Thursday, May 1, 2014

மக்கள் சக்தியைத் திரட்டி சமூக மாற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகிறோம் - அநுர குமார திஸாநாயக


* மக்கள் விடுதலை முன்னணியை எவ்வாறு சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம்?

மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டின் மாற்று அரசியல் தளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இந்த நாட்டிலுள்ள பிரதான இரு கட்சிகளும் இந்த நாட்டை 68 வருடங்களாக ஆட்சி செய்துள்ளன. இந்த இரு கட்சிகளும் முதலாளித்துவக் கட்சிகள். எனவே, எமது நாட்டுக்கு சமூகமாற்ற மொன்றின் தேவை இருந்தது. எனவே தான், 1965 மே 17 ஆம் திகதி தோழர் ரோஹன விஜேவீர இந்தக் கட்சியை ஸ்தாபித்தார்.

எமது பயணத்தில் முதலாளித்துவ வர்க்கம் எமக்கெதிராக இரண்டு பாரிய படுகொலைகளை நிகழ்த்தியது. 1971 இல் எமக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் போது 20,000க்கும் மேற்பட்ட எமது தோழர்கள் கொல்லப்பட்டனர். எமது கட்சியின் ஸ்தாபகர் ரோஹன விஜே வீரவுக்கு ஆயுட்கால சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

மீண்டும் 1976 இல் நாம் ஜனநாயக அரசியலுக்கு வந்தோம். இருப்பினும், 1983 ஆம் ஆண்டு எமது கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, பாதாள உலகத்தினரைப் பயன்படுத்தி யுத்த சூழ்நிலையொன்றை ஏற்படுத்தி, கறுப்பு ஜூலையை உருவாக்கி, நாமே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனச் சொல்லி எமது கட்சியைத் தடை செய்தனர். இந்தத் தடைகளுக்குள்ளாலும் நாம் அரசியல் செய்து வந்தோம்.

1988, 1989 காலப் பகுதியில் எமது கட்சியின் ஸ்தாபகர் உட்பட 60,000 க்கும் மேற்பட்ட தோழர்கள் கொலை செய்யப்பட்டனர். இத்தோடு மக்கள் விடுதலை முன்னணி இல்லாதுபோய் விடும் என்றே அவர்கள் நினைத்தனர். ஆனால், மீண்டும் 1994 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக அரசியல் தளத்துக்கு வந்து, இந்த நாட்டின் அரசியல் போக்கில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகின்றது.

*சர்வதேச ரீதியாக உள்ள கம்யூனிஸம் பற்றிய கருத்துக்களோடு பார்க்கும்போது, மக்கள் விடுதலை முன்னணி மதங்களுக்கு எதிரான ஒரு கட்சி என்ற கருத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ளது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

எமது நாட்டைப் பொருத்தவரையில், தோழர் ரோஹன விஜே வீர செய்த மிக முக்கியமான பணி, இலங்கை மண்ணுக்கேற்றவாறு மார்க்ஸிஸத்தை வடிவமைத்ததுதான். ரஷ்யாவின் பாதணிகள் எமக்கு பெரிதாக உள்ளதாகவும், சீனாவின் பாதணிகள் எமக்கு சிறியதாக உள்ளதாகவும் சொல்லி, எமக்கேற்ற பாதணிகளை நாம் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். எனவே, ஐரோப்பாவிலோ அல்லது உலகில் வேறெங்கிலுமோ உள்ள மார்க்ஸிஸம் போன்றல்லாது, இலங்கை மண்ணுக்கேற்ற வகையில் மார்க்ஸிஸத்தை அவர் வடிவமைத்தார்.

எமது நாட்டில் நான்கு பிராதான மதங்கள் இருக்கின்றன. அந்த மதங்கள் சகவாழ்வை ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே, மதங்களின் உரிமையை நாம் ஏற்றுக் கொள்கிறோம், தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அவ்வாறே, எந்தவொரு மதத்தையும் உயர்ந்ததாகவோ தாழ்ந் தாகவோ நாம் கருதுவதில்லை. அவ்வாறே, மதங்களை நடத்திச் செல்லும் பொறுப்பு குறித்த மதங்களின் மதகுருக்களுக்குரிய செயல். அதனை அரசியலோடு இணைக்க முடியாது. எனவே, முழுமையான மத சுதந்திரம் ஏற்படுவது மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சியின் கீழ்தான்.

