள் , சுதந்திர ஊடக செயற்பாடுகள் மீதான கெடுபிடிகள் மற்றும் வழங்கப்பட்ட வரையறையைத் தாண்டிச் செல்ல முற்பட்ட பெண்கள் மீது விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் என்பன மன்னர் அப்துல்லாஹ்வின் அரசியலினுடைய கருப்புப் பக்களை விவரிக்கிறது. உண்மையில் அரசியல் அடக்குமுறை என்பது மன்னர் அப்துல்லாஹ்வுக்கு மாத்திரம் உரிய விடயமல்ல. அதிகாரங்கள் குவிந்துள்ள பதவிகளை ஆளும் அனைவர்களும் இதனைக் கையால்வார்கள். இந்த பொது விதி மன்னர் அப்துல்லாஹ்விலும் செயற்பட்டிருக்கிறது.

இந்தப் பின்புலத்திலேயே சில அரசியல் விற்பன்னர்கள் 'மன்னர் அப்துல்லாஹ் பயங்கர சர்வதிகாரி' என வர்ணிக்கின்றனர். சவூதி அரேபியாவிற்குல் 'அரசியல் சுதந்திரம்' என்ற வார்த்தைக்கே மன்னர் அப்துல்லாஹ் இடம் வைக்கவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஜனநாயகம் பற்றிப் பேசுவது மற்றும் அதன் கூறுகளாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகிஷ்கரிப்புகளில் ஈடுபடுவது என்பன மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்ட ஆட்சிகாலப்பிரிவாக மன்னர் அப்துல்லாஹ்வின் பத்தாண்டுகளை சுட்டிக்காட்டலாம்.

இன்னும், அரசியல் எதிரிகளை அடக்கி மன்னராட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கான கருவியாக 'கடுமையான மார்க்க நிலைப்பாடுகளை' பயன்படுத்திக் கொள்வது சவூதிஅரேபிய அரசியல் கலாச்சாரத்தின் ஆணிவேராகும். இன்னுமின்னும் இவ்வாணி வேரை பலப்படுத்தும் கைங்கரியத்தினை செய்தாரே ஒழிய அதனை மீள்வாசிப்புப் செய்யும் மன்னராக அப்துல்லாஹ் இருக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. இந்த வகையில், ஒரு விதிவிலக்கான அரசியல் நடைமுறையை ஏற்படுத்தி விட்டுச் சென்ற மன்னராக வரலாறு அவரை நினைவு கூறப்போவதுமில்லை.

மன்னர் அப்துல்லாஹ்வின் வெளிநாட்டுக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் :

