இலங்கை பிரஜையான சாகிர் ஹுசைன் பாகிஸ்தான் உளவுப்பிரிவுடன் தொடர்பானவர் என்ற குற்றச்சாட்டின்
அடிப்படையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து போலியான கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதற்கு தீனி போட்டாற்போல் சர்வதேச பயங்கரவாத விஷேட நிபுணர் என குறிப்பிடப்படும் கலாநிதி
ரொஹான் குணரத்ன அவர்களின் அறிக்கை அமைந்திருந்தது.
அதாவது இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய பயங்கர வாத இயக்கங்களின் நடவடிக்கை காணப்படுவதாகவும்
முஸ்லிம் புத்திஜீவிகள் முஸ்லிம் இளைஞர்களை வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும்
தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பொது பல சேனாவும் தமது பங்கினை சரியாக செய்து
முடிக்க அவசர செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்படுத்தியதுடன் சாகிர் ஹுசைன் கைது,
கலாநிதி ரொஹான் குணரத்னவின்
அறிக்கை என்பவற்றை தூக்கிப்பிடித்து இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் காணப்படுவதாக
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைந்துள்ளனர்.
ரொஹான் குணரத்னவின் எழுத்துக்களில் ஆகர்சிக்கப்பட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது
பங்கிற்கு உப்புச்சேர்த்துல்லமையும் ஊடகங்களுக்கு நல்ல தலைப்புச்செய்தியாக மாறிவிட்டன.
இத்தகைய பின்னணியில் எதனை தேசிய பெரும்பான்மை தீவிர வாத அமைப்புக்களும், சர்வதேசமும் அடைய முனைகின்றன
என்பதனை நோக்க வேண்டியுள்ளது. தேசியத்தில் இத்தகைய செய்தி முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை
சகோதர இனத்திடம் ஒரு தீவிர சமூகமாக சித்தரிக்கும் முயற்சி என்பதனை வெளிப்படையாக புரிந்து
கொள்ளலாம்.
குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கிடையிலான ஆதிக்க போட்டியில் அந்நாடுகள் புலனாய்வுத்திட்டங்களுக்கும்
தாக்குதல்களுக்கும் பல்வேறு அமைப்புக்களையும் தனிநபர்களையும் பணிக்கமர்த்துவது ஒன்றும்
புதிய விடயமல்ல. குறிப்பாக இந்திய பாகிஸ்தான் நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் இத்தகைய
பல்வேறு நிகழ்ச்சித்திடங்களை கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளமை வெளிப்படையான உண்மைகள்.
அதே போன்று இவ்வாறு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படும் அனைத்து நபர்களும்
பயங்கரவாதிகள் அல்ல என்பதனை கடந்தகால சில நிகழ்வுகள் நிரூபனம் செய்துள்ளன.
2001 ஒக்டோபர் மாதம் விமானத்தினை கடத்தி மெல்போர்ன் நகரின் ரியால்டோ கோபுரத்தை தாக்க
திட்டமிட்டார் என்றகுற்றச்சாட்டின் அடிப்படையில் மும்பை நகரில் வைத்து கைது செய்யப்பட்ட
மொகமட் அப்ரோஸ் என்பவர் இந்திய நீதிமன்றினால்2002 ம் ஆண்டு விசாரணைகளின் பின்னர் நிரபராதி
எனக்கூரி விடுதலை செய்யப்பட்டமையை குறிப்பிட முடியும். சாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டு
இரண்டு நாட்களின் பின்னர் இடம்பெற்ற ரயில் குண்டு வெடிப்புக்கும் சாகிர் ஹுசைனுக்கும்
தொடர்பு இல்லை என இந்திய மத்திய புலனாய்வகம் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இன்னொருவகையில் தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்தின்
மீதும் சேரு பூசும் நடவடிக்கையாக கருத முடியாது. சாகிர் ஹுசைனுடன் தொடர்புடையவர்கள்
என கைது செய்யப்பட்ட மேலும் இருவரில் ஒருவர் இலங்கையரான சிவபாலன் (45) கைது செய்யப்பட்டமையினைவைத்து
ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் இந்தியாவை பழிவாங்குவதற்காக பாகிஸ்தானுடன் கூட்டினைந்து
செயற்படுகின்றது என கூற முனைவது வடிகட்டிய முட்டாள்தனமாகவே அமையும்.