இன்று மதத்தின் போர்வையில், அதனை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். அரசியல் தேவைகளுக்காக சிலபோது சிங்கள இனவாதமும், பௌத்த தனித்துவமும், இந்து தனித்துவமும் முன்வந்து செல்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி அனைத்து மதங்களுக்குமான சமமான உரிமையை ஏற்றுக் கொள்கின்ற, அனைத்து மதங்களையும் வழி நடத்திச் செல்வதற்கு அதன் மத குருமாருக்கு இருக்கின்ற உரிமையை ஏற்றுக்கொள்கின்ற, அதற்காக அரச அனுசரணையை வழங்குகின்ற தெளிவானதொரு நிலைப் பாட்டைக் கொண்டிருக்கின்றது.

என்றாலும், மக்கள் விடுதலை முன்னணி பற்றி எம்மை அணுகி தெரிந்து கொள்ளாமையினாலும், மக்கள் விடுதலை முன்னணியின் எதிரிகள் பரப்பி விட்டிருக்கின்ற தகவல்களினாலும் தான் முஸ்லிம்கள் மத்தியில் இந்தக் கருத்து ஓரளவு இருக்கின்றது. மதங்களுக்கு எதிரான நிலைப் பாட்டைக் கொண்டிருத்தல் என்பது எமது நிலைப்பாடல்ல. அது எமது எதிரிகள் எம்மீது கட்ட விழ்த்து விட்டுள்ள பொய்யான செய்திகளாகும்.

* புரட்சிகள் மூலம் தான் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றுதானா நம்புகிறீர்கள்?

இல்லை, சமூக மாற்றம் மூலம் தான் அது சாத்தியம் என்று நாம் கருதுகிறோம். 1965 இல் சமூக மாற்றத்தை மையப்படுத்தியே எமது கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. மக்களை விழிப்பூட்டி, இளைஞர் அமைப்புக்களை பலப்படுத்திக் கொண்டு வரும்போது, அச்சம் கொண்ட முதலாளித்துவ கட்சிகள் எம்மீது அடக்குமுறையைப் பிரயோகித்தன. இதன்போது, இரண்டு தெரிவுகள்தான் எம்முன்னிருந்தன. ஒன்று, அரசியலை விட்டும் ஒதுங்குதல். மற்றையது, அடக்குமுறையை எதிர்த்து நிற்பது. இதில் சரியான தெரிவை நாம் எடுத்தோம். அடக்குமுறையை எதிர்ப்பதற்காக ஆயுத ரீதியான முன்னெடுப்பை கைக்கொள்ள வேண்டும் என்று கட்சி தீர்மானித்தது.

மீண்டும் 1976 இற்குப் பின்னர் அரசியல் செயற்பாட்டில் இறங்கிய நாம், 1978 இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டோம். 1980 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டோம். 1981 இல் நடைபெற்ற அபிவிருத்தி சபை தேர்தலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்தது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அதில் போட்டியிட்டது. எனவே, இந்த நாட்டின் ஜனநாயக அரசியலில் பங்கெடுக்கின்றதொரு கட்சி நாம்.

ஆனால், 1983 இல் ஜே.ஆர். ஜெயவர்தன மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தார். தடை செய்தது மட்டுமல்லாது எம்மீது அடக்குமுறையைப் பிரயோகித்தார். அப்போதும் நான் ஏற்கனவே சொன்ன இரு தெரிவுகள் தான் எம்முன்னே இருந்தன. ஒன்றில், அரசியலை விட்டும் ஒதுங்க வேண்டும். அல்லது, ஆயுத ரீதியான வழிமுறையைக் கையாள வேண்டும். பின்னர், அவர் இந்தியப் படைகளையும் இங்கு அழைத்து வந்தார். ஆயுத ரீதியான போராட்டம் எமது தெரிவல்ல. முதலாளித்துவ வர்க்கம் எம்மீது திணித்த தெரிவுதான் அது.

வரலாற்றில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினைகள் பெற்றது போன்று, முதலாளித்துவ வர்க்கம் படிப்பினைகள் பெற்றுள்ளன. எனவே, மீண்டும் எம்மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க முதலாளித்துவ வர்க்கத்துக்கு முடியாது.

எனவே, இனியும் இலங்கையில் ஆயுத ரீதியான அரசியல் போராட்டமொன்று செல்லுபடியாகாது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம்- மக்களை தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள் மூலம் ஒன்றுதிரட்டி மாபெரும் மக்கள் சக்தியொன்றை திரட்டி சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே நினைக்கின்றோம்.

