தமிழ் சமூகம் தனக்குத் தானே இழைத்துக் கொண்ட பெருந் துரோகத்தில் ஒன்றுதான் தன்னைத்
தானே காட்டிக்கொடுக்க ஆரம்பித்தது. போராடப்புறப்பட்ட பல்வேறு இயக்கங்கள் இறுதியில்
ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்ததோடு தம்மைத் தாமே அழித்துக் கொண்ட வரலாற்று வடுக்கள்
எட்டிப் பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது.
இன்று இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலை ஏறத்தாழ சம அளவில் தமிழ் சமூகம் தம்மைத்தாமே
பலவீனப்படுத்திய அதே நிலையாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
காட்டிக் கொடுப்புகளின் ஆரம்பம்
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பாரம்பரியம் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும்
எப்போதுமே ஆளுந்தரப்போடான ஒட்டுறவில் தங்கியிருக்கும் சூழ்நிலைக்கு பழக்கப்பட்டது.
எனவே ஒரு எல்லை, குறிப்பாக தமது நலன் சார் எல்லை தொடப்படும் வரை சமூகத்தின் இன்னோர் பகுதியைப்பற்றிய
கவலையற்றே அரசியல் தலைமைகளும், சமூகத் தலைமைகளும் வாழப்பழகிக்கொண்டு வருகின்றன.
தற்கால இலங்கை முஸ்லிம்கள் இரண்டு பிரிவுகளால் பல கிளைகளாக வாழ்கின்றனர். முதலாவது
அரசியல் பிரிவு : இப்பிரிவில் அவரவர் தாம் விரும்பிய கட்சிகளையும் கட்சித் தலைமைகளையும்
எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காத நிலையில் வாழப்பழகியதால் சமூக நீதி தொடர்பிலும்
மெளனமாக இருக்கப் பழகிக்கொண்டனர்.
இரண்டாவது, மார்க்கப் பிளவு: இதுவே இலங்கை முஸ்லிம்களை மிக ஆழமாக பிரித்து வைத்திருக்கும்
பலவீனப்படுத்தியிருக்கும் தற்காலத்தின் பிரதான காரணியாக இருக்கிறது.
இந்த மார்க்கப் பிளவுகளால் ஆரம்பித்த காட்டிக் கொடுப்புகள் தான் இன்றைய சூழ்நிலையை
முஸ்லிம்களை அடியோடு பலவீனப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
இன்றைய சூழ்நிலையில் இலங்கை தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிரிந்து தனியாக இயங்கும்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரும் இளமையும் வேகமும் சமூகத்தின் ஏனைய பகுதியினால் “அடங்காப்பிடாறி”த் தனமாக பார்க்கப்படுவதை
மறுத்தோ மறைத்தோ உரையாடுவதில் பலனில்லை.
ஜனநாயக சோசலிஷ குடியரசொன்றின் பிரஜைகளாகத் தமது அனைத்து உரிமைகளுக்கும் போராடும்
அத்தனை உரிமைகளும் தகுதிகளும் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கிறது என்பதை
யாரும் மறுதலிக்கவில்லையாகினும் அமைப்பை முற்படுத்தி அவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால்
ஏனைய அமைப்புகள் தம்மைத் தூரப்படுத்திக்கொள்கின்றன.
இவ்வாறு தூரப்படுத்திக்கொள்ளும் அமைப்புகளும் துரதிஷ்டவசமாக தமது அமைப்பின் இருப்பைப்
பாதுகாத்துக்கொள்ளவே தூரப்படுத்திக்கொள்கின்றன எனும் உண்மையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
தரீக்கா அமைப்புகள்
நவீனத்துவம் பற்றிப் பேசக் கிளம்பியதோடு நிற்காத அமைப்புகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக
நொந்து கொள்ளும் அமைப்பு இலங்கையில் வாழும் தரீக்கா சார் சமூகமாகவும் அவர்களைப் பொறுத்தவரையில்
ஆளுந்தரப்பின் ஆதரவும் அரவணைப்புமே அவர்களது இருப்பை பாதுகாக்கும் என்பதே கள யதார்த்தமாக
கருதுவதால் ஆட்சியாளர்களை சுற்றித் தம் பிரசன்னத்தை வெகுவாக வளர்த்திருக்கிறார்கள்.