மன்னர் அப்துல்லாஹ்வின் அரசியல் காய்நகர்த்தல்கள் விமர்சிக்கப்படும் இரண்டாவது தளம் அவரது வெளிநாட்டுக் கொள்கைகளாகும். சவூதி அரேபியாவின் அரசியல் செல்வாக்கினையும் , அதிகார வீச்சினையும் பலப்படுத்துவதிலும் , பரலவாக்குவதிலும் மன்னன் அப்துல்லாஹ்வின் வெளிநாட்டுக் கொள்கை ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. ஆனால், தனது நாட்டிற்கு சவாலாக அமையலாம் எனக் கருதும் அயல் நாடுகளின் ஜனநாயக மாற்றங்களை அடித்து நொறுக்கும் மிக மோசமன செயற்திட்டங்களை மன்னர் அப்துல்லாஹ் நிறைவேற்றி முடித்திருக்கிறார். எகிப்தில் ஜனாதிபதி கலாநிதி முர்ஸியின் அரசாங்கத்திற்கு எதிரான இராணுவப் புரட்சிக்கு தூபமிட்டது முதல் அதனை கச்சிதமாக சாதித்து முடிக்கும் வரையான அனைத்து நகர்வுகளும் மன்னர் அப்துல்லாஹ்வின் கண்காணிப்பிலேயே நடைபெற்றன. எந்தளவுக்கெனில், மிக ஆரம்பத்தில் அமெரிக்கா , இஸ்ரேல் மற்றும் ஜரோப்பிய யூனியன் என்பன எகிப்தின் இஸ்லாமியவாதிகளை வீழ்த்துவதற்கான சாணக்கியமான தெரிவாக இராணுவப் புரட்சியை கருதவில்லை. என்றாலும், மன்னர் அப்துல்லாஹ்வின் அவசரத்தின் பெயரிலேயே 'எகிப்திய இராணுவப் புரட்சி' இடம்பெற்றதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில், எகிப்திய ஜனநாயகத்தினை வீழ்த்துவதில் மன்னர் அப்துல்லாஹ்வின் வகிபாகத்தினை நிலையான காட்சிகளாக முஸ்லீம்கள் தங்களது உள்ளங்களில் பதிவு செய்து விட்டார்கள். எகிப்திய இராணுவப் புரட்சி ஏற்படுத்திய அதிர்வலைகளின் விளைவாக சிரியா , ஈராக் , யெமன் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் மக்கள் மேற்கொண்ட எழுச்சிப் பேரலைகளும் கூட எரிந்து சாம்பலாகின. சுருக்கமாக அரபு வசந்ததிற்கு மன்னர் அப்துல்லாஹ் செய்த வரலாற்றுத் துரோகத்தினை எந்த நியாயத்தின் அடிப்படையிலும் இஸ்லாமியவாதிகளோ, லிபரல்வாதிகளோ அல்லது இடதுசாரிகளோ அங்கிரிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

அடுத்து மன்னர் அப்துல்லாஹ் விமர்சிக்கப்படும் மிக முக்கியமான அம்சம் 'பலஸ்தீன விவகாரம்' துடன் தொடர்புபட்டதாகும். இது பற்றி இலண்டனில் வசிக்கும் பலஸ்தீன ஊடகவியளாளரான அப்துல்பாரி அத்வான் எழுதும் போது 'செப்டம்பர் 11 தாக்குதல்களில் சில சவூதி அரேபிய பிரஜைகள் பங்கொண்டார்கள் என அமெரிக்க உளவுப்பிரிவு தெரிவித்தன. இதனால், அமெரிக்க-சவூதிஅரேபிய உறவில் சற்று தளர்ச்சி ஏற்பட்டது. இதனை சீர்செய்தவற்காக பலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு சார்பாக பல விட்டுக் கொடுப்புக்களை மன்னர் அப்துல்லாஹ் செய்திருக்கிறார். இதனுடாக அரபுத்துவத்தின் அடிப்படைகளிலேயே மன்னர் அப்துல்லாஹ்வின் அரசாங்கம் கைவைத்து விட்டது' என குற்றம் சாட்டுகிறார்.

இதனோடிணைந்த வகையில், கடந்த வருடம் இடம்பெற்ற காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஒரு கண்டனத்தையேனும் தெரிவிக்காமல் மௌனம் காத்தமை மன்னர் அப்துல்லாஹ் மீதிருந்த முஸ்லீம் உலகின் எச்சசொச்ச மதிப்பையும் நீங்கிவிட்டது. இந்நிகழ்வின் போது முஸ்லீம் உலகின் உளக் குமுறல் எல்லை தாண்டிச் சென்று 'அரபு ஸியோனிஸிட்' என பெயர் சூட்டப்படும் அளவுக்கு மன்னர் அப்துல்லாஹ் விமர்சிக்கப்பட்டார். மன்னர் அப்துல்லாஹ்வின் அரசியல் வாழ்க்கையை வாசிப்புச் செய்யும் சாதாரண அரபியன் எவனும் இதனை ஞாபகப்படுத்தமால் இருக்கமாட்டான்.