* மக்கள் விடுதலை முன்னணி சுமார் 50 ஆண்டுகளாக செயற்படுகின்றது. ஆனால், மக்கள் விடுதலை முன்னிணியின் சிந்தனை இன்னும் மக்கள்மயப்பட வில்லையே!?

மக்கள் விடுதலை முன்னணியின் சிந்தனையை நாம் மிக வேகமாக மக்களை நோக்கிக் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றோம். ஆட்சியைக் கவிழ்த்து விட்டு இன்னுமொரு ஆட்சியைக் கொண்டு வருவது இலகுவான விடயம். ஏனென்றால், நல்லதொரு விடயத்துக்குப் பகரமாக மோசமான தொரு விடயத்தை வழங்குவது இலகுவானது. மோசமானதொரு விடயத்துக்கு பகரமாக இன்னுமொரு மோசமான விடயத்தை வழங்குவதும் இலகுவானது. ஆனால், மிகவும் மோசமான ஒரு விடயத்துக்குப் பகரமாக நல்லதொரு விடயத்தை வழங்குவது கடினமானது. எமது நாட்டில் இப்போதிருப்பது மிகவும் மோசமான நிலையொன்றாகும்.

இந்த நாட்டுக்கு நல்லதொரு விடயத்தை வழங்க வேண்டும். அது ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பது மாத்திரமல்ல. எமக்கு சிறந்ததொரு சமூக மாற்றம் அவசி யமாயுள்ளது. சமூக மாற்றமொன்றை செய்வது இலகுவானதல்ல. ஏனென்றால், தற்போதுள்ள சமூக முறைமையை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே அனைத்து வகையான ஒழுங்குகளும் கட்டி யெழுப்பப்பட்டுள்ளன.

கல்வித் துறையைப் பாருங்கள். போட்டி போட்டுப் படித்து பொறியியலாளராகவோ வைத்தியராகவோ உருவாகி கரை சேர்ந்து கொள்ள வேண்டுமென்றே எமது உறவுகள் எம்மைத் தூண்டுகின்றன. இந்த சமூக முறைமையில் உள்ள அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அவர்கள் எம்மைத் தூண்டுவதில்லை. நீங்கள் சமூக மாற்றத்துக்காக சிறந்த முறையில் உழைக்கிறீர்கள் என்று நண்பர்கள் சொல்வதுமில்லை. இந்த வேலைகள் போதும், இனி தொழிலொன்றை செய்து கொள் என்றுதான் நண்பர்கள் சொல்வார்கள்.

முழு மொத்த சமூகமும் தற்போதிருக்கும் சமூக முறைமை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான போக்கிலேயே இருக்கின்றது. சிந்தனைகள், கலாசாரம், சினிமா, கலை, கல்வி, மக்களின் எண்ணங்கள் என அனைத்தும் இந்த முதலாளித்துவத்தின் இருப்புக்காக இருக்கின்றன. இவற்றுக்கு எதிராக சிந்தனை ரீதியாகப் போராடுவதே எமது பணி. இந்தப் பணி ஆட்சியைக் கவிழ்ப்பது போன்றோ, ஒரு தலைவருக்குப் பதிலாக இன்னுமொரு தலைவரைக் கொண்டு வருவது போன்றோ இலகுவானதொரு காரிய மல்ல.

* மக்கள் விடுதலை முன்னணி பெரும்பான்மை சமூகத்துக்குள் போயுள்ள அளவுக்கு சிறுபான்மை சமூகங்களுக்குள் போயில்லையே!?

தமிழ் மொழி பேசுபவர்களுடனான கருத்தாடலை ஏற்படுத்துவதற்கு, எமது அரசியல் பயணத்தில் நாம் முயற்சிக்கிறோம்.

இரு மொழிகளிலும் செயற்படும் ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணிதான். நாம் ஒரு கோஷத்தை எழுதினால் அதனை இரு மொழிகளிலும் எழுதுவோம். ஒரு கடிதத்தை எழுதினால் இரு மொழிகளிலும் அதை எழுதுவோம். எமது பிரதான கூட்டங்களில் இரு மொழிகளிலும் பேசுவோம். தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம்களுக்கு மத்தியில் செயற்படுவதற்கு முழு முயற்சியையும் நாம் மேற்கொள்கிறோம்.

ஆனால், 1983 இற்குப் பின்னர், தமிழர்களுடனான கருத்தாடல் வித்தியசமானதொரு தளத்துக்குச் சென்றது. முஸ்லிம் கருத்தாடல் வேறொரிடத்தில் மறைந்திருந்தது. எனவே, தேவையானளவு கருத்தாடலை ஏற்படுத்த எம்மால் முடியாமல் போனது. ஆனால், இந்த முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில், குறிப்பாக முஸ்லிம்களுடன் நாம் கலந்து ரையாடல்களை நடத்தினோம்.