எனவே அவர்கள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் அன்னிய பழக்கவழக்கங்களை இலங்கைக்குள் புகுத்தும்
செயற்பாட்டாளர்களாகவே ஆட்சியாளர்கள் கண்களுக்கும் தெரிகிறார்கள்.
ஜமாத் ஏ இஸ்லாமி
ஜமாத்தே இஸ்லாமி அமைப்பைப் பொறுத்தவரை இலங்கை மண்ணில் ஒரு அமைப்பாக செயற்பட்ட
போதும் இலங்கை சமூகத்தின் அரசியல் நிலைப்பாட்டை வெளிநாட்டு விளைவுகளோடு தொடர்பு
படுத்தி அவர்கள் எண்ணங்களை எப்போதுமே சொந்த மண்ணின் அரசியலோடு கலக்க விடாமல் வைத்திருப்பதில்
மிகக் கெட்டித்தனமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறார்கள்.
தப்லீக் ஜமாஅத்
அன்றாட வாழ்வியலின் இஸ்லாம் பற்றிய சிந்தனையோடு வெளிநாட்டு கலாச்சார இறக்குமதியிலும்
கவனம் செலுத்தி வரும் தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்தவரை தரீக்கா நிலைப்பாடுகளிலிருந்து
விடுபட்ட மக்களின் ஏகோபித்த அடுத்த தெரிவாக இயல்பானதும் சாதாரணமானதுமான இஸ்லாமிய வழி
காட்டிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டதோடு முடிந்தளவு உயர் பதவிகளின் பயனால் ஆட்சியாளர்களை
நம்பி வாழ்பவர்களான தலைமைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இப்படி பிரதான ஜமாத்துகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணிச் செயற்பாடு இருக்க இதன்
வெற்றிடத்தில் புகுந்து கொள்ளும் அரசியலானது தத்தம் வசதிக்கேற்ப பிரதேச வாரியாகவும்
கட்சியடிப்படையிலும் முஸ்லிம்களை சர்வசாதாரணமாக பிரித்து வைத்திருக்கிறது.
இப்படியே வாழப் பழகிக்கொண்ட முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் பிரதான சவால்
கடந்த காலத்தில் ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்ததன் விளைவிலிருந்தே ஆரம்பிக்கிறது.
தரீக்கா காரர்களுக்கும் தவ்ஹீத் காரர்களுக்கும், தவ்ஹீத்தாருக்கும் ஜமாத்தே இஸ்லாமிக்கும்,
ஜமாத்தே இஸ்லாமிக்கும்
தப்லீக்குக்கும் என்றும் மீண்டும் சுழற்சியடைப்படையில் குறுக்குப் போட்டிகளும் இடம்பெற்ற
போதெல்லாம் எமது சமூகம் என்ன செய்தது என்பதிலிருந்து இன்றைய அவல நிலைக்கான விடை கிடைக்கிறது.
அதுதான் அவ்வப்போது எமக்கிடையில் தொடர்ந்து வந்த காட்டிக் கொடுப்புகள்.
இந்தக் காட்டிக்கொடுப்புகளின் விளைவில் நாம் விட்டுச் சென்ற ஆதாரங்கள் இன்று நமக்கெதிராகக்
கிளம்பியிருக்கும் நிலையில் நமது அரசியல் தலைமைகளும் ஒரு சமூகமாக நாமும் கூட மெளனித்து
இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
எனவே, நமக்கெதிராக
இயங்குவோரிடம் நாம் ஏற்கனவே சான்றுகளைத் தெளிவாக வழங்கியிருக்கிறோம் எனும் உண்மைகளை
உணர்ந்தவர்களாக எதிர்காலத்தை எதிர் நோக்கும் தேவை நமக்கிருக்கிறது.
இனியும் இவ்வாறு கூறாகிப் பிரிந்து எமது எதிர்காலத்தைத் தொலைக்கப் போகிறோமா
அல்லது இந்த அமைப்புப் பிளவுகளுக்கு முடிவு கட்டப் போகிறோமா என்பதை சிந்திக்கும்
காலமிது!
நன்றி. மானா(ww.sonakar.com)
No comments:
Post a Comment