இந்திய பாகிஸ்தான் நாடுகளுடனான பல்வேறு கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத வியாபர முயற்சிகளில்
பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களும் பாரியளவில் ஈடுபட்டு வருவதனை அண்மையில் பிரதம
மந்திரியின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் முயற்சியிலிருந்து
தெரியவந்துள்ளமையை குறிப்பிட முடியும்.
இத்தகைய பின்னனியைக்கொண்டவராகவே சாகிர் ஹுசைன் காணப்படுவதாக ஊடகங்கள் தகவல்கள்
வெளியிட்டுள்ளன. இதே போன்று மேற்கு நாடுகளின் ஏஜன்டுகளாக செயற்படும் பெரும்பான்மை இனத்தைச்
சார்ந்த தனிபர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற
போதும் அவற்றை ஒட்டு மொத்த சகோதர பெரும்பான்மை இனம் செய்வதாக ஊடகங்களோ, பௌத்த தீவிரவாத அமைப்புக்களோ
விமர்சிக்க முற்படுவதுமில்லை. யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்த
பல பெரும்பான்மை இனத்தை சார்ந்த அதிகாரிகளை வைத்துக்கொண்டு
ஒட்டு மொத்த சிங்கள சமூகத்தை குற்றம் சொல்லவுமில்லை.
சிரியாவின் ஆள்புல எல்லைக்குள்
வைத்து ஹமாசின் அரசியல் தலைவர் காலித் மிசல் இஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகளால் தாக்கப்பட்டு
தாக்குதல் தாரிகள் ஸ்தலத்திலேயே மடக்கிப்பிடிக்கப்பட்ட போது ஒட்டு மொத்த இஸ்ரேலியர்களும்
பயங்கரவாதிகள் என சர்வதேசம் குறிப்பிடவில்லை. எல்.ரீ.ரீ.ஈயின் முக்கிய தலைவர்களின்
ஒருவரான கேபி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோதும்
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் மலேசிய அரசு புலிகளாக நோக்கவில்லை. இவ்வாறு அடுக்கி
கொண்டு போகும் உதாரணங்கள் ஏராளம். எனவே சாகிர் ஹுசைன் விடயத்திலும் அவர் ஒரு பாகிஸ்தான்
அரசின் உளவாளியாக அமைந்திருப்பினும் கூட அவரை வைத்து ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தை
பயங்கரவாதிகளாக சித்தரிக்க முடியாது. கடந்த கால யுத்தத்தின்போது கடுமையாக பாதிப்படைந்த
சமூகம் என்ற வகையில் அன்று ஆயுதம் ஏந்தாத இலங்கை முஸ்லிம்கள், தமது புனித குர்ஆனில்,
பள்ளிவாசலில்,
கலாசார விழுமியங்களில்
மிலேச்சத்தனமாக பௌத்த தீவிர அமைப்புக்களினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படபோதும்,
மிகவும் அமைதியாகவும்,
விட்டுக்கொடுப்புக்களுடனும்
இந்நாட்டின் தலைவர்களினதும் உண்மையான பௌத்த பெரும்பான்மை மக்களதும் ஆதரவினை வேண்டி
நின்றமை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு துணை போகாது என்பதற்கான
போதிய சான்றுகளாகும்.
கலாநிதி லோனா தேவராஜா குறிப்பிடுவது போன்று ஆயிரம் வருடகாலங்களாக மத சகிப்புத்தன்மையுடன்
வாழ்ந்த இலங்கை முஸ்லிம்கள் போன்ற சிருபான்மை இனத்தின் உதாரணம் எந்த நாட்டிலும் இல்லை
என்ற கருத்து இலங்கை முஸ்லிம்கள் பயங்கரவாத நடவடிக்கையில் என்றும் நம்பிக்கை வைக்கவில்லை
என்பதற்கான போதிய சான்றாகும். இத்தகைய நிலையில் பொதுபல சேனாவின் சுயநல இலாபங்கள் ஒருபுறமிருக்க
கலாநிதி ரொஹான் குணரத்னவின் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
கலாநிதி ரொஹான் குணரத்ன ஒரு எழுத்தாளராகவே இலங்கையில் காணப்பட்டதுடன் 1984 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியின்
விஞ்ஞான ஆலோசகராக கடமையாற்றியதுடன், உலகவங்கி, யூ.எஸ். எய்ட் நிறுவனங்களிலும் ஆலோசகராக கடமையாற்றினார்.