வெலிகமை, களுத்தரை, தர்கா டவுன், மதுகமை, புதுக்கடை போன்ற இடங்களில் முஸ்லிம்க ளுடன் நாம் பெருமளவிலான கலந்துரையாடல்களை நடத்தினோம்.

எமது கூட்டங்களுக்கு வந்த அனைத்து முஸ்லிம்களும் வாக்களித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், முஸ்லிம்கள் முதற் தடைவையாக எங்களுக்கு செவிமடுக்கத் தொடங்கியுள்ளார்கள். எம்மை முஸ்லிம்கள் வரவேற்றார்கள். நாம் யார் என்பதை முஸ்லிம்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இது போதாது. இதனை இன்னும் அதி கரிப்பதற்கு நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

* இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு. இந்தப் பன்மைத்துவத்தை பாதிக்கச் செய்யும் விடயங்கள் என்ன?

இலங்கை ஒரு பல்லின நாடு என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலே இனத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்போது வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்பது முக்கியமில்லை. இந்த நாட்டில் பிறக்கின்ற, இந்த நாட்டில் வாழ்கின்ற, இந்த நாட்டில் மரணித்து இந்த மண்ணுக்கு உரமாகும் பிரதான இனங்கள் இவை.
இந்த நாட்டில் தேசிய ஒற்றுமை வர வேண்டும். ஆனால், இதுவரை நடந்த ஆட்சிகள் இனங்களுக்கிடையில் இடைவெளியையும் சந்தேகத்தையும் நம்பீக்கையீனத்தையும் அதிகரிக்கவே முயற்சித்தன. சிலபோது சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாதங்கள் முன்னெழுந்து வருகின்றன. இந்த நாட்டில் அனைத்து இனவாதங்களையும் எதிர்க்கின்ற கட்சி மக்கள் விடுதலை முன்னணியே.

* அரச தரப்பினரை பகிரங்கமாக விமர்சிக்கீறீர்கள். பயமில்லையா?

இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதற்காகவே நாம் செயற்படுகிறோம். நான் என்பது நான் மட்டு மல்ல. எனக்குப் பின்னால் ஒரு கட்சி இருக்கின்றது. அந்தக் கட்சியின் பலம், தைரியம்தான் எம்மை விழிப்பூட்டியிருக்கின்றது.

* அப்படியாயின், பயமில்லை என்று சொல்கிறீர்கள்?

ஆம், எந்தவொரு பயமும் இல்லை. நாம் ராஜபக்ஷ மஹத்தயாவுக்கு கடனில்லை. ராஜபக்ஷ தான் எமக்குக் கடன். அவருடன் எங்களுக்கு பெரியளவிலான கொடுக்கல் வாங்கல்கள் இல்லை. எமக்கு அவருடன் ஒரு கொடுக்கல் வாங்கல்தான் இருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், நாம் அதனை எதிர்க்கிறோம். இதுதான் எமது கொடுக்கல் வாங்கல். ஆனால், ஏனையோர் பயந்துபோவதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில், அவர்களுக்கு கொடுக்கல் வாங்கல்கள் இருக்கின்றன.

நன்றி. meelparvai 
நேர்காணல்- அஷ்கர் தஸ்லீம்

1 comment:

  1. நல்ல புதிய நல்லது

    நான் என் திருமதி மிராபெ டேனியல்ஸ் ஒரு நம்பகமான மற்றும் முறையான கடன் கடன் உள்ளது.
    2% வட்டி விகிதத்துடன் உண்மையான மற்றும் சுலபமான நிபந்தனைகளை நாங்கள் வழங்குகிறோம். இருந்து
    $ 1,000 - $ 100,000. யூரோ மற்றும் பவுண்ட். தொழில்முயற்சியாளர்களுக்கும் நான் கடன்களை வழங்குகிறேன்:

    தனிப்பட்ட கடன்,
    மாணவர் கடன்கள்,
    போக்குவரத்து கடன்
    வணிக கடன்கள்.
    நிறுவனத்தின் கடன்கள்

    மேலும் தகவலுக்கு நேரடியாக என்னை தொடர்பு கொள்ளவும்.
    மின்னஞ்சல்: mirabeldanielloanfirm@gmail.com

    ReplyDelete