மன்னர் அப்துல்லாஹ்வின் வெளிநாட்டுக் கொள்கை விமர்சிக்கப்படும் மூன்றாவது அம்சம் 'சிரியா விவகாரம்' உடன் சம்பந்தப்பட்டது. அதாவது, 'ஸூன்னி இஸ்லாம்' வாதத்தினை அரசியல் கருவியாக பயன்படுத்தி பிராந்திய பிளவுவினை ஆழப்படுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை மன்னர் அப்துல்லாஹ் பின்பற்றியதாக அரசியல் நோக்கர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இன்னும், 8 வலைகுடா நாடுகளுக்கு தலைமை தாங்கிய நிலையில் மற்றும் அமெரிக்காவுடனான ஆத்மார்த்த உறவினை பேணிய நிலையிலும் ஈரானின் வரட்டு அகம்பாவத்தினை அடக்கி சர்வதிகாரி அஸதை வீழ்த்துவதற்கான எந்த இராஜதந்திர பிரயத்தனங்களையும் மன்னர் அப்துல்லாஹ் மேற்கொள்ளவில்லை என்பது அரசியல் கண்கொண்டு நோக்குமிடத்து ஒரு குறைபாடே.

அதுமாத்திரமன்றி, லிபியாவின் ஆட்சிமாற்றத்தினை குழப்பியமை , டியூனீசிய மதச்சார்பற்ற குழுக்களுக்கு பணவுதவி அளித்தமை , யமனின் இஸ்லாமியவாதிகளை வீழ்த்துவதற்காக ஸைதி ஷீயாப் பிரிவினர்களுடன் இணைந்து சூழ்ச்சி செய்தமை என்பன மன்னர் அப்துல்லாஹ் மீது அள்ளி வீசப்படும் பாரதூரமான விமர்சனங்களாகும்.
இவ்வாறுதான் மன்னர் அப்துல்லாஹ்வின் நாட்குறிப்பை வாசித்த பலரின் விமர்சனங்கள் 'நவீனத்துவாதி' என்ற நிலையிலிருந்து 'பயங்கர ஜனநாயாக விரோதி' என்ற நிலை வரை நீண்டு செல்கிறது. என்றாலும், இஸ்லாத்தின் இரண்டு புனித மஸ்ஜிதுகளினதும் பாதுகாவலர் என்ற உயர்பட்டத்தினை சுமந்து கொண்டு இத்தகைய முஸ்லீம் சமூக விரோத வெளிநாட்டுக் கொள்கைகயை மன்னர் அப்துல்லாஹ் பின்பற்றியமையை பலரது உள்ளங்களும் ஏற்க தயங்குகிறது.

மறைந்த மன்னர் அப்துல்லாஹ்வின் மீதான குற்றச்சாட்டுகளை முஸ்லீம் உம்மா மறக்க வேண்டுமாக இருந்தால் , சவூதி அரேபிய அரச குடும்பத்திற்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் காத்திருக்கிறது. அதுவே, தேசத்திலும் , பிராந்தியத்திலும் 'நல்லாட்சியை' ஏற்படுத்துவதில் மன்னார் ஸல்மானுக்கு ஒத்துழைப்பதாகும். மேலும், நடுநிலை இஸ்லாமிய இயக்கங்கள் , நிறுவனங்கள், புத்திஜீவிகள் , சிந்தனையாளர்கள் போன்றவற்றினை அங்கீகரிப்பதுடன், ஷீயா - ஸூன்னி கொள்கை மோதல்களுக்கு அப்பால் நின்று மத்திய கிழக்கினை புதிய திசைவழியில் செலுத்தும் வகையில் வியூகங்களை வகுப்பதற்கு துணை செய்தவாகும். முஸ்லீம் உலகின் பொருளாதார வளத்தினை ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்குதவதற்கு கடனாகக் கொடுக்காமல் , உம்மாவின் அரசியல் , பொருளாதார , சிந்தனா எழுச்சிக்கு முதலீடு செய்வதாகும். இவற்றை மன்னர் ஸல்மான் உத்தரவாதப்படுத்தினால், சிலவேளை அரேபிய மன்னர்களை முஸ்லீம் உம்மா மன்னித்துவிடலாம்.


நன்றி
விடிவெள்ளி