இலங்கை அரசு, இலங்கை புலனாய்வு துறையுடன் நெருங்கி செயலாற்றுபவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த
போதும் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்துவதில் இவரது
நூட்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளமையை அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானில் தலிபான்களால் பமிங்க்யான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்ட பின்னர் முஸ்லிம்
விரோத போக்கு இவரது எழுத்துக்களில் காணப்பட்டமையை அவதானிக்க முடியும். குறிப்பாக இரட்டைக்கோபுர
தாக்குதல்களின் பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கெதிரான
போர் என்ற எண்ணெய்க்கான யுத்தத்தில் அவுஸ்திரேலியாவை கூட்டணியில் உள்வாங்குவதற்கு இஸ்லாமியப்பயங்கரவாதம்
என்ற புதிய தொனியை நம்பகப்படுத்தி ஆப்கானில் கால்பதிக்க கலாநிதி ரொஹான் குணரத்ன அமெரிக்காவினால்
பயன்படுத்தப்பட்டார்.
இவரது பயங்கரவாதம் குறித்த பல்வேறு கருத்துக்களும் ஆய்வுகளும் பெரும்பாலானவை வெறும்
யூகங்க்கலாகவே அமைந்திருந்தன என்பதனை பல்வேறு இராணுவ ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
உதாரணமாக மலேசிய அரசுக்கும் பிலிப்பைனின் மோரோ இஸ்லாமிய இயக்கத்திற்கும் தொடர்பு காணப்படுவதாக
ரொஹான் குணரத்ன குறிப்பிட்ட பின்னர் தமது கருத்துக்களை மாற்றியமைத்தமையும்,
பாளி குண்டு வெடிப்பில்
சம்பந்தப்பட்ட ஹம்பாலி என்பவர் அவுஸ்த்ரேலியாவிற்கு பலதடைவகள் வந்து சென்றிருப்பதாக
தமது நூலில் குறிப்பிட்ட பின்னர் அவுஸ்திரேலிய துறை புலனாய்வினை மேற்கொண்டு மேற்படி
குணரத்னவின் கருத்து உன்மைகலற்றது என குறிப்பிட்டமையும் என பல்வேறு உதாரணங்களை விமர்சகர்கள்
முன்வைத்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் குணரத்னவின் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களின்
செயற்பாடு குறித்த கருத்துக்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக
எதிர்வரும் காலங்களில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ் வாங்கப்ப்படுமிடத்து
தெற்காசியாவில் புதிய தளங்களை உருவாக்க வேண்டியநிலையில் அமெரிக்கா உள்ளது. மாலைதீவு
தளம் அமைப்பதற்கான அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. சீன, இந்திய பிராந்திய ஆதிக்க சக்திகளை
எதிர்கொள்வதற்கு பௌதீக ரீதியில் இலங்கையைத் தவிர பொருத்தமான இடம் வேறொன்றும் இல்லை
என்பது எவரும் அறிந்த விடயம். ஆனால் கடந்த கால இலங்கை மீதான அமெரிக்க அரசின் நிலைப்பாடு
இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வினை ஏற்படுத்தி இருக்கின்றது.
2013ல் இலங்கை மீதான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான பயிற்சிகள், கரையோர பாதுகாப்பு பயிற்சிகள்
என்பன அமெரிக்க அரசினால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. என்ற போதும் சீன ஆதிக்கம்,
ரஷ்யாவின் சமகால பிராந்திய
அச்சுறுத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் அமெரிக்க சார்பு தளங்களையும் இராணுவ நிகழ்ச்சித்திட்டங்களையும்
தெற்கசியப்பிராந்தியத்தில் உருவாக்குவதற்கான அவசர தேவையாக அமைந்துள்ளது. எனவேதான் ஏற்கனவே
அமெரிக்க பின்புலத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆசிய- பசுபிக் பிராந்திய பயங்கரவாத குழுக்கள்
தொடர்பான ஆய்வு மையம் ஒன்றினை அமைப்பதுடன் அதனூடாக பிராந்திய நாடுகளுக்கு பயங்கரவாதம்
என்ற புரளிகளை கட்டவிழ்த்து அமெரிக்க ஆதிக்கத்தினை காலூண்டச் செய்வதற்கான நிகழ்ச்சி
நிரலின் அடிப்படையிலேயே தற்போது கலாநிதி குணரட்னவினால் இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில்
காலூன்ருகின்றது என்ற கருத்து திட்டமிட்டு பரப்ப படுகின்றது. சாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டதுடன்
பாக் தீவிரவாதிகள் இஸ்ரேல், அமெரிக்க தூதரகங்க்களை இந்தியாவில் வைத்து தாக்க திட்டமிட்டுள்ளனர்
என்ற கதையாடல்கள் அமெரிக்காவை இலங்கைக்குள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற போர்வையில்
சுதந்திரமாக தளம் அமைத்து செயற்பட வழியமைக்கும் முன்னேற்பாடாகவே அமைந்துள்ளது என அனுமானிக்க
முடிகின்றது.
பொதுபல சேனா அமைப்பு மியன்மாரின் தீவிரவாத குழுத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்கள்
மேற்கொண்டமையும், பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞான சேகர தேரர் ஆயுத பயிற்;சி பெற்றமையும் குறித்து ஊடகங்களில்
தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பொது பல சேனாவை ட்ரெக்; நிறுவனம் பயங்கரவாதக் குழு என பட்டியல்
படுத்தப்பட்ட நிலையிலும் கலாநிதி ரொஹான் குணரத்ன அவர்களினால் பொது பல சேனாவை பயங்கரவாத
இயக்கம் என குறிப்பிடமுடியாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கும் இலங்கை
முஸ்லிம்களுக்கும் முடிச்சுப்போட நினைப்பது சரியான பகுப்பாய்வு முறையாக அமையாது. மொனேஷ்
பல்கலைக்கழக பயங்கரவாத பகுப்பாய்வாளர் டேவிட் ரைட் நெவில்லே குறிப்பிடுவது போன்று எல்லா
புலனாய்வு மையங்களும் சமனான நம்பகத்தன்மை கொண்டவையல்ல.
குறிப்பாக தெற்காசியாவில் காணப்படும் சில புலனாய்வு அமைப்புக்கள் அதிகம் அரசியல்
மயப்படுத்தப்பட்டதாகவும், அரசின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கமைய செயற்படுபவையாகவும் அமைந்துள்ளன
என்பதிலிருந்து கலாநிதி குணரத்னவின் கூற்றையும் நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில் அவுஸ்திரேலிய
ஊடகவியலாளரும் வர்ணனையாளருமான ப்ரைன் டூஹே கலாநிதி குணரத்ன பற்றி குறிப்பிடும்போது
அடிப்படையற்ற பலவிடயங்களை அவரது வாதங்கள் கொண்டுள்ளது என குறிப்பிடுகின்றார்.
எது எவ்வாறிருந்த போதும் இலங்கை முஸ்லிகள் ஒரு போதும் பயங்கரவாதத்திற்கு துணைபோவதற்கு
தயாராக இல்லை என்பது யதார்த்தமானதாகும். அதே போன்று சமூகத்தில் சுயநலங்களுக்காக சமூகவிரோதச்செயல்களிலும்,
குற்றச்செயல்களிலும்
ஈடுபாடுடயவர்களை அவதானமாக அடயாளம் கண்டுகொள்ள முயற்சிப்பதுடன் அத்தகைய நபர்கள் தொடர்பில்
தகவல்கள் கிடைக்கப்பெறுமிடத்து பாதுகாப்புத்தரப்புக்கு தெரியப்படுத்துவதும் கடமையுமாகும்.
நன்றி :
ஜுனைட் நளீமி
www.sonakar.com
No comments:
Post a